கர்ணபரம்பரை
(ஆஸ்திரேலியாவில் வெள்ளையர்கள் குடிபோவதற்கு முன், அந்த மண்ணைச் சேர்ந்த பழங்குடி மக்களான “அபரிஜின்கள்” வாழ்ந்து வந்தனர். வெள்ளையர்கள் அங்கு போன பிறகு, இந்தப் பழங்குடியினரையும் தமக்கு வேலை செய்யும் ஆட்களாகச் சேர்த்துக்கொண்டனர். இதில் சில அபரிஜின்களுக்கும் வெள்ளையர்களுக்கும் பிறந்த குழந்தைகளை “அரைஜாதி” (Half Cast) என குறிப்பிட்டனர். இந்தக் குழந்தைகளை வளரவிட்டால் இன்னொரு புதிய ஜாதி உருவாகும் என்பதற்காக அரசாங்கமே இவர்களைப் பெற்றோர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து விடுதியில் வைத்துப் பராமரித்தனர்.) – பத்திரிக்கைச் செய்தி
திடீர் வேலை நிறுத்தத்தால், தத்தளிக்கத் தொடங்கிய நேரமது, என் மனமும் பேங்க் பேலன்ஸும்!
“என் பேத்திக்கி கொஞ்சம் படிச்சுத்தாயேன் ஆயா... ஏதோ கையில கெடைச்சத தாரேன்..”
எப்போதாவது பார்த்தால் சிரிக்க மட்டுமே செய்யும் கீரை விற்கும் பாட்டியம்மாதான் கேட்டார்!
சரி! ஒன்று இரண்டாகும், இரண்டு பலவாகும் என்று ஒரு திடீர் பொருளாதாரக் கணக்குப் போட்டு, அந்தப் பாட்டியின் பேத்திக்கு டியூசன் தர ஒப்புக்கொண்டேன்.
என் வீட்டுக்கு வர நான் யாரையும் அனுமதிப்பதில்லை! எல்லாமே “ஹோம் டியூசன்” தான்.
தியாகேஸ்வரிக்கு நான் டியூசன் சொல்லிக் கொடுக்கப் போனதுக்கப்புறம்தான் தெரியும், அந்த சிறுமி பள்ளிக்கே போனதில்லை என்பது!
“ஏன்மா... இந்தப் பிள்ளைய ஸ்கூலுக்கு அனுப்பல....?”
“ஆ..? ஆ..ஆங்...! என்னமோ அனுப்பலப் போ...! எனக்கும் உடம்புக்கு முடியல..! ஓண்டிப் பொம்பள நான். எதுக்குன்னு அலையிறது... யாருக்குன்னு அலையிறது...?
அவர் என்ன தான் சொல்ல வந்தார் என்பது கொஞ்சமும் புரியவில்லை எனக்கு! அவருக்கு உடம்புக்க் முடியாமல் போவதற்கும், இந்தப் பிள்ளை பள்ளிக்கு போகாததற்கும், எப்படி மூளையைக் கசக்கி பிழிந்தாலும், சம்பந்தம் என்ன என்று கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆனால் அதற்கு மேல் பேச விருப்பப்படாதவராய் அவை வாயை மூடிக் கொண்டார்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக அந்த வீட்டுக்குப் போய், அவளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த அனுபவத்தில் தியாகேஸ்வரியையும், அவள் பாட்டியையும் தவிர, வேறு யாரையும் கண்டதில்லை அங்கு!
“அப்பாவும் அம்மாவும் வேற வீட்டுல இருக்காங்க... தூரமா...”
“சரி! உன்னைப் பார்க்க வருவாங்களா...?”
“ம்..”
“மறுபடியும் வந்தா சொல்லு. நானும் அவங்களைப் பார்க்கணும்..”
“ம்..”
இதுநாள் வரை, அவள் அப்பாவையும் அம்மாவையும் காணக் கிடைக்காத பாவியாக நின்ற நேரத்தில், இன்று, ஏறக்குறைய ஒரு இரண்டு மணி நேரங்களுக்கு முன்னர்தான் பாட்டியம்மாவின் மகனைப் பார்க்க நேர்ந்தது!
ஏற இறங்க என்னைப் பார்த்தவனிடம், “என் டீச்சர்..” என்று சிறுமிதான் அறிமுகப்படுத்தினாள்!
எடுத்தவுடன் அப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று நான் நினக்கவேயில்லை!
“இதெல்லாம் என்னத்த படிச்சுக் கிழிக்கப் போவுதுன்னு, வேலை மெனக்கெட்டு இவ்வளவு தூரம் வர்ரீங்க...? செய்ய வேற வேல இல்லையா...?”
ஓங்கி விழுந்த அறையை, சரியாக மூஞ்சிலேயே வாங்கிக்கொண்டது போல, விக்கித்துப் போனேன் நான்!
ஆனால், எட்டு வயதுப் பிள்ளையை இன்னமும் பள்ளியில் சேர்க்க அக்கறைப்படாத ஒரு அப்பன், வேறு என்னதான் பேசிவிட முடியும், இதை விடவும் நல்லதாய்...உருப்படியாய்..?
“ஏன இந்தப் பிள்ளைய பள்ளிக்கூடத்துல சேர்க்காம வைச்சிருக்கீங்க?”
நான் சும்மா இருந்தாலும் என் சுழி சும்மா இருப்பதில்லை!
ஒரு சிறுமியின் கல்விக்காக அந்நியன் ஒருவனிடம் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்டேன்..!
“நாங்களா சேர்த்துவிட மாட்டேங்குறோம்..? அவனுங்க சேர்த்துக்க மாட்டேன்னுட்டானுங்க....”
“யாரு...?”
“ஸ்கூலு பெரிய வாத்தியாந்தான்...!”
“ஏன்..?”
ஆச்சரியமும், அதிசயமாகவும் இருந்தது, அவனுடைய பதில்கள்!
“ஏன்..னா...பொறந்த சூறா இல்லையாம்... அது தான்...!”
“எட்டு வயசாச்சு.... இன்னமுமா பொறந்த சூறா எடுக்காம இருக்கீங்க நீங்க...”
“நான் எதுக்கு எடுக்க...?”
“அப்பா தானேங்க... பிள்ளைக்கி பொறந்த சூறா எடுக்கணும்...”
“அதைத்தானங்க... நானும் சொல்றேன். அதோட அப்பா தான் அதுக்கு பொறந்த சூறா எடுக்கனும்! நான் எதுக்கு எடுக்கனும்..?”
இந்த ஆள் என்ன சொல்ல வருகிறான்?
“டேய்.. வெறும் பேச்சு லவடா... போயி ஒன் வேலையப் பாருடா...! வந்துட்டான்....இப்பத்தான் ஞாய அநியாயம் பேச...”
கிழவி எப்பொழுது வந்தாரோ தெரியவில்லை! மகனின் வாயை பட்டென்று தன் வீரியமான வார்த்தைகளால் அடைத்துவிட்டு, சட்டென்று என்னை ஒரு பார்வை பார்த்தார்.
“இந்தா... நீ பிள்ளைக்கி பாடஞ் சொல்லிக் குடுக்க வந்தியா...? இல்ல, என் வீட்டுக் கதையக் கேட்க வந்தியா?” என்பது போல இருந்தது அந்தப் பார்வை!
வாயை மூடிக்கொண்டு என் வேலையை முடித்துவிட்டு கிளம்ப எத்தனிக்கும் நேரத்தில், கிழவி என் பக்கத்தில் வந்து நின்றார்!
“ஆயா...! அவன் ரொம்பப் பொல்லாதவன்யா...! அவன்கிட்ட நீ இனி பேச்சுக் குடுக்காத..!”
“சரி..!”
பேச்சை இத்தனை சுருக்கமாய் முடித்துக் கொள்வேன் என்று நினக்கவில்லைப் போலும் அவர்! ஒரு நிமிடம் என் முகத்தைப் பார்த்தவர், தியாகேஸ்வரியை இழுத்து அவள் முடியைக் கோதிவிட்டார்! அதே விரல்கள் அவள் முதுகையும் அன்பாய் வருடிவிட்டது. பின், அவளை வெளியே போய் விளையாடச் சொன்னார்.
அவருக்கு என்னிடம் பேச ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்து, சற்றுத் தாமதித்தேன்.
ஆனால், வார்த்தை இழந்த பக்கவாத நோயாளியைப் போல் வாயை சிலமுறை திறந்து திறந்து மூடினார்.
நிஜமாகவே இவர் பேச மறந்து விட்டாரா என்ன..!
“பொம்பளை தானாக் கெட்டுப் போறது இல்ல... ஆயா! எவனோ ஒரு ஆம்பளையாளதான்..!”
எடுத்த எடுப்பில் பெரிய விஷயமாக, அதுவும் தலையும் காலும் இல்லாமல் ஆரம்பித்தால், நான் என்ன பேச முடியும்?
மௌனமாய் அவர் முகத்தைப் பார்த்தேன்!
“வந்துட்டுப் போனது என் மகன்தான்! சின்ன வயசிலயே வீட்டுக்கு அடங்காத போயி கெட்டு நொந்து போனவன். கையில கஞ்சா இல்லாம பொழுது விடியாது அவனுக்கு.! இந்தப் பயலுக்கும் கூட ஒருத்தின்னு கடவுள் முடிச்சுப் போட்டு வைச்சிருந்தாரு போல..! இவன நம்பி வீட்டை விட்டு ஓடியாந்துட்டா அவ! ரெண்டு பிள்ளை பொறக்கிற வரைக்கும் அவ நல்ல பிள்ளையாத்தான் இருந்தா! அப்புறம் அவளையும் கெடுத்து குட்டிச் சொவராக்கிட்டான் இந்தப் பய..”!
கூரையில் யாரோ உட்கார்ந்து கொண்டு “ம்”.. கொட்டிக் கேட்பதாய் உணர்ந்தாரோ என்னவோ, அவர் பார்வை அங்கேதான் இருந்தது!
“அவளையும் கஞ்சா குடிக்கப் பழக்கிவிட்டுட்டான்! அவன் குடுக்குற சிகரெட்ட, அவ கையில புடிக்கலன்னாவே அடிதான்... ஒதைதான்.. !
அடியும் ஒதையும் தாங்காம, நல்லப் பிள்ளை அவளும் பாதி கெட்டுப் போனா! இந்தக் கம்மனாட்டி ஏன் அவள இந்தப்பாடு படுத்தறான்னு, நான் கூட சண்டை புடிச்சிருக்கேன் அவன் கூட!
ஆனா... அப்புறந்தான் தெரியும், கஞ்சா விக்கிறவங்க, கஞ்சா குடிக்கிறவங்களாவும் இருந்தா, போலீசுல புடிபட்டா குறைச்ச தண்டனைதான் குடுப்பாங்கன்னு..”
என்னுடைய இத்தனை வயதுக்கு இது புது தகவலாக இருந்தது!
பாட்டியம்மாவிடம் யாரும் தவறான தகவல் தந்தார்களோ என்னவோ..!
“ரெண்டு பேரும் கஞ்சா குடுச்சி... கஞ்சா வித்து... அடிக்கடி போலீஸ்காரன் வந்து இதுங்களை புடிச்சிக்கிட்ட்டு போறதுன்னு, வீட்டையே அதம் பண்ணிக்கிட்டு இருந்திச்சிங்க..! இந்த லட்சணத்துலயும் ரெண்டு பிள்ள நாலா ஆயுடுச்சி..!”
கிழவியின் கண்களில் பழைய சம்பவங்களின் வெறுப்பு அப்பட்டமாய்த் தெரிந்தது.
“திடீர்னு ஒரு நாளு... அவள, அதான் என் மருமவள, நாடு கடத்திட்டதா சொன்னாங்க. ஒரு வருசமோ, ஒன்றரை வருசமோ.... அந்த எளவெல்லாம் யாருக்கு ஞாபகத்துல இருக்கு போ.... அங்கன இருந்துட்டு... தண்டனை முடிஞ்சு வர்ரா மவராசி... கையில ஒரு பச்சப் புள்ளையோட...!”
எதுவும் புரியாமல் சந்தேகத்தோடு நோக்கிய என் பார்வையை சந்திப்பதில் இருந்தும் தவிர்த்து விட்டு கிழவி தொடர்ந்தாள்.
“அவ அங்கன இருந்த நேரத்துல யாரோடயோ தொடர்பாயிருச்சு! வயித்துல வாங்கிட்டா..! அதுதான் இந்தாக் கெடக்காளே.... அந்தப் புள்ள...!”
காதலனை நம்பி வயிற்றில் சுமையேற்றிக் கொள்ளும் எத்தனையோ பெண்களின் கதையைக் காதில் வாங்கியிருந்த போதிலும், இது புதிதாக இருந்தது எனக்கு!
கணவனை இனி காணப்போவதில்லை என்ற இறுதி முடிவில், அங்கேயே ஒரு துணை தேடினாளா..? அல்லது போதையின் வாதையில் அந்தப் பேதை தடம் மாறிப் போனாளா...?
“நீயே சொல்லு ஞாயத்த...இந்தப் பய மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா அப்படியாயிருக்குமா அவ நெலம? பொண்டாட்டிய வைச்சி ஒழுங்கா வாழ்றதுக்கு துப்புக் கெட்டுப்போயி, அவளை கஞ்சா விக்கிறதுக்கு அனுப்பி, ஜெயிலுக்கும் அனுப்பி, அவ பொழப்ப சீரழிச்சி, சிரிப்பா சிரிக்க வச்சுப்புட்டான்...”
“பொம்பள கெடுறது ஒரு ஆம்பளையாளத்தான்..” என்று பாட்டியம்மா முன்னுரை கொடுத்ததன் அர்த்தம் விளங்கிப் போக பேச்சற்று நின்றிருந்தேன்!
“அந்த நல்லவ, நாலோட அஞ்சா இருக்கட்டுமுன்னு, இவளையும் பெத்துத் தூக்கியாந்துட்டா..! எங்க தூக்கி வீசட்டும் நான்...இந்தப் பச்ச மண்ண..?”
கறுத்து சுருங்கிப்போன கை விரல்களை நீவி விட்டுக் கொண்டே, தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தார். மன வலிக்கு கை விரல்களை நீவி விட்டால் தீர்ந்து விடுமா என்ன?
“என் புள்ள எமனையே பலகாரம் சுட்டுத் தின்கிற தந்திரக்காரன்! எப்படிப்பட்டவளா இருந்தாலும் பொண்டாட்டிக்காரி மட்டும் தனக்கு வேணும்னுட்டான்...! ஏன்னு கேளு...”
“ஏன்..?”
“ம்..? தலகாலு தெரியாம கஞ்சாவ இழுத்துக்கிட்டு வந்து சுருண்டுட்டு கெடக்கும் போது, அவ போவால்ல கஞ்சா விக்கிறதுக்கு, அதுக்குத்தான்! யாராவது விக்கப் போனாத்தானே, வாங்கி இழுக்கவும் காசு இருக்கும்!”
“ஓ..”
அலிபாபா குகை புதையல் மாதிரி, போதை உலகத்தில் நடக்கும் சமுக அவலங்கள் எல்லாம் கடைவிரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது!
“...ஆனா, இந்தப் பிள்ளைய மட்டும் வேணாம்னுட்டான்! எவனுக்கோ பொறந்ததுக்கு நான் என்ன ஓசி அப்பனான்னு, இன்னிய தேதி வரைக்கும் இந்தப் பிள்ளைக்கி பொறந்த சூறா எடுத்துத் தரமாட்டேன்னுட்டான்!
நீயே சொல்லு ஞாயத்தை! இந்தப் பிள்ளை ஏன் எவனுக்கோ பொறக்கனும்? இருக்கிறவன் ஒழுங்கா இருந்திருந்தா, அவ எவனுக்கோ பெத்துத் தூக்கியாந்திருப்பாளா; இந்தப் பிள்ளைய? வாய்க்கு வாயி இந்தப் பிள்ளையைப் பார்த்து “அப்பன் பேரு தெரியாத புள்ள”ன்னு பேசுறான்னு, நாந்தான் அவன வீட்டுல சேர்க்கிறது இல்ல!
ஆனாலும் பாரு ஒலகத்தை....புருசன்காரன் தன்னை மட்டும் சேர்த்துக்கிறதா சொன்னதும், அவ கெளம்பிப் போயிட்டா, பால் குடி மாறாத பச்சைப் பிள்ளையை விட்டுப்புட்டு! யாரை நொந்துக்க முடியும் சொல்லு...”
கோபமும் மன வலியுமாக கிழவியின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.!
“அந்தக் கூறு கெட்டவ, வயித்துல தங்கிடுச்சுன்னு தெரிஞ்சதுமே, எதையாவது செஞ்சி கலைச்சிவிடாம... பெத்துத் தூக்கியாந்துட்டா! இன்னிக்கி இந்த சின்ன உசுரு கெடந்து சின்னப்படுது..!
கர்ணனின் அம்மா, சட்டென்று என் ஞாபகத்துக்கு வந்தாள்!
மகாபாரத காலத்தில் பிறப்புப் பத்திரப் பிரச்சனைகள் எல்லாம் இல்லைதான். என்றாலும் “அப்பா யார்?” என்ற விசயத்தில் வில்லங்கம் வரலாம் என்று, எத்தனை முன் யோசனையோடு குழந்தையை ஆற்றில் விட்டிருக்கிறாள் அவள். மகா கெட்டிக்காரி அந்த குந்தி தேவி!
போதை வஸ்துக்கள் ஏதும் எடுத்துக் கொள்ளாததால் அவளது மூளை சரியான இயக்கத்தில் இருந்தது போல!
“அந்த ஒத்த சூறா இல்லாம போனதுனாலத்தான் இந்தப் பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்ப முடியாம வீட்டுலேயே போட்டு வச்சிருக்கேன்..!”
“அவங்க அம்மா வரமாட்டாங்களா இதப் பார்க்க...?”
“முன்னல்லாம் வரமாட்டா! இப்பதான் வர போவ இருக்கா! அதுவும் எதுக்குங்க்குற..? வந்து வாசல்ல நின்ன கையோட.. “என் பிள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்சிட கெழவி! நீ நல்ல சாவு சாவ மாட்ட..”ன்னு எனக்கு சாபம் தருவா...அதுக்குத்தான்..!”
“ஏன்..?”
“இந்தப்பிள்ளைய அவங்க கூட அனுப்பலனுதான்! இதையும் அவ கூட அனுப்பி இப்பவே கஞ்சா விக்க பழக்கி விடறதுக்கா..?”
“ஆங்..?”
“வயித்துல புள்ளய வச்சிக்கிட்டு, கஞ்சாவ இழுத்து இழுத்து, இந்தப் புள்ள எலிக்குஞ்சு மாதிரிதான் கெடந்தா, என் மடியில கொண்டாந்து பொட்டப்ப! அதையும், கைய நீவி.... கால நீவி.... தலைய உருட்டி....ஆளாக்கி விட்டுட்டேன்ல....இப்ப புள்ள வேணுமாம்..”
“நெசந்தானா இதெல்லாம்....?”
“பின்ன... பொய்யா சொல்றேன்? மூத்த நாலு பசங்களும் என்ன பண்ணுதுங்கற? அந்த லட்சணமாத்தான் போவும் இதும் பொழப்பும்!
அவனுங்களாவது பரவாயில்ல..ஆம்பள பயலுங்க. கண்ட எடத்துல சுத்திட்டு, நெனைச்ச எடத்துல படுத்துக்குவானுங்க..பொம்பள புள்ள அப்படி கெடந்தா என்ன கதி ஆவும்னு நெனச்சிப்பாரு..
அட.. இவ ஆத்தாளுந்தான் ஒரு மனுசப் பொறப்புனுட்டு ஏன் இருக்காளோ தெரியலப் போ! இத்தன தடவ போலீஸ்காரன் புடிச்சிக்கிட்டுப் போனானே... இனியாவது ஒழுங்கா மரியாதையா இருப்போமுன்னு இருக்காளா..? பழைய குருடி கதவைத் தெறடினு கஞ்சா விக்கவும், கஞ்சா இழுக்கவும் போய்ட்டா! புருசன் பொண்டாட்டி, புள்ளைங்க அத்தனையும் இப்படியா போவனும்..? இந்தக் கட்டையில உசுரு இருக்கிற வரை, இந்தப் பிள்ளைய காபந்து பண்ணி விட்டுடலாம். எனக்கும் கையி, காலு விழுந்து போனா இந்தப் பிள்ளை கதி என்னத்துக்கு ஆவும் சொல்லு...! இப்பவே அக்கறைப் படாததுகளா எனக்கப்புறம் பாதுகாக்கும்?”
அம்மா, அப்பா இரண்டு பேருமே இருந்தும், இன்னார் பிள்ளை இவள் என்கிற அடையாளம் இல்லாமல், இது என்ன வாழ்வு? பாசமோ பாதுகாப்போ இல்லாமல் இது என்ன அவலம்?
தன் பிறப்பின் ரகசியம் அறிய நேர்ந்தால், எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாவாள் இந்த சிறுமி. சமூகத்தின் அலட்சியத்தால் அவமானப்பட்டு...அவமானப்பட்டு, தோல் தடித்துப் போக மாட்டாளா? அவளது தலை எழுத்தை நல்ல படியாக எழுதுவதற்கு பதிலாக கேலிச்சித்திரமாக கிறுக்கி வைத்துவிட்டானோ பிரம்மன்?!
“அக்கம் பக்கத்துல எல்லாம், என் பேத்தியப் பத்தி எளக்காரமா பேசுறது எனக்கும் தெரியும் ஆயா..! கஞ்சாவுக்கு பொறந்த புள்ளன்னு நையாண்டித்தனமா பேசுறதையும் காதுபடக் கேட்டுருக்கேன்! நீயே சொல்லு, இவ என்ன... கேட்டுக்கிட்டா வந்தா இப்படி ஒரு பொறப்ப...? பெரியவங்களை ஆயிரம் பேச்சு பேசிட்டுப் போகட்டும். எதுக்குப் பிள்ளையப் பேச..? இது என்ன ஒரு மொடக்குத் தண்ணியா, ஒரே முக்கா முழுங்கிட்டு, பொறங்கையால வாயைத் தொடச்சிக்கிட்டுப் போறதுக்கு?
பொறப்புலய வந்த ஒடம்பு மச்சத்த எதையாவது வச்சு அழிக்க முடியுமா சொல்லு? அப்பன் ஆத்தா பண்றது எல்லாம் புள்ளைங்க தலையிலதான் விடியுங்கறது சரியாத்தான் இருக்கு போ.. இது பொறப்புல...!”
தேரோட்டியின் வளர்ப்பு மகனாக இருந்த போதும் சரி, நட்பு தந்த ஆசியால், மன்னனாக நிலையுயர்ந்த போதும் சரி, குந்தி மகனே அத்தனை சிறுமைப்பட்டானே.. இந்தப் பிள்ளை எம் மாத்திரம்!?
பாட்டியம்மாவின் மன புண்ணுக்கு எந்தக் களிம்பையும் பூசமுடியாத கையாலாகாத்தனத்தோடு, அவரின் வாயைப் பார்த்துக்கொண்டே நின்றேன்.
ஒரு நிமிடம் கூட இருக்காது.
வெளியே போன தியாகேஸ்வரி, ஓடி வந்து கிழவியின் மடியில் விழுந்தாள்!
“ஏன் புள்ள...போயி வெளையாட வேண்டியதுதான...”
“ஹூஹும்..!”
பாட்டியின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கிழவியோடு தன்னை இறுக்கிக்கொண்டாள் சிறுமி!
கிழவி என்னைப் பார்த்த பார்வையில், வெளியே சொல்பட்டு வருகிறாள் இந்தக் குழந்தை என்பதை நான் கனத்த இதயத்தோடு புரிந்துக் கொண்டேன்.
குழந்தைகளை உடல் ரீதியாக சித்திரவதை பண்ணும் கொடுமையாளர்களுக்கு தண்டனை தரும் சட்டத்தில், மனரீதியான கொடுமைகளுக்கும் தண்டனை தரும் உட்பிரிவு ஏதும் இருக்கிறதா?
ஏன் குழந்தைகளை காற்றாடியாக்கி வேடிக்கை பார்க்கிறது இந்த சமுதாயம்..?
உயரப் பறக்கப் போகிறதா?
இல்லை திசை மாறிப் போகப் போகிறதா?
இல்லை பாதியில் அறுந்து விழப்போகிறதா?
எதையுமே உறுதிப்படுத்த முடியாத இவர்களின் வாழ்வின் ஆதார சுருதியான நுனிநூலைப் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த மண்ணிலும் கூட, ஆஸ்திரேலியாவின் அபரிஜின்கள் போன்ற அரை ஜாதிகளை தாங்கள் உருவாக்கிக்கொண்டிருப்பது புரியுமா?
கீரைக்காரப் பாட்டிபோல அன்பும் பரிவும் கொண்ட ஆயிரம் தேரோட்டிகள் இருக்கலாம்! ஆனால் வழித்தவறிப்போன குந்தி தேவிகள், சுயநலமிகளாக இருக்கும்வரை கர்ணபரம்பரை தொடர்ந்து கொண்டிருக்கும், என்பதை யாரிடம் சொல்ல...? எப்படி சொல்ல..?
சிதனா
மன்னிப்பு
“ஏய்... என்னப்பா நீ..? இன்னக்கி இருக்கிறவங்க நாளைக்கி இருப்போமானு எந்த “கேரண்டி”யும் இல்ல...! இதுல என்ன சண்டையும் ... உயிர் போற வரைக்கும் மூஞ்சில முழிக்க மாட்டேங்கற பகையும்...? எதையும்...மனசுலேயே வச்சிருந்தாத்தானே மன்னிப்புன்னு ஒரு சங்கதிய வேற நடுவுல இழுத்து விட்டுக்கிட்டு அலையனும்....அத... அத... அப்பப்ப மறந்திருவோமே..”
எப்போதோ, யாரிடமோ, எந்த சந்தர்ப்பத்திலோ.. சொன்னது, இப்படி ஒரு ரூபம் கொண்டு, எதிர்வரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்.
“எனக்கு நீங்க அண்ணன் மொறையா வேணும்..”
எதிரே வந்து நின்று கொண்டு புன் முறுவல் பூக்கிறது அவன் விதி!
“சொல்றது போல செய்யறது அவ்வளவு சுலபம் இல்லடா செல்லம்...” என்று அவன் மனதே எள்ளி நகையாட, வந்தவனை ஏறிட்டான்!
இவனை வார்த்தெடுத்தபின், அதே அச்சில், பிரம்மன் அவனையும் வார்த்திருக்க வேண்டும்!
எத்தனையோ ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கும் முகம்தான். புதியவன் ஒன்றும் இல்லை; பக்கத்து கம்பம்தான்!
ஆனால், என்றுமில்லா திருநாளாக இன்று மட்டும் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? அதுவும் உறவு முறையெல்லாம் சொல்லிக்கொண்டு!
அதுவும் ஓட்டுக்குள் சுருங்கிப்போன நத்தையாய், தன் வாழ்க்கையை குசினிக்கு என்று தாரை வார்த்துக்கொண்ட அம்மாவின் முந்தானையையே பற்றிக் கொண்டு வளர்ந்தவன், யாரிடமும் அதிகமாய் பேச ஆசைப்படாதவன், சிறிய நட்பு வட்டத்தோடு தனது வயதுக்கே உரிய சிரிப்பும் பேச்சும் நின்று விட பிரயாசைப் படுபவன், முக்கியமாய் எந்த வம்புக்கும் போகாதவன். இவனிடம் ஏன்.... அந்தக் குடும்பத்து பையன் வலிய வந்து பேச ஆசைப்படுகிறான்?
“பெரியவங்க சண்டையும் மனஸ்தாபமும் பெரியவங்களோடு போகட்டுமே! சின்னப் பிள்ளைங்க.... அடுத்த தலைமுறை நாம... நமக்கு எதுக்கு அந்தப் பாவ மூட்டை? அதை இறக்கி வச்சிட்டு சொந்த பந்தமா இருந்துட்டுப் போலாமே!”
அட! இவனை விட இன்னமும் சீரிய சிந்தனைக்காரனாக இருக்கிறானே.... சின்னவன்!
ஆனால், சீரிய சிந்தனை என்பது வேறு, மன்னிக்கும் மனசு என்பது வேறுதானே! தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது மாதிரி!
பிரச்சனை இப்போது அதுவல்ல!
இவ்வளவு காலமும் இல்லாத அன்பும் கரிசனமும் திடீரென்று இப்போது ஏன்?
ஒருவேளை, தகப்பன் அற்ற பிள்ளையாகவே வளர்ந்தவன், இப்போது தாயையும் இழந்த பிள்ளையாய் நிற்கிறானே என்பதால் ஏற்பட்ட அனுதாபமா? அதனால்தான் இந்த தூதா?
“ஏன் எதுவுமே பேசமாட்டேன்கிறீங்க? எங்கிட்ட, எப்பவும் பேசவே கூடாதுன்னு ஏதாவது முடிவா? ஆனா..! நாங்க ஒரு தப்பும் பண்ணலயே..”
“ஊருக்கு மத்தியில் ஓடுன ஆறா எங்கம்மாவ நெனைச்சி, எவனோ அள்ளி குடிச்சிட்டு, அந்த ஆத்துலேயே துப்புன எச்சி நான்! எங்கிட்ட உனக்கென்ன பேச்சு வேண்டிக் கெடக்கு? வழியில போறவன கூப்பிட்டு வச்சி சீண்ட வந்தியா...?”
அவனுள் பதுங்கிக் கிடந்த விஷம் உச்சந்தலையில் “சுரீர்” என்று ஏறியதுதான்! நாக்கின் வழி கீழிறங்கி எதிராளியைத் தாக்கவும் தயார்தான்!
ஆனால், தோளில் கூட கையைப் போடாமல், கக்கத்தில் வந்து ஒண்டிக் கொள்ள நினைக்கும் ஒருவனை எப்படி புண்படுத்துவது?
“வேணாம் ... நீங்கள்லாம் என்கிட்ட பேச வேணாம்.... இத்தனை வருஷமா எப்படி இருந்தீங்களோ, அப்படியே தூரமா இருந்துடுங்க.. என்கிட்ட வரவேணாம்..!”
“இல்ல ....நீங்கதானே சொன்னீங்க...இன்னைக்கி இருக்கிறவன், நாளைக்கி இருக்கிறது நிச்சியமில்லாதப்ப ... எதுக்கு சண்டையும் பகையும்னு..?”
“அது... அது.......”
பேச முடியாமல் தொண்டை அடைத்த்து..! பிறந்ததிலிருந்து, வாழ்ந்திருந்த வாழ்க்கையிலிருந்து சட்டென்று எப்படி தன்னை மீட்டுக் கொள்வது.. அது ஏழ்மையான வாழ்வாயிருந்தாலும் சரி, அல்லது அவமானப்பட்டு கூனி குறுகி போன இழி நிலையாகவே இருந்த போதிலும்!
பதினைந்து வயதிருக்குமா, அந்த உண்மை தெரிய வந்த போது?ஆமாம்! அவ்வளவுதான் இருக்கும் அவனுக்கு வயசு அப்போது!
இரண்டாவது அண்ணன் கல்யாணம் முடிந்து வீட்டிற்கு புது அண்ணி வந்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான்.
அது கொஞ்சம் தகராற்றில் நடந்து முடிந்த கல்யாணம்! அந்த வீட்டுப் பெண் வேண்டாம் என்று கிழவனும் கிழவியும் முரண்டு பண்ண, ‘எந்த வீட்டுப் பொண்ணா இருந்தா என்னா, என் மனசுக்கு பிடிச்சிருக்கு, நான் கட்டிக்கிறேன்”.. என்று மகனும் மல்யுத்தம் பண்ணியதில் மகன் ஜெயித்து, நடந்த கல்யாணம் அது!
தன்னை மருமகளாக்கிக் கொள்வதை மறுத்தார்களே என்ற காட்டம் அவளுள்ளும் இருந்திருக்கலாம். தாத்தாவை “அப்பா” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தவனை கைநீட்டி அழைத்தாள்!
புதிதாய் வந்த அண்ணி, தன்னிடம் இத்தனை அன்பாய் இருக்கிறாளே என்று, சிரித்த முகமாய் வந்தவன் நெஞ்சில் அவள்தான் முதலில் நெருப்பை அள்ளிக் கொட்டினாள்!
“பெரிய பையந்தான நீ? யார எப்படி கூப்பிடறதுன்னு தெரியாதா? தாத்தாவ, யாராவது அப்பான்னு கூப்பிடுவாங்களா? மாமாவ போயி அண்ணன்னு கூப்பிடாதே...! முக்கியமா என்னை அண்ணின்னு சொல்லாதே... மாமன் பொண்டாட்டி அத்தை..!”
வெளிறிப் போய் பார்த்த பையனிடம்.. இன்னமும் ஓதினாள்!
“உங்க பெரியக்கா இருக்காங்களே.. அவங்க உனக்கு அக்கா இல்ல! அவங்கத்தான் உன்ன பெத்த அம்மா! உன் அப்பா யாருனு அவங்கக்கிட்ட போயி கேளு! எனக்குத் தெரியுந்தான் யாரு உங்கப்பானு! ஆனா... அத நான் சொல்லக்கூடாது! உங்கம்மா சொல்லனும்.. அதான் மொற! போ... போய் கேளு... போ!”
இதில் அவளுக்கென்ன சந்தோஷம் என்றால், ஒன்றுமில்லைதான்! சும்மா.. மன அரிப்பு..! சொறிந்துக் கொண்டாள்! அவ்வளவே!
ஆனால், அந்த இரண்டும் கெட்டான் வயதில் இந்த பிள்ளையின் மன நிலையின் துடிப்பு? அந்த பாதிப்பு?
இரண்டு நாளாய், மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு பேச மாட்டேன், சாப்பிட மாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருந்த பிள்ளையின் முக வாட்டம் எதனால் என்பதே அறியாமல், பெற்றவள் திண்டாடிக் கொண்டிருக்க, அந்த சிறுவன், இனியும் தாங்க முடியாது என்பவனாய்ம் நேரே தன் தாத்தாவிடம் போய் கேட்டான்...”தாத்தா எப்படி அப்பா ஆகலாம்..?”
மொத்த குடும்பமும் ஆடித்தான் போனது..! எத்தனையோ அடி வாங்கிய கிழவனுக்கும் கிழவிக்குமே வாயடைத்துப் போனது.
பெற்றவள்தான், இன்னமும் கூட ரத்தம் கசியும் தன் மனப் புண்ணின் வலியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மகனை அழைத்து விவரித்தாள்!
ஏதோ, சொல்ல விரும்பாத காரணத்தால், அவன் அப்பாவுக்கு தன்னையும், தன் பிள்ளையான் அவனையும் பிடிக்காமல் போய்விட்ட காரணத்தால்தான், தாத்தா பாட்டி வீட்டிலேயே வளர வேண்டிய சூழ்நிலை, அவர்களை அம்மா அப்பா என்று கூப்பிட வேண்டிய காலக் கொடுமை என்று விளக்கினாள்.
சமாதானம் ஆகவே இல்லை, அந்த பிஞ்சு மனது!
மற்ற யாரை கேட்டாலும், அதைப்பற்றி ஒற்றை வார்த்தை பேசவே விரும்பாமல் முகம் திருப்பிக் கொண்டு போக, பக்கத்து வீட்டு “சுருட்டு தாத்தா” தான் நடந்த கதையைச் சொன்னார்.
டியுசனுக்குப் போக.. தொங்கிப் போன முகத்துடன் பஸ்ஸுக்குக் காத்திருந்தவனுக்கு, சமாதானமாக இருக்கும் என்று நினைத்துச் சொன்னாரோ, அல்லது உண்மையை எத்தனை நாளைக்கு மூடி மறைப்பது என்று நினைத்து சொன்னாரோ தெரியாது, ஆனால், உண்மை விளம்பி என்னவோ அவர்தான்!
“ஏலே.. வெடப்பயலே...எதுக்குடா... வீட்டுல இத்தன ஆர்ப்பாட்டம் பண்றவன்? உங்கம்மாக்காரி மாதிரி ஒரு பொம்பள கெடைக்க மாட்டாடா லேசுல! அவ இஷ்டப்பட்டவனுக்குத்தான் உன்னைப் பெத்தா! ஆனா, அந்த பச்ச மண்ணு மனசுல இருந்த நெனப்பு மாதிரி, அந்த பாவி மவனுக்கு இல்லியே! உன்னை வயித்துலக் குடுத்துட்டு, உங்கம்மாவ ஏமாத்தப் பார்த்தான் அவன்னு தெரிஞ்சதுமே, நியாயம் கேட்டுச்சு, கம்பத்து சனமே!
“ஆத்து தண்ணி நாலு பேருக்கும் பொதுவானதுதான... நாலு பேரு அள்ளி குடிச்ச மாதிரி நானும் குடிச்சேன்” னுட்டான் பாவி!
உன் தாத்தா பாட்டியில இருந்து, மாமன்காரனுங்க வரை, எத்தனையோ பேரு தலை கீழா நின்னு பார்த்துட்டாங்க... அவளுக்கும் ஒரு நல்ல காரியம் பண்ணி வச்சிடனும்னு! ஹூஹூம்..! விரிச்ச முந்தானை ஒருத்தனுக்குத்தான்னு உறுதியா நின்னுட்டா!
அப்பேர் கொண்ட நல்லவ வயித்துல பிள்ளையா வந்து பொறந்துட்டு எதுக்குடா அந்த குடி கெடுத்தவன பத்தி கேட்டு இருக்கிற மனுச மக்க உயிர வாங்கிற? போடா..! போயி ஒழுங்கா படிச்சி ஆத்தாக்காரிக்கு ஒத்தாசையா இருக்கப் பாரு! ஒன்னக் கொண்டாவது அவ மனசு குளுந்துட்டுப் போறா...!”
அம்மா எந்த அளவு ஏமாற்றப் பட்டாள் என்று அறிந்தபோது அதிர்ந்து போனது அவன் மனசு!
களி மண்ணாய் கிடந்த அந்த பிஞ்சு, அம்மா மடியில் கரைந்துதான் போனது.
சுய பச்சாதாபத்தால் நெஞ்சுக் கூட்டுக்குள்ளேயே நொந்துப் போய் கிடந்தவள், திடீர் நெஞ்சு வலியால், இரண்டு வருஷத்துக்கு முன்னால் காலமாகும் வரை, அவனுக்கு எல்லாமே அம்மாதான்!
அவன் அம்மாவும் கூட, உண்மையான காதலியாக மட்டுமல்லாது, நல்லா தாயாகவும் இருந்தாள்!
யாரையும் மனம் நோக பேசக்கூடாது, புண்படுத்தக்கூடாது; முக்கியமாக தெரிந்தே தவறு செய்யக்கூடாது என்று தன் வாழ்வின் அனுபவங்களை, மகனுக்கு அன்பு பாடமாகப் போதித்து விட்டுத்தான் போனாள்!
அப்படி வளர்ந்த பிள்ளையால், எளிதில் யாரையும் புண்படுத்த முடியுமா; என்னதான் தாங்க முடியாத கோபம் கொப்பளித்து நின்றாலும்?!
ஆனால், எதிரில் நிற்பவன் பாம்பு இல்லையே! இவனது பூஞ்சை மனதை, இன்னும் கொஞ்சம் பலவீனப்படுத்த வந்த அன்பு சகோதரன் ஆயிற்றே!
“அண்ணே..!”
“ஆ..! ஆங்..?”
தட்டுத் தடுமாறி நிதானத்துக்கு வந்தான்!
“எ... என்ன..?”
“இன்னைக்கி இருக்கிறவங்க.. நாளைக்கி இருப்பாங்கன்னு நிச்சியமா சொல்ல முடியாது....”
“என்ன சொல்ற நீ...”
“இப்பவோ அப்பவோன்னு கெடக்கிறாங்க..! மன்னிக்க வேண்டியவங்க யாரும் இப்ப உயிரோட இல்ல! நீங்களாவது ... ஒரு தடவ வந்து மொகத்தப் பார்த்துட்டு, மனப்பூர்வமா மன்னிச்சிட்டதா ஒரு வார்த்த சொல்லிடுங்களேன்...!”
“யார?”
“நம்ப அப்பாவ..!”
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிதனா
மங்களகௌரி பெருமாள்
விடியல் - 2006
வாசிக்க கிடைக்காத பக்கங்கள்
கண்ணால் பார்த்து கூட அறியாத மனிதர்கள் பற்றி, யாருக்கேனும் சிந்தனை எழக்கூடுமா?
அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று, சதா சர்வகாலமும், உள்ளுக்குள் ஒரு கற்பனை ஓடிக்கொண்டே இருக்குமா?
அவர்களுக்கு ஏற்பட்ட துன்பவியல் முடிவுக்காக, எத்தனையோ ஆண்டுகள் கழித்து, இப்போது கண்ணீர் விட தோன்றுமா?
எல்லாமே கூடியிருக்கிறது எனக்கு!
ஏதோ, அவ்வப்போது ஊதி விட்டால்... மினுக் மினுக்கென்று எரிவது போலிருந்த சிந்தனை நெருப்பு, அம்மாவின் இறுதி காரியத்திற்கு வந்து சென்ற... பெரியத்தையின் மூத்த மருமகள்... மனோ அக்காவின் வார்த்தைகளால் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருப்பது நிஜம்!
‘டீ ... கௌரி... ஒனக்குத் தெரியாது... நம்ப சின்னத்த எப்படி செத்தாங்கன்னு...! அந்த ஆளு...அடிச்சி, அடிச்சே கொன்னான்..! ஒரு நாளு, அடிச்சி... கொட்டுற மழையில வெளியில தள்ளிட்டான்! அதுக்கப்புறம்தான், அவங்களுக்கு ரொம்ப சீக்கு வந்தது! ஒன்னப் பார்த்தா... எனக்கு அவங்களப் பார்க்கறா மாதிரியே இருக்குடி...’
கடவுளும்தான் எத்தனை கொடியவன்!
நெஞ்சு நிறைய ஆசையை தேக்கி வைத்திருந்தவனுடன் இணைத்து வைக்காமல், ஒரு பொல்லாதவன் கையில் ஒப்படைத்து, அற்பாயுளில் வாழ்வை முறித்துப் போட வேண்டுமென்றால்......அதற்கு அந்தப் பெண்ணும்தான் என்ன மாதிரியான பாவத்தை செய்திருக்க முடியும்?
அதிகபட்சமாக, பத்து அல்லது பதினொன்றுதான் இருக்கும் எனக்கு வயசு, அப்பொழுது!
டிறவர்ஸ் ரோட்டில் குடியிருந்தோம்!
டிறவர்ஸ் ரோடு தெரியும்தானே...?!
கே.எல். செண்ரல் என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டு அலைகிறார்களே, அதே இடம்தான்!
ரயில்வே குடியிருப்பு இருந்தது அப்போது அங்கே!
அந்த தந்தி வந்ததும் அப்போதுதான்!
தமிழ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஆரம்ப ஆங்கிலம், ஒரு தந்தியின் சாரம்சத்தை படித்துப் புரிந்துக் கொள்ளும் அளவில் இல்லை!
தந்தி சேவகன்தான், சிங்கப்பூரில் யாரோ இறந்து விட்டார்கள் என்று உள்ளடக்கம் படித்து சொல்லிவிட்டு, கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்!
அந்த நேரத்தில், கைப்பிள்ளைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த அக்காதான், தந்தி சேவகனின் விளக்கத்திற்கு......’சின்னத்த..’ என்று, குரல் எழும்பாமல் ஒரு வார்த்தை சொன்னார்!
அதன்பின், அக்காவும் அண்ணியும், பின்கட்டுப் பக்கமே நின்று, குசுகுசுவென்று பேசிக்கொண்டதும், இரவு எட்டு மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்த அப்பா....பெருங்குரலில் சத்தமிட்டதும் தொடர்ந்தது ஏனென்று, அப்போது எனக்கு தெரியவே தெரியாது!
மற்றபடி....அந்த அறுபதாம் எழுபதாம் ஆண்டுகளின் நட்பின் சிறப்பு படி, அப்பாவின் நண்பர்கள் அனைவரும் ‘மாமா’ என்றும், அப்பாவை ‘அண்ணே..’ என்றழைக்கும் பெண்கள், ‘அத்தை’ என்றும் புத்தியில் பதிந்து போனதால், செத்துப்போனது ஏதோ, அப்படி ஒரு அத்தை என்று, கவலைப்படவோ, கண்ணீர் விடவோ இல்லை நான்..!
அந்த தந்தி வந்ததே... அந்த காகிதத்திற்கு ஏற்பட்ட முடிவு மட்டும் இன்னமும் மனக்கண்ணில் இருக்கிறது!
வீட்டுக்கு வெளியே, நடு வாசலுக்கு நேரே கொண்டு போய்.... சுக்காய் கிழித்து, அதற்கு தீ மூட்டி விட்டு வந்தார் என் அப்பா!
அந்த இரவில் வீட்டில் விளக்கணைத்து அனைவரும் படுத்துவிட்ட பின்னும் .... அப்பா மட்டும் பேசுவதை நிறுத்தவில்லை... கோபமும்... ஆங்காரமுமாய்....
அன்று, அப்பா தூங்கினாரா இல்லையா என்று, துக்கமற்று தூங்கிப் போன எனக்குத் தெரியாது!
அப்பாவின் கோபத்துக்கு கட்டுப்பட்ட வீடு என்பதால், அதன் பிறகு அந்த சம்பவம் பற்றி... யாரும் பேசி நான் கேட்கவில்லை; ஒரு நாள் அபிமன்னா பெரியம்மா... கன்னியம்மாவிடம், தான் அடிபட்ட கொடுமையை, அம்மா கட்டவிழ்க்கும் வரை!
‘முன்ன வங்குசா ரோடு (பங்சார் ரோடு) தமிழு ஸ்கூலு பக்கத்துல, அத்தாப்பு வீடுங்க இருந்துச்சே.... அங்ஙனதான் இருந்தோம் அப்ப!
எங்க வீட்டு கெழவி... சிங்கப்பூர்ல இருந்த பெரிய மவ வீட்டுல இருந்து, திடுதிப்புன்னு வந்து, எங்க கூட இருந்த அந்தப் பிள்ளைய புடிச்சி இழுத்துக்கிட்டுப் போயிடுச்சி!
அப்பவும் நான் சொல்றேன்...’அவங்கண்ணே ஈப்போவுக்கு ‘நட’ போயிருக்காங்க ... வந்ததும் சொல்லிட்டுக் கூட்டிட்டுப் போங்கன்னு..!’
கேட்டாத்தான..!
“எம் பிள்ளைய நான் கூட்டிட்டுப் போறேன், ஒனக்கென்னாடி...’ ன்னுட்டு, ராத்திரி ஏழு மணிக்கி... இங்க டேசன்ல (ஸ்டேஷன்) இருந்து கெளம்பற டிரெயின புடிச்சி, விடிஞ்சா ஆறு மணிக்கி சிங்கப்பூரப் போயி புடிச்சதும்... அப்பவே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க..’
‘ஏங்கா.. இந்தக் கெழவி அப்படி பண்ணுச்சி..?’
அபிமன்னா பெரியம்மாவும் ..என் அப்பத்தாவும் பல்லாங்குழி ஆட்ட தோழிகள்! பல முறை, அபிமன்னா பெரியம்மாவிடம் ஆட்டத்தில் தோற்றுவிட்டு, அவரிடம் சண்டை போட்ட வீராங்கனை!
அந்தக் கோபத்தின் மிச்சம்தான் அபிமன்னா பெரியம்மா என் அப்பத்தாவை ‘கெழவி’ என்று உரிமையோடு அழைப்பது!
‘சிங்கப்பூரு மாப்பிள்ளைன்னா... அப்ப அவ்வளவு பவுரு.... அதான்! பெரிய மவளோட சேர்ந்துக்கிட்டுஅந்தக் கெழவி அப்படி பண்ணிப்புட்டுப் போவ, இந்த மனுசன்கிட்ட வெறவு கட்டையிலயே நான் வாங்குனேன் பாரு அடி.... ‘ஒன்ன யாருடி அனுப்ப சொன்னான்னு...” சே ..! இதுங்களோட மனுச பட்ட பாடு...!
அதோடவா போச்சுங்கற? அன்னியோட தங்கச்சிக்காரி ஒறவையே அறுத்துக்கிட்டது போ....’செத்தாலும் மூஞ்சியிலே முழிக்க மாட்டன்னு..!’
முருங்கைக் கீரையையும் கேழ்வரகு மாவையும் சேர்த்து பிசைந்து பிடிக்கொழுக்கட்டை தயார் பண்ணி நண்டு கறியோடு சேர்த்து வேக வைத்தபடி அம்மா சொன்னது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது, நண்டு கறி வாசனை எப்போதும் மூக்கின் மேலே இருப்பது போல.
அம்மா அடி வாங்கிய கதை மட்டும் கட்டவிழ்ந்து வரவில்லை! இந்த குடும்பத்தின் உறவு ஒன்று ஒதுக்கி வைக்கப்பட்ட கதையில் இறுக்கி போடப்பட்ட முதல் முடிச்சு...மெல்ல நெகிழ்ந்து கொடுத்ததும் அப்போதுதான்; கட்டவிழ நான் தயார்.... கட்டறுக்க மனிதர்கள் இருந்தால்; என்று!
அம்மா சொன்ன அந்த கதையில், எனக்கென்னவோ மனிதர்களை விடவும்....அந்த நாள் முக்கியமானதாகப் பட்டது! அந்த பொல்லாத பொழுதில் வெட்டிக் கொண்ட உறவை, கடைசி வரை அப்பா ஒட்ட வைத்துக் கொள்ளாமலேயேதான் போய் சேர்ந்தார்! ஆக, அது வரலாற்றுக்குரிய நாளாக போய் விட்டது; எங்கள் குடும்பத்துக்கு!
யார் கண்டது....
ஒருவேளை, என் அத்தையை கல்யாணம் முடிக்க ஆசைப்பட்ட மனிதருக்கும் ... ஆயுள்வரை... அது மறக்கப்பட முடியாத நாளாகவே இருந்திருக்கலாம்..! இல்லாமலா...’ ஒன் தங்கச்சிய கட்டிக்குடுக்கறேன்னு..என்ன ஏமாத்திட்டியேடா... பெருமாளு..’ என்று நண்பனை கண்ணால் காணும் தோறும் குற்றம் சாட்டியிருப்பார்?!
இந்தப்பக்கம்...’இவருக்குத்தான் ஒன்ன கட்டிக்குடுக்கப்போறோம்..’ என்று அத்தையிடமும் அறிவிக்கப்பட்டு...அந்த வங்குசா ரோடு அத்தாப்பு குடிசை ஆணழகன் மேல், இவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு.. இனிய கனவுகள் வந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், திடுதிப்பென்று கைப்பிடியாக இழுத்துக் கொண்டு போய், ரயிலில் ஏற்றி... முகம் கழுவிக் கொள்ளக்கூட அவகாசம் தராத பட்சமாய்.. முகம் அறியாத அந்நியனின் தாலிக்கு தன் கழுத்தை தாரை வார்த்தவளுக்கும் கூட... அது... நினக்கும் மாத்திரத்தில்... உயிர் போகும் வேதனையைத் தரும் நாளாகவே இருந்திருக்கலாம்!!
ஆனால், சாதாரண்மாக இருந்திருக்க வேண்டிய நாளை, வரலாற்றுக்குரிய தினமாக மாற்றியமைத்த அப்பாவின் முரட்டு பிடிவாதத்தையும் மீறி, அவ்வப்போது வெளிப்படும் ஒரு துளி சோகத்தை, என் கண்களும் மனமும் அந்த பால்ய வயதிலேயே பதிவு செய்து வைத்திருக்கிறதே...அதை ஆயுளுக்கும் நான் மறக்க முடியுமா?
‘பழைய கதை’ பேசும் போது... அப்பாவையும் மீறி வெளிப்பட்டு விடும் போலும் அந்த உணர்வு!
பிரிக்பீல்ட்ஸ் ஷெல் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு, அப்போது... அந்த ரயில்வே வீட்டில் எங்களோடு தங்கியிருந்த, இரண்டாவது சித்தியின் கணவர், தங்கவேலு சித்தப்பா... செல்லமாய் ‘தொப்பி சித்தப்பா’ ...என்றாவது ஒரு நாள், “அந்தக் காலத்துல்.. பங்சார் ரோட்டுல..” என்று எந்தக் கதையையாவது ஆரம்பித்து வைத்தாரானால்... பெரியவர்களுக்கிடையே, எத்தனையோ கதைகள், வெள்ளைக்காரன் காலத்திலிருந்தும் ஜப்பான்காரன் காலத்திலிருந்தும் புதைகுழியை பொத்துக்கொண்டு ஓடிவரும்... நினைவு பெட்டகத்திலிருந்து..!
அப்பாவுக்குத்தான் நிறைய கதைகள் இருக்கும் பகிர்ந்துக் கொள்ள!
பூமலை ஆற்றில் மீன் பிடிக்கப் போய், ஏதோ ஒர் துர் தேவதை, மீன்களாக உருமாறி ஆட்டம் காட்டியதும், அதை ஒற்றைக்கை முனியாண்டி மாமா கண்டுபிடித்து சொல்லி.... எடுத்த ஓட்டமும், ஜப்பானியர் ஆட்சி காலத்தில், வெறும் மரவள்ளிக்கிழங்கை மட்டும் உணவாகக்கொண்டு ... ஒரு லோடு கரி அள்ளிக்கொட்ட வேண்டிய ‘ஃபையர்மேன்’ வேலையின் நெருக்கடியும், அதே காலத்தில் கைவசம் இருந்த, ஒரே சட்டையை சூதாடி தோற்றதும் பெண் வேஷமிட்டுக் கொண்டு, காலி வீட்டில்... தலையணைகளை பிணம் போல் உருமாற்றி வைத்து, பெருங்குரலில் ஒப்பாரி வைத்து.. ஊர் பெண்களை ஏமாற்றி திட்டு வாங்கியதும்... பெண்கள் பின்னால் அலைந்ததும், அதன் பின் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகள் தண்டவாளங்களில் வெடி வைத்து தகர்த்த விபத்துகளில் அடிபட்ட அனுபவமும் என்று பலவும் அடிபட்டு... இறுதியில் இப்படி வந்து முடியும்; “என்னப் பாக்கறப்பல்லாம்...’ஒன் தங்கச்சிய கட்டிக் குடுக்கறேன்னு சொல்லி, என்ன ஏமாத்திட்டடா.. பெருமாளு’...ன்னுவான் அவன்..!”
ஆனால்... எப்பொழுதெல்லாம், தன் நண்பனின் இந்த குற்றசாட்டை வெளிப்படையாக வாய் விட்டு சொல்லிவிடுகிறாறோ...அப்போதெல்லாம், தலை குனிந்து, ஒரு நிமிடம் அவை மௌனமாகிப் போவதை நான் பார்த்திருக்கிறேன்! அந்தக் கணங்களில், அப்பாவின் கண்களில், ஒரு துளி சோகத்தையும் சேர்த்தே கண்டிருக்கிறேன்!
அதுவரை....பழைய கதை பேசிய அம்மா, அப்பா, சித்தப்பா... பேசாவிட்டாலும், உடனிருக்கும் அண்ணன்....அனைவருமே, சட்டென்று பேச மறந்தவர்களாக மாறிப் போய் விடுவார்கள்! வீட்டுக்குள் ஒரு சூனியம் வந்து குடிக்கொண்டுவிடும்...”சோறு எடுக்கட்டுமா அத்த...?” என்று, குசினியில் இருந்து அண்ணி குரல் கொடுக்கும் வரை!
ஏன் அந்த திடீர் மௌனம் என்று, அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது! நண்பனுக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் போனோமே என்றா... அல்லது உடன் பிறந்தவள் என்று கூட நினைக்காமல்....மூச்சை உள் இழுத்து, வெளி விடும் கணத்துக்குள், உறவை முறித்துக்கொண்டோமே என்றா....எதைக் குறித்து அந்த நிமிடங்களில், என் அப்பா உள்ளுக்குள்ளேயே துக்கித்துப் போயிருப்பார்?
ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, தங்கையை திருமணம் செய்து தருகிறேன் என்று, நண்பனுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் போனதற்காக, உடன் பிறந்தவளையே, அப்பா ஒதுக்கி வைத்தார் என்ற தெள்ளத் தெளிவான கதைச்சுருக்கம் தெரிய வந்த போது...அப்பா இறந்து போயிருந்தார்!
குடும்ப வரலாறு சொன்ன அக்காவிடமும்... அம்மாவிடமும்...எதிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தேன், “அவங்க மேல என்ன தப்பு..? இங்க, வேற யாருக்கோ வாக்கு கொடுத்திருக்குன்னு தெரிஞ்சும், கூட்டிட்டுப்போயி, யாருக்கோ கல்யாணம் பண்ணி வச்ச... அம்மாவையும், பெரிய தங்கச்சியையும் ஒறவு கொண்டாடலாம்... ஆனா, ஒன்னும் பண்ணாதவங்கள, ஒதுக்கி வைப்பீங்களா..? நல்லா இருக்கே... ஒங்க ஞாயம்..!”
“ஏன் ...எங்கிட்ட பாயற...? எல்லாம் ஒங்கப்பன் பண்ண வேல..!”
அந்தப் பொல்லாத நாளில், அப்பாவிடம் வெறகு கட்டையால் பட்ட அடியின் வலி, அம்மாவுக்கு எப்போதுமே மிச்சம் இருந்தது நிஜம்!! அதன் தாக்கம்தான் இந்த பாய்ச்சல்!
கடந்த ஜூலையில், அம்மா இறந்து போவதற்கு, சில வாரங்களுக்கு முன்புகூட... எப்படியோ உள் நுழைந்து விட்ட, அந்த அத்தையைப் பற்றிய உரையாடலில்... ஆங்...அவர் பெயர் என்ன என்று விசாரிப்பில் ஆரம்பித்த பேச்சு தொடர்ச்சியில், அண்ணி இப்படி கேட்டார்...
“கௌரியோட மொக ஜாட... அவங்க மாதிரித்தான அத்த..?”
அண்ணனோடு, பல முறை சிங்கப்பூருக்கு போக வாய்த்த்தால், நான் பார்க்காத என் சின்னத்தையை அண்ணி பார்த்து வந்திருக்கிறார்!
“மொகம்.. கொரலு.. எல்லாம், அந்தப் பிள்ள மாதிரிதான்..! ஆனா, அந்தப் பிள்ள... ஆளு நல்ல நெறம்..!”
அவங்க ரொம்ப அழகுங்கறதுனாலத்தான், அப்பாவோட கூட்டாளி, அவங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்டாரோ..?
அப்ப, அந்த “மாமா” எப்படி இருந்திருப்பாரு? அத்தை மாதிரியே நெறமா.. அழகா....?
ஐயோ! எத்தனையோ தடவ... கூட்டாளியப் பத்தி பேசுன அப்பா, அவரு பேர சொல்லி நான் கேட்காம போயிட்டனே...
இப்ப வயசு போன காலத்துல ...எப்படி இருப்பாரு அந்த அங்கிள்? எங்க இருக்காரு...?
எப்பவாவது பார்க்க வாய்க்குமா.. அவர..?
ஏன்... பார்த்து என்னப் பண்ணப் போற...?
வேற என்ன..? “எங்க அத்தையக் கட்டிக்கிட்டு, எனக்கு மாமாவா ஆக இருந்தது நீங்கதானா.. அங்கிள்..?” ன்னு ஒரு கேள்வி..! அவ்வளவுதான்!
மனதோடு என் உரையாடல் இந்த ரீதியில்தான் ஆரம்பிக்கும்! அதன் நீட்சிக்கு, அளவே கிடையாது!
“முருகம்மா” என்ற தன் முன்னால் காதலியின் பெயரை, எந்தப் பிள்ளைக்காவது வைத்திருப்பாரா, அவர்?
முருகம்மா என்று பழங்காலமாய் வேண்டாம்! ஆனால், முதல் எழுத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, முல்லை, முத்தமிழ் செல்வி என்று பெயர் வைத்திருக்கலாம்!
சுத்தம்! வெறும் ஆம்பள பிள்ளையா பொறந்திருந்தா... எப்படி பொருந்தும்; முல்லையும், முத்தமிழ் செல்வியும்?
ஹூம்.! முருகையா... முரளி... இப்படி ஏதும் வச்சிருப்பாரு...
ரொம்பத்தான்! ஆனா... இந்த வீட்டுப் பெரியவங்க .. பட்டும் படாமலும் சொன்ன கதை மாதிரி, அவரு ஏதும் சொல்லியிருப்பாரா... தன்னோட காதல் தோல்வி பற்றி..?
ஏன் இருக்காது..? அவரும் நிச்சியமா கல்யாணம் பண்ணியிருப்பாருதான..? அப்ப அவரு மனைவிக்கிட்டயாவது சொல்லியிருப்பாரு..!
ஐயோ பாவம்! அந்த அண்டி, கொஞ்சம் காயப்பட்டுருப்பாங்க.. புருசன் மனசுல, தனக்கு முன்னால வேற பொண்ணு இருந்திருக்கான்னு தெரிஞ்சதும்..!
என்னைக்காச்சும்... வாழ்க்கையில ... ஒரே ஒரு தடவ... சிங்கப்பூருக்கு வாழப் போயிட்டவள.. கண்ணாலப் பார்க்கணும்னு ஆசப் பட்டுருப்பாரா.. அவரு..?
இருந்திருக்கலாம்.. இல்லாமலயும் இருக்கலாம்...! ஆனா... இவங்கத்தான்... அப்பவே போய் சேர்ந்துட்டாங்களே..!
சே! கடவுளுக்கு கருணையே இல்ல!
ஆசைப்பட்ட மனுஷன் கையில போய் சேர்ந்திருந்தா.. அற்பாயுசுல செத்திருப்பாங்களா?
சிங்கப்பூரு சீமான்... அடிக்கிறப்பல்லாம்... அவங்களுந்தான் தன்னை கட்டிக்க ஆசைப்பட்ட, பங்சார் ரோட்டு அத்தாப்புக் குடிசைக்காரன நெனைச்சிருப்பாங்களா...?!
“தங்கத் தட்டுல தாங்க வேணாம்... கொறஞ்ச பட்சம்... கொடும பண்ணாம குடுத்தனம் பண்ணியிருப்பாரே!” ன்னு, நெனப்பு ஓடியிருக்காது...... ஒரு நாளாவது..?
ஆ...! யாருக்குத் தெரியும்... இவரு லட்சணமும்தான்?!
அது கெடக்கட்டும்! தங்கச்சிய கட்டிக் குடுக்கறேன்னு வாக்குக் குடுத்துட்டு, செய்யாம விட்டாரே நம்ம வீட்டு வயசான மனுசன்.... அவருக்கு சாபம் ஏதும் குடுத்துருப்பாரா அந்த அங்கிள்...?
இருக்கலாம்... கோவத்துல...!
அதான் ... இந்தக் குடும்பத்துல காதலும் சரி, கல்யாணமும் சரி... வெளிய சொல்ல முடியாத கொடுமையா இருக்கு போல...
என்னப் பண்ணலாங்கற..?
என்னைக்காவது ஒரு நாளைக்கி, நான் அந்த மாமாவ பார்க்கணும்! பார்த்து, அவருக்கிட்ட சொல்லனும், “எங்கப்பா மேல எந்த தப்பும் கிடையாது..! செய்யாத குத்தத்துக்காக.... தவிச்சி, தவிச்சி... கரையான் அரிக்கிற மாதிரி, கவலையால மனச அரிச்சிக்கிட்டு... எங்கப்பா உள்ளுக்குள்ளயே புழுங்கி செத்திருக்காரு! தயவு செஞ்சு, அவரு மேல உள்ள கோபத்த மறந்து, மன்னிச்சுடுங்க!
ஏய்..! போதும்... போதும்...! ஒங்கத்த, ஒங்கப்பா, அம்மா, அண்ணன், அக்கா, பெரியத்த, அவங்க ஆம்பள பிள்ளைங்க ரெண்டு... ரொம்ப ஏன்... நம்ப கதாநாயகி முருகம்மாவோட ரெண்டு பிள்ளைங்க கூடன்னு... பரம்பரையில பாதி காலி! இதுல.... அந்த அங்கிள்தான், ஒன் குடும்பத்துக்கு மன்னிப்புக் குடுக்க உயிர கையில புடுச்சிக்கிட்டு காத்திருக்காரா...?
ஆமால்ல..!!
ஒரு நாவலின் ஆரம்பம் மட்டும் வாசிக்கக் கிடைத்தால், யாராக இருந்தாலும்தான் வேறென்ன பண்ண முடியும், இஷ்டத்துக்கு கற்பனை பண்ணுவதைத் தவிர!
அப்படித்தான் என் மனமும் இஷ்டத்திற்கு கதை பின்னிக் கொண்டு கிடக்கிறது; கற்பனைக்கு கடிவாளம் போட முடியாமல்!
ஒவ்வொருவரின் தலையிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கும், அடுத்த வரி வாசிக்க கிடைக்காத இந்த புதிர் வாழ்க்கையில்.... என் கற்பனை மட்டும் கட்டுக்குள் அடங்குமா.?
வாசிக்க்க் கிடைக்காத பக்கங்களுக்காக... புதிது புதிதாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறேன்.. அதுவா...? இதுவா? என்று நிர்ணயிக்க இயலாமல்..!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எழுத்து : சிதனா
மங்களகௌரி பெருமாள்
2010 ஆம் ஆண்டு தமிழ் நேசனில் பிரசுரிக்கப்பட்ட கதை. அதே ஆண்டு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் காலாண்டு சிறப்பு சிறுகதையாக தேர்வு பெற்று பரிசு பெற்றது.
No comments:
Post a Comment