ஆடலும் சின்னத் தேடலும்
======================
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு எழுத்தாக்கத்துக்காக பல்வேறு நாட்டின் நடனங்கள் பற்றிய
குறிப்புகளை திரட்டிக் கொண்டிருந்த போதுதான், நமது தென்னிந்திய நகரங்களிலும்
பட்டித்தொட்டிகளிலும் ஆடப்படும் சில நடனங்கள் இங்கேயும் (மலேசியா) உயிர்வாழ்ந்துக்
கொண்டிருப்பது தெரிந்தது. ஆடு களமும் ஆடலுக்கான தேவையும் வெவ்வேறாகவே இருந்தாலும்,
அதனூடே மெல்லிய ஒற்றுமைகளை தெள்ளத் தெளிவாகவே காண நேர்ந்தது. இருப்பினும்
தொன்றுத்தொட்டு கலை கலாச்சாரம், உணவு, உடை, பண்பாடு என தன் பங்களிப்பை உலகம்
முழுக்க தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கும் நமது முப்பாட்டனின் மண்ணிலிருந்து, இங்கே தடம்
பதித்துக் கொண்டிருக்கும் இந்த நடனங்களுக்கும் இந்த மண்ணிலேயே ஆடப்படும் நடனங்களுக்கும்
இடையே தென்படும் கலாச்சார அதிர்வுகளே இந்த தேடலை மேற்கொள்ள தூண்டியது!
பொய்கால் குதிரை
===============
குதிரை போன்ற தோற்றமுடைய கூடு ஒன்று. அதன் முதுகு பகுதியில் ஒரு ஆள் தன்னை
பொருத்திக் கொள்ளும் அளவுக்கு இடைவெளி. அந்த இடைவெளிக்குள் உட்புகுந்துக் கொண்டு
அல்லது அந்த கூட்டினை தனது இடுப்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டு, குதிரை சவாரி செய்வது
போல பாசாங்கு செய்து ஆடப்படும் நடனமே பொய்க்கால் குதிரை நடனம்! குதிரையின் நான்கு
கால்களுக்கு பதில் இரண்டு கால்களுடனேதான் ஆட்டம் வெளிப்படுத்தப்படும்.
காலம்
=====
தஞ்சாவூரில் தோன்றியதாக நம்பப்படும் இவ்வாட்டத்தின் பூர்விகம் மராட்டியம் என்றும் தஞ்சையை
ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் தென்நாட்டிற்கு வந்திருக்கலாம் என்றும் ஒரு கணிப்பு
உண்டு. நடனத்தின் கருவானது ராஜபுத்ர மன்னன் ராஜாதேசிங்கு அவர்களின் புகழ், கீர்த்தி இவற்றை
எடுத்து சொல்லும்படியாக இருக்குமாம். சில இடங்களில் புராண கதைகளே நாட்டிய கருவாகவும்
அமைவதுண்டாம்.
அதே சமயத்தில் சேர சோழ பாண்டிய காலத்திலிருந்து வழக்கத்தில் இருந்து வந்த கலை
இதுவெனவும், அரசவையிலும் இந்நடனம் தனக்கான இடத்தைப் பெற்றிருந்தது என்பதாகவும் கூட
ஒரு செய்தியை காண நேர்ந்தது. எது உண்மை?
சிலப்பதிகார மாதவி ஆடிய மரக்காலாட்டம்
===================================
சிலப்பதிகார காதையில் வரும் மாதவி எனும் கதாபாத்திரம் ஆடல் கலையில் சிறந்தவள். அவள்
ஆடிய பதினொரு வகை ஆட்டங்களில், துர்க்கை ஆடிய மரக்காலாடலும் ஒன்றாகும் எனும்
தகவலை கண்ணுற்றபோது, இஃது என்ன புதுப் பெயர் என்று தேடலில் இறங்க வேண்டியதானது.
அப்படி நூல் பிடித்துக் கொண்டு போகும்போது, இந்துக்களின் பெண் தெய்வமான துர்க்கை ஆடிய
நடனம் இந்த மரக்காலாடல் என்கிற செய்தி நமக்கு கிடைக்கிறது. துர்க்கையை கொல்ல அவளின்
எதிரிகளானவர்கள் கொடிய விஷமிகு பாம்பாகவும், தேளாகவும் உருமாறி வந்த போது, அவர்களை
அழிக்க தன் கால்களில் மரத்தால் ஆன பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு ஆடியதாகவும், அந்த
கணமான கட்டையினால் தாக்கப்பட்டு அந்த நச்சு ஜந்துக்கள் உயிர் இழந்ததாகவும் புராண கதைகள்
வழங்கப்படுகின்றது. அது மட்டுமல்ல, பொய்க்கால் நடனம் என்ற பெயரும் துர்க்கை ஆடிய இந்த
மரக்காலாடல் என்ற நடனத்தின் பின்புலனே என்பதும் தெரியவருகிறது. அந்த வகையில் இந்நடனம்
சேர சோழ பாண்டிய காலத்திலிருந்தே தொன்று தொட்டு வருகிறது எனும் கூற்றினை நாம்
உண்மையென கொள்ளலாம்! ஒருவேளை, மராட்டியர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்தப்பின் இந்நடனம்
பரவலாக புகழ் பெற்றிருக்கவும் கூடும்! (இந்த கால வேறுபாட்டினை யாரேனும் உறுதிப்படுத்தினால்
நாம் ஏற்றுக் கொள்வோம்.)
இதையும் தவிர்த்து, காதலால் கட்டுண்ட தன் மகளை அந்த காதலனுக்கு மணமுடிக்க பெண்வீட்டார்
மறுத்த போது, காதலன் தனது எதிர்ப்பை தெரிவிக்க, இலைகளால் ஆன பொய்குதிரை ஒன்றை
தயார் செய்து, அதை கட்டிக் கொண்டு தெருவில் நின்று ஆடினான் எனவும் ஒரு செய்தி இருக்கிறது.
இது தொல்காப்பியத்தில் வருகிற செய்தியாகும்.
நான் நேரிடையாக சந்தித்த திருமதி சந்திரா சந்திரன் என்பவர், நாகர்கோயிலை பிறந்தகமாக
கொண்டவர். இவரின் சொந்த ஊரான தாழைக்குடியில் பொங்கல் முடிந்து வரும் திருக்கல்யாணம்
எனும் வைபவத்தில், கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு விஷயமே இந்த பொய்க்கால் குதிரை
ஆட்டம்தான் என தகவல் தெரிவித்தார்.
இன்றுவரை தொடர்கிறதாம் இந்த விழாவும் பொய்க்கால் நடனமும்!
குதிரை வடிவமைப்பு
================
மூங்கில் தப்பைகளாலும், காகித அட்டையாலும் வடிவமைக்கப்பட்டு, எடுப்பான வர்ணங்களாலும்
பட்டுத் துணிகளாலும் மற்றும் குஞ்சலம் போன்ற அலங்கார பொருட்களாலும் அழகு செய்யப்பட்ட
குதிரை கூடே பொய்க்கால் நடனத்துக்கு பிரதானம். இக்கூடினை மாட்டிக்கொண்டு ஆடும்
இந்நாட்டியத்தின் சிறப்பே, கலைஞர்கள் பொய்கால்களை தங்கள் காள்களோடு இணைத்துக் கொண்டு ஆடுவதுதான். உற்று கவனித்தால் அப்பொய்க்கால்கள் குதிரையின் குளம்பினை ஒத்திருப்பதை அறியலாம். இதற்கு அதிக பயிற்சி தேவைப்படுகிறது!
ஆணும் பெண்ணுமாய் ஜோடி சேர்ந்து ராஜா ராணியாய் வேடமிட்டு ஆடும் இவ்வாட்டத்திற்கு,
புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என பல பெயர்கள் இருப்பது போல, மற்ற
மாநிலங்களில் இடத்திற்கு தகுந்த பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரிசாவில் - சைத்திகோடா
அல்லது கெயுதா என்றும் ஆந்திராவில் திலுகுர்ரம என்றும் அழைக்கப்படும் இந்நடனம்
ராஜஸ்தானில் கச்சி கொடியெனவும், கேரளத்தில் குதிரைக்களியெனவும் நாமகரணம் பெறுகிறது!
பொதுவாக நடன கலைஞர்கள் நடனத்துக்கு முன்பு செய்து கொள்ளும் ஒப்பனை நாட்டார் நடன
கலையில் வண்ணமயமாக இருக்கும். மஞ்சள், இளம் சிவப்பு, நீலம் போன்ற பளபள வர்ண
உடையில், ஆண்கள் தலையில் கிரீடம், இடையில் வாள் போன்ற அலங்காரத்துடனும், பெண்கள்
ஒரு மகாராணிக்குறிய சகல அம்சத்துடன் கழுத்து, காதுகள் மற்றும் கரங்களில் நீள முத்து மாலை,
ஜிமிக்கி, மாட்டல், கண்ணாடி வளையல், நீள ஜடையில் கலர் கலராய் சுற்றிவிடப்பட்டிருக்கும்
காகிதப்பூ அலங்காரத்திலும் பார்ப்போரை பாதி மயக்கிவிடுவர். போதாக்குறைக்கு காலில் கொஞ்சும்
சலங்கையும் நையாண்டி மேளமுமாக காண்போரின் கண்களை சுண்டி இழுப்பதோடு அவர்களையும்
தாளத்திற்கேற்ப ஆட வைத்துவிடுகிறது இந்த நாட்டுப்புறக் கலை.
"கொக்கலி ஆட்டமென்ற
உயரக்கால் ஆட்டத்தில்
பொய் கால்களைப் பூட்டி
கொக்கின் கால் போல்
நீண்ட கட்டையோடு
ஆறடி உயரம் வரை
ஆகாயத்தில் நின்றாடும்
ஆட்டமிது தழன் கலை..."
இசைக்கேற்ப ஆண் நடன கலைஞர் பெண் கலைஞரை நோக்கி முன்னேறவும், பெண் கலைஞர்
தள்ளி தள்ளி போவதுமாக, பார்ப்போரை மயங்க வைக்கும் அசைவுகளை தன்னகத்தே
கொண்டிருக்கும் இந் நடனம் கோயில் திருவிழாக்களில் தேருக்கு முன்பு ஆடப்படுவதாலும்,
பொதுமக்களை மகிழ்விப்பதாலும் இஃது "பொதுமக்கள் கலை"யெனவும் வழங்கப்படுகிறது.
இந்நடனத்திற்கென்று பிரத்தியேகமாக பாடல்கள் ஏதும் உண்டா எனத் தெரியவில்லை இணையத்தில் எந்த தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், சேலம் கலைக் கல்லூரி மாணவி
செல்வி அனிதா ராஜேந்திரன் அவர்கள் ஒலி வடிவில் அனுப்பித் தந்த ஒரு பாடலின் சில வரிகள்
பின் வருமாறு:
"வெள்ளக் குதிரையிலே ஐயனாரே
வேகமாய் வந்தருளும் ஐயனாரே
எல்லையில் கோயில் கொண்ட ஐயனாரே
எல்லையுண்டோ உந்தனக்கு ஐயனாரே.."
இப்படி காலத்தைத் தின்று காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரை நடனம்,
கூடா கேப்பாங் எனும் பெயரில் மலேசியா, மலாயாவாக அறியப்படுவதற்கு முன்பிருந்தே
புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பது செய்தி.
கூட கேப்பாங்
===========
ஜோகூர் மாநில மக்களின் மனம் கவர் நடனமாக இருக்கும் "கூட கேப்பாங்" (kuda kepang)
ஜாவாவிலிருந்து இங்கே 15ஆம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த நடனமாக அறியப்படுகிறது. காலத்தை
விழுங்கிய கலை என்கிறார்கள் இந்த கூட கேப்பாங் பற்றி அறிந்தவர்கள்! இந்த நடனம் முழுமையாக
இந்தோனிசியாவின் ஜாவா வழி தோன்றல் எனவும், இசுலாமிய தாக்கம் நிறைந்தது எனவும் வரலாறு
சொல்கிறது. நடனமணிகளின் ஆடைகளில் ஜாவாவின் பாரம்பரியமும், கதை நகர்வில் இசுலாமிய
தாக்கமும் வெளிப்படுவதை ஆய்வாலர்கள் அடிக்கோடிட்டு காட்டுகிறார்கள்.
கூடா கேப்பாங் - அறிமுகப் படலம்
=============================
வாலி சோங்கோ என்பவரால் பதினைந்தாம் நூற்றாண்டில் ஜாவாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாக
சொல்லப்படுகிறது இக்கலை. 'வாலி சோங்கோ" இசுலாமிய மதத்தை பரப்பும் முயற்சியில்
இருந்தவராதலால், பொதுமக்களை அவ்வளவு எளிதில் நெருங்க முடியவில்லை. அவர்களை
கவர்வதற்காகவே, நடனமும் குதிரையேற்றமுமாக தன் மேல் கவன ஈர்ப்பு ஏற்படும் வண்ணம் அவர்
நடந்துக் கொள்ள, குதிரை எனும் அவ்வளவு எளிதில் காணக்கிடைக்காத மிருகத்தால் ஈர்க்கப்பட்டு,
மக்கள் இவர் பால் தங்கள் கவனத்தை திசைத்திருப்ப, சிறிது சிறிதாக தன் முயற்ச்சியில் வெற்றி
அடைகிறார். நாளாவட்டத்தில், நிஜ குதிரையின் மறைவிற்குப் பின், மிருகங்களின் தோல், மற்றும்
மூக்கில்களால் ஆன குதிரை பொம்மைகளை வடிவமைத்து இக்கலையினை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர் அக்கால மக்கள்.
இந்த கூடா கேப்பாங் பற்றிய இன்னொரு மாயா உலக கதையும் உண்டு. அதாவது தனது
துணையை இழந்த தேவலோக குதிரை ஒன்று, (kuda sembrani) துணையைத் தேடி மத்திய ஜாவா
பகுதிக்கு வந்ததாகவும், துணையைத் தேடி கண்டடைந்ததும் ஜோடியாக நடனம் புரிந்து மகிழ்ச்சியை
வெளிப்படுத்தியதாகவும், அதன் பின்னரே இக்கலை வெளிப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நமது தென்னிந்தியாவில் பல பெயர்களில் அழைக்கப்படுவது போல ஜாவாவிலும் இக்கலை பல
பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது! ஜாரான் கேப்பாங் (jaran kepang), கூட லும்பிங்
(kuda lumping), ஜாத்திலான் (jathilan), ஈபெக் (ebeg) போன்றவை அவற்றுள் சில. ஜாவா மொழியில்
ஜாரான் என்றால் குதிரை என்றும் கேப்பாங் என்றால் முடைதல் (மூங்கிலால் முடைந்த குதிரை
பொம்மை) என்று அர்த்தம்.
உருவமைப்பும் ஆடல் கருவும்
========================
ஒரு குதிரை போல மூங்கில் அல்லது மிருகங்களின் தோலால் உருவமைக்கப்பட்டு, வர்ணங்களால்
அழகூட்டப்படும் இந்த பொம்மைகளுக்கு, கால்கள் கிடையாது. இடுப்பின் பக்க வாட்டில் கட்டிக்
கொண்டு, ஒரு கையால் அந்த குதிரையை பிடித்தபடியே நடனமணிகள் ஆடுவர். ஆரம்ப
காலங்களில் நடனத்தை ஆட்டி வைக்கும் குருவானவர், கையில் ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு,
அந்த கயிற்றினை முன்னும் பின்னும் அசைத்து நடனமணிகளுக்கு அசைவுகளை சொல்வாராம்.
அனைத்து நடன அசைவுகளும் அந்த குருவின் கட்டளை படியே நிறைவேற்றப்படும். நடனத்தின்
மூல கரு, இசுலாமிய வரலாற்றினை அடிப்படையாக கொண்டிருக்கும். உதாரணமாக நபிகளார்
அவர்களும் அவரது உடனுறை பரிவாரங்களும் மேற்கொண்ட போர்களை மையப்படுத்தியே
இந்நடனம் வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது வரலாறு.
மாந்திரீக சக்தியும் கூடா கேப்பாங் நடனமும்
====================================
ஆதி கால நம்பிக்கையின் படி, இந்த கூட கேப்பாங் நடனத்துக்கு பயன்படுத்தப்படும் குதிரை
பொம்மைகள், ஏதோ ஒரு மந்திர சக்தியால் கட்டுண்டிருக்கின்றன. அதன் தொடர்பில், இந்த நடனம்
ஆரம்பிக்கும் முன்பு ஒரு ஆன்மீக சடங்கு செய்யப்படுகிறது. இந்த சடங்கு
நடைப்பெறவில்லையெனில், நடன கலைஞர்களுக்கும் நடனத்தை கண்டு களிக்கும்
பார்வையாளர்களுக்கும் தீங்கு விளையும் என்று நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில்,
முதலில் "ஆத்மாக்களுக்கு" சாந்தி பூஜை செய்யப்படுகிறது. பின்புதான் 40 அடிக்கு 60 அடி நீள
அகலமான நாட்டிய அரங்கு திறக்கப்படுகிறது.
இந்த சடங்கை நடத்தி வைக்கும் பாவாங் (Pavang) எனப்படுபவர் மாந்திரீக கலையில் தேர்ச்சி
பெற்றவராய் இருப்பார். கூடா கேப்பாங் நடனத்தின் அதிர்வினால் தங்களின் இயல்பு நிலையின்
அமைதியை இழந்து விடக்கூடிய ஆத்மாக்கள், எந்த வித தீங்கையும் இழைக்கக் கூடும். ஆகவே
அந்த ஆத்மாக்களுக்கு முதலில் படையலிடுவர். படையலில், தேங்காய், அரிசி, பழுத்த வாழை கனி,
வெள்ளைத் துணி, ஊசி, நூல், சாம்பிராணி, வெள்ளை நிற கோழி, நெல், முட்டை, பூக்கள்
ஆகியவை வைக்கப்படும். ஆட்ட கலைஞர்கள் குறைந்தது 9லிருந்து அதிகபட்சம் 15 பேர் வரை
இருப்பர். இந்நடனத்தை வழங்குபவர்கள் அனைவரும் ஆண் கலைஞர்களே!
இந்த நடனத்தின் உச்சக்கட்டமாக ஆடல் கலைஞர்கள் வினோத உடல் அசைவுகளை
வெளிப்படுத்துவது சகஜம். எல்லா கலைஞர்களும் அப்படி செய்வதில்லை. ஆனால் ஒரு சிலர்
தங்களை மறந்த நிலையில், திடீரென 6அடி உயரத்துக்கு குதித்து மேலெலும்புதல், கயிற்றில்
தொங்குதல் போன்ற சராசரி மனிதர்களால் செய்ய முடியாத காரியங்களை செய்வர். இவர்கள்
உடலில் வேறொரு ஆன்மா புகுந்து இவ்வாறு செய்யத்தூண்டும் என நம்பப்படுகிறது. இவர்களின்
அந்த செய்கைக்கு ஏற்ப சரணை, கெண்டாங் போன்ற இசைக்கருவிகள் ஓங்கி இசைக்கப்படும். சக
கலைஞர்களும் விடாது நடனமாடுவர். இல்லையென்றால், வேறொரு ஆன்மாவால்
பீடிக்கப்பட்டவர்களால, சக கலைஞர்கள் தாக்கப்படுதலும் நடக்கும். வெறியாட்டம் தொடர்ந்து
கட்டுக்கடங்காமல் போகும் பட்சத்தில், மந்திரவாதிகள் (போமோக்கள்) மந்திர உச்சாடனம் செய்து,
அவர்களை ஒரு கட்டுக்கு கொண்டு வருவர்.
கலா ரசனைக்கு அப்பாற்பட்டு, உடலுக்குள் புகுந்த தீய சக்திகளை விரட்டவும், நாள்பட்ட
நோய்களை குணபடுத்தவும் கூட இக்கலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, நடனத்துக்கு
பயன்படுத்தப்படும் குதிரை பொம்மைகள் பாதுகாப்பாக, தனிப்பட்ட இடங்களில் வைத்திருக்க
வேண்டியது அவசியமாகிறது. இல்லாவிட்டால் கோபம் கொள்ளும் "பொம்மை குதிரைகள்"
அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளை நடத்த விடாமல் செய்து விடும்.
இசைக்கருவிகள்
=============
இந்நடனத்திற்கு பின்னனி இசையாக கெண்டாங் (Gendang) முக்கிய இசைக்கருவியாக
பயன்படுத்தப்படுகிறது. இதனூடே அங்லுங் (angklung,), கோங் (gong), கினோங் (kinong), ஜிடோர்
(jidor ) ஆகியவை வாசிக்கப்படும் வாத்திய கருவிகளாக இருக்கின்றன. ஆனால் இவையனைத்தும்
ஒரே நிகழ்வில் வாசிக்கப்படுவதில்லை. கலையை கற்றுக் கொடுத்த ஆசிரியர் எந்த வகையான
இசைக்கருவிகளை பயன்படுத்தினாரோ அவையே மாணவர்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
ஆடை அணிகலன்கள் நடன கலைஞர்களின் விருப்பத்தை பொருத்தது என்றாலும்கூட அவை
சீருடை பாணியில் இருக்க வேண்டியது அவசியம் .
முன்பே பார்த்தது போல, போமோ அல்லது தலைவரால், வேண்டிய பொருட்கள் படைக்கப்பட்டு,
அதன் பின் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு ஆத்மாக்களை சாந்தி படுத்திய பின்பே ஆடுகளம்
முறைப்படி திறக்கப்படும். அப்படி திறக்கப்படும் போது உச்சரிக்கப்படும் மந்திர உச்சாடனம்:
"AssalamualaikumYa Nini Dayang, Kiki DanyangSeng manggoni
Kawasan ikiAku jalok sawap pangdanganne Yo, yo. Ya Allah, ya
Allahku dikongkon budak gelanggang iki Biso podo selamat
KabehWong seng main jarang semberani iki kabeh sak enengiYa, yo,
Ya Allah, ya Allah" -
இங்கே "Nini Dayang மற்று Kiki Danyang எனப்படுபவை ஆடுகளத்தின் கண்ணுக்கு புலப்படாத
ஆதி ஆன்மாக்கள் அல்லது ஜின் என்று அறியப்படுகிறது. அந்த பகுதி இவற்றின் கட்டுப்பாட்டில்
உள்ளவை. இவற்றை சாந்த்திப் படுத்தவே படையல் இடப்படுகிறது. இவற்றின் அனுமதியை பெற்றப்
பின்பே நடனம் அரங்கேற்றப்படுகிறது. பூமியில் இருப்பதாக நம்பப்படும் இவர்களின் அனுமதியோடு
வானவீதியில் வாழ்வதாக நம்பப்படும் கண்ணுக்கு புலப்படாத மெல்லிய ஆத்மாக்களின்
அனுமதியையும் வேண்டி, பாவாங் கீழ் கண்டபடி மந்திர உச்சாடணம் செய்வார்:
"YaNini Dayang, Kiki DanyangSeng manggano awang-
awanganSeng jenenge Jaran SemberaniAku njalok turun
Semurup Supayo seng main Jaran Semberani ikiPodo Selamet
KabehYo yo Bi 's-mi 'illahi 'i-rahmani 'r-rahimkerusi belakangku,
Mutujalil dipangkuKadimu kananku, kanjuga naiiranya empatOjo
Merosak, ojo membinasa ahli kumpulan aku"
மேற்குறிப்பிடப்பட்டுள்ள மந்திர உச்சாடணம் வழி, பாவாங் எனப்படுபவர் மேலுலகத்தில் வாழ்வதாக
நம்பப்படும் ஆன்மாக்களை அழைத்து, தங்களின் நிகழ்வில் எந்த விதமான பங்கமும் வராமலிருக்க
ஆசி புரியும்படி வேண்டிக்கொள்வார். அத்துடன் நடன கலைஞர்களுக்கும், நடனத்தை காண
வந்திருக்கும் பொது மக்களுக்கும் எந்த விதமான தீங்கும் நேரா வண்ணம் காத்தருளும்படியும்
வேண்டிக் கொள்வார். இதன் பின்னரே, கோங் எனப்படும் இசைக்கருவியை மூன்று முறை
இசைத்து நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவங்கி வைப்பர்.
இப்படி அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்படும் நிகழ்வின் போது, தன்னை மீறிய சூழலுக்கு
போய்விடும் நடனகலைஞரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, "பாவாங்" மந்திர உச்சாடனம்
செய்வார். ஏனையோர் சம்பந்தப்பட்டவரின் கைகளையும் கால்களையும் கெட்டியாக
பிடித்துக்கொள்வர். இருப்பினும் மொத்த நிகழ்வின் போதும் சிவப்பு வர்ண துணி முற்றாக
விலக்கப்படும். கண்ணாடித் துண்டுகள் இல்லாமலும் பார்த்துக் கொள்வர். தன்னை மறந்த நிலையில்
உள்ளவர் அவற்றை உட்கொண்டுவிடும் அபாயம் இருப்பதே இதற்கு காரணம்.
பொதுவில் "கூட கேப்பாங்" என்றே இந்நடனம் வழக்கத்தில் சொல்லப்பட்டாலும், உட்பிரிவுகளாக,
தாரியான் சோலோ (tarian solo), தாரியான் செலெண்டாங் (tarian selendang), தாரியான் பூச்சோக்
ரெபுங் (tarian pucuk rebung), தாரியான் லெங்காங் கிப்ரா (tarian lenggang kiprah), போன்றவை
சொல்லப்படுகின்றன. இவை ஆடல் கலையை கற்பிக்கும் குருவின் பாடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
(தாரியான் என்றால் நடனம்).
பாவாங் எனப்படும் தலைவரால் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நடத்தி வைக்கப்படுவதால்
அவருக்கு தட்சணை வழங்குதலும் முக்கிய அங்கமாக கொள்ளப்படுகிறது, சில சாம்பிராணி
கட்டிகள், தூபக்கால், கோழி இறைச்சி மற்றும் காய்கறி கலவைகளால் சேர்த்து பிசையப்பட்ட கலவை
சோறு, பலகாரங்கள், ஒரு கேட்டில் நீர் மற்றும் RM2.25 தட்சணை ஆகியவை முக்கியமாக
வழங்கப்பட வேண்டிய பொருட்கள். ஒவ்வொரு முறையும் நடன அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு
செய்யும் குடும்பத்தினர்., இந்த ஆட்ட குழுவிற்கு 200 ரிங்கிட் சன்மானம் வழங்குவர்.
கூடா கெப்பாங் நடன கலையின் போது வழங்கப்படும் பாடல்களில் ஒன்று:
Ayo....konco....konco....kita nonthon kuda kepang
Cik cik nong cik cik gung
Ayo...konco-konco nontonnya janga dekat-dekat
Awas-awas awas-awas
Kuda kepang lagi kesurupan
Cik Cik nong cik cik gung
Pang....Pang....Pang....
Kuda kepang.
Makan padi makan rumput
Makan beling
Pang...Pang...Pang...
Kepang-kepang kuda lari
Sambil lompat-lompathan
- Joshua
தற்சமயம், கூடா கேப்பாங் கலை அவ்வளவு சிறப்பான இடத்தில் இல்லை என்பதை சொல்லத்தான்
வேண்டியிருக்கிறது. இதற்கு ஒலி/ஒளி ஊடகங்களின் தாக்கமும், சமூக வலைத்தலங்களுக்கு
வழங்கப்படும் முக்கியத்துவமும் மூல காரணங்கள் எனினும், ஆதி காலத்தின் வழிமுறையானது
இசுலாமிய நம்பிக்கைக்கு புறம்பானது எனும் பட்சத்தில், அந்நடனம் இப்பொழுது அதே
பாரம்பரியத்துடன் வழங்கப்படுவதும் இல்லை. சாதாரணமாகவே மேடையில் தோன்றி, அங்க
அசைவுகளுடன் அரங்கேற்றி வருகிறார்கள். இதுவும் இக்கலையின் சரிவுக்கு ஒரு காரணமாக
இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. மேலும் இக்கலையை முறைப்படுத்தவும் நெறிப்படுத்தவும்
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் தற்போது இல்லை என்பதும் ஒரு காரணியே.
நன்றி: கூகுள் இணையத்தலம்
புவான் ஹனிபா - கோத்தாபாரு, கிளந்தான்
இஞ்சே ஹாடி - கோலாலம்பூர்
செல்வி அனிதா ராஜேந்திரன் - சேலம் கலைக்கல்லூரி
திருமதி சந்திரா சந்திரன் - கோம்பாக்
சிதனா (மங்களகெளரி)
தென்னிந்தியர்களின் பங்களிப்பில் மலேயன் ரயில்வே
முன்னுரை
திரைகடல் வென்று கடாரம் கொண்ட ராஜேந்திர சோழனின்
வீரமும், அமோக ஆட்சியும் ஜெராய் குன்றின் மேல் பட்டொளி
வீசி பறந்த வரலாற்றின் மிச்சமாக இருப்பதுதான் பூஜாங் பள்ளத்தாக்கில் அகழ்வாராய்ச்சி நிபுணர்களுக்கு இன்றும் சவாலாக இருக்கும்
எச்சங்களும் மிச்சங்களும். கடாரம் வென்ற ராஜேந்திர
சோழனின் அடியொற்றி ஏறக்குறைய கி.பி. 110 ஆண்டு வாக்கில் இந்த மலைநாட்டிற்கான
தென்னிந்தியர்களின் வருகை ஆரம்பமாகிவிட்டது
தொடர்ந்து பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டு
வாக்கில் பலேம்பாங்கிலிருந்து உள்நாட்டு கலவரங்களின் எதிர்வினையால் தாய்மண்ணை விட்டு வெளியேறி, ஆட்சியாளர் பரமேஸ்வரா
புதிதாக உருவாக்கிய சாம்ராஜியமான மலாக்காவில், திரைகடலை வென்று வந்த பல நாட்டவருள்
தென்னாட்டு வணிகர்களும் முக்கியமானவர்களென பண்டைய வரலாறு அடையாளப்படுத்துகிறது. அன்று வந்தவர்கள், வணிகத்தை
வென்றனர், அரசியலை கொண்டனர், உள்நாட்டவரை
மணமுடித்து இங்கே தங்கள்
வாழ்வை தொடங்கினர். அவர்கள் வந்ததற்கும் வாழ்ந்ததற்கும் மலாக்கா
மாநிலம் இன்றும் ஒரு அதிகாரபூர்வ வரலாற்று சான்றாக நம் கண்முன்னே இருக்கிறது.
அதன் பின் ஏறக்குறைய 18ஆம் 19ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலணித்துவ காலத்தில் இங்கே
வந்த தென்னிந்தியர்களின் வாழ்வியலைப் பற்றி இப்படி பெருமைப் பட்டுக் கொள்ள முடியவில்லை.
ஒப்பந்த கூலிகளாக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இங்கே
கொண்டு வரப்பட்ட தென்னிந்தியர்களின் வாழ்க்கை, ரப்பர் மரக்காட்டினில் அமிழ்ந்து போய்,
ஒரு நூற்றாண்டு துயர வரலாற்றின்
ஆற்றவோ மாற்றவோ முடியாத துன்ப சுவடுகளாய் காட்சியளித்ததை மட்டுமே அறிந்திருக்கும் நமக்கு,
மலையகத்தின் ரயில் பாதைகளுக்கு ஸ்லிப்பர் கட்டைகளாக விழுந்து கிடந்த
பிரிதொரு சாராரின் வலி மிகுந்த வரலாறு இன்று
வரை முழுமையாக தெரியாதென கூறினால் அதை யாராலும்
மறுக்க முடியாது.
தொழில்புரட்சியும் ரயில் பாதை
நிர்மாணிப்பும்
பத்தொன்பதாம் நூற்றாண்டு, மேலை நாடுகளில் தொழில்
புரட்சி ஏற்பட்டிருந்த காலக்கட்டமாகும். அந்நேரத்தில் இயற்கை வளம் கொட்டிக் கிடந்த மலாயாவின் லாருட் ஈய வயலுக்கு தங்க சுரங்கத்திற்கு ஈடாக முக்கியத்துவம் வழங்கினர்
பிரிட்டிஷார். முதலில் மலாய்க்காரர்கள் வசமிருந்த ஈய வயல்கள்,
பின் சீனர் வசமாகி, இறுதியில் பிரிட்டிஷாரிடம்
அடிமைப் பட்டுப் போனதால் நாட்டிற்கு ஏற்பட்ட ஒரு நன்மை, முக்கிய
நகரங்களுக்கு இடையே ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதுதான்.
பேராக் மாநிலத்தின் தைப்பிங் நகரின் லாருட்டில்
மட்டுமல்ல, சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான்
ஆற்று முகத்துவாரத்திலும், சுங்கை ஊஜோங் பகுதியிலும் கூட மேற்கொள்ளப்பட்ட
ஈயசுரங்க தொழிலின் காரணமாக, துறைமுகத்திற்கும் ஈய சுரங்கங்களுக்கும்
இடையே எளிதான போக்குவரத்து நிர்மாணிக்கப்பட வேண்டியது அவசியமெனப்பட்டது. அன்றைய நாளில் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகள்
பயன்பாட்டில் இருந்தனவென்றாலும் சாலைகள் சரியானபடி இல்லாத காரணத்தால் உரிய நேரத்தில்
உற்பத்தி பொருட்கள் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தேங்கியது. மக்களுக்கு முக்கிய பயண வழியாக இருந்த நீர் போக்கு வரத்தும்
இதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், தைப்பிங்கிற்கும் போர்ட் வெல்ட் நகருக்கும் இடையே முதல் ரயில் பயணம்
1885 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் ஒன்றாம் நாள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது
சுமார் ஏழரை மைல் நீளம் கொண்ட நாட்டின் முதல் வரலாற்றுப்பூர்வ ரயில் பாதையாகும் அது.
எங்கெல்லாம் ஈய வயல்களும் அதனைத் தொட்டு
துறைமுகங்களும் இருந்தனவோ அங்கெல்லாம் பிரிட்டிஷாரின் பேராவல் அதிகரித்து, ரயில் பாதைகள்
அமைக்கும் பணிகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டன. அந்த வகையில், கோலாலும்பூருக்கும் கிள்ளானுக்கும் இடையே
1886 ஆம் ஆண்டிலும், சிரம்பான் நகரிலிருந்து போர்ட்டிக்சன் கடற்கரை பட்டிணம்
வரை 1892ஆம் ஆண்டிலும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. உடன் ஈப்போவிலிருந்து
தெலுக்கான்சன் வரையிலும் கூட ஒரு ரயில் பாதை போடப்பட்டு பின்னர் தாப்பா சாலை வரை அது
நீட்டிக்கப்பட்டுள்ளது. 1903 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 340
மைல் தொலைவிலான இருப்புப் பாதைகள் நாட்டின் முக்கிய மாநிலங்களுக்கிடையே அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நீண்ட ரயில் பாதைகளை அமைக்க பிரிட்டிஷ்
ஜெனரல்களுக்கு அதிக ஆள் பலம் தேவைப்பட்டது. இலங்கைக்கு கடிதம் வழி உதவி கேட்டு, அங்கிருந்து வந்தவர்களே ரயில் பாதை வரலாற்றில்
முதன்மையான தொழிலாளர்கள். ஆனால் அந்நாளிலேயே மிகச்சிறந்த கல்வியறிவினைப்
பெற்றிருந்ததால், அலுவலக வேலைகளையும், மேலாண்மை
காரியங்களையும் பார்க்கவே இலங்கையர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பொறியிலாளர்களாக பிரிட்டிஷ் பிரஜைகளும் வரை படத்தோடு நிற்க, மண்ணைக் கொத்தவும், காட்டை அழிக்கவும், எதிரே வந்து நிற்கும், யானை, புலி
போன்ற காட்டு விலங்குகளுக்கு பலியானவர்களும், கட்டுமான பணியின் போது சுழித்தோடும் காட்டாற்று
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களும், மலையை குடைந்து சுரங்கம் அமைத்து,
அதனூடே ரயில் பாதை அமைக்க உடலுழைப்பு தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டவர்களும் தென்னிந்திய
பிரஜைகளே. இது வரலாற்று உண்மை.
மலாயா, காடுகளாலும் நதிகளாலும் சூழப்பட்ட மண். காடுகளை அழித்து நாட்டை உருவாக்க மண்ணின் மைந்தர்களாக தங்களை காட்டிக் கொண்ட
மலாய்க்காரர்களை பயன்படுத்திக் கொள்ள ஏனோ பிரிட்டிஷ் அரசாங்கம் தயக்கம் காட்டி,
தங்களின் ஆதிக்கத்திலிருந்த இந்தியாவிலிருந்து தென்னிந்திய தொழிலாளர்களை
இங்கே கொண்டு வந்த பின்னனியிலும் கூட தென்னிந்தியர்களே இருக்கிறார்கள் என்பதும் வரலாறு. அந்த
வகையில் மலைபெருமாள் என்பவர் குடும்பம் இங்கே ரயில் பாதை அமைக்க தென்னிந்தியர்களை கொண்டு
வந்தவர்களுள் முதன்மை பெற்றுத் திகழ்கிறது.
தென்னிந்திய தொழிலாளர்களை தருவித்த முதல் பெண்மனி
மலைபெருமாளின் மாமியார் திருவாட்டி மாரிமுத்து
அம்மாள் காரைக்காலிலிருந்து கணவர் திரு முத்துராமலிங்க பிள்ளையோடும் இரண்டு குழந்தைகளோடும்
மலாயா வந்தவர். தோட்டப்புறங்களுக்கு ஆள் கொண்டு
வந்து சேர்த்ததிலும், சாலை அமைக்கவும் , ரயில் பாதை தொடங்கப்பட்டதும் அதற்கென
ஒவ்வொரு தவணையாக இங்கே ஆட்களை கொண்டு வந்து குவித்ததிலும் இந்த
அம்மையாருக்கு மிகப் பெரிய பங்குண்டு. தனது அடிச்சுவட்டில் தனது
மருமகனையும் ஆள்கட்டு கங்காணியாகவும், சாலை நிர்மாணிப்பாளராகவும்
தொழிலில் ஈடுபடுத்தி, தொழிலதிபராகவும் மாற்றிய
பெருமை அந்த அம்மையாரையே சாரும். இருப்பினும் வரலாற்றில் எழுத்து
வாயிலாக இவர்களைப் பற்றிய எந்த பதிவும் இல்லை. இருப்பினும் திருமதி மாரிமுத்து
அம்மையாரின் மகள் செல்லத்தம்மாளை திருமணம் முடித்து பத்து காஜாவில் திரு. மலைபெருமாள்
வாழ்ந்ததற்கான சான்றாக இன்றும் இருப்பது 1907 ஆம் ஆண்டு திண்ணைப் பள்ளியாக இவர்
ஆரம்பித்து 1911 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட பத்துகாஜா அரசாங்க ஆங்கில பள்ளியாகும். மேலும் 1996
ஆம் ஆண்டு தி ஸ்டார் பத்திரிக்கையில் வெளியான ஒரு நேர்காணலும்,
தற்போது 85 வயதாகும் திரு தனபாலன் அவர்களின் வாய்மொழி
செய்திகளுமே நமக்கு மேற்சொன்ன இந்த தகவல்களை உறுதிப்படுத்துகின்றன.
மாரிமுத்து அம்மாள் பரம்பரையின் நான்காவது தலைமுறையான திரு தனபாலன்,
உலகெங்கும் சிதறிக் கிடந்த திருவாட்டி மாரிமுத்து அம்மையார் வழி வந்த
உறவுகளை ஒன்று திரட்டி, மிகப்பெரிய குடும்பம் என கின்னஸ் சாதனை
செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடும்ப உறவுகளின்
மேலான தகவலுக்காக “பந்தம்” எனும் கையேடு
ஒன்றினை இவர் அந்த ஒன்றுகூடலுக்காக தயாரித்திருக்கிறார். அதிலிருந்து
திருவாட்டி மாரிமுத்து அவர்களைப் பற்றி மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து
தகவல்களும் கிடைக்கப்பெற்றேன்.
புக்கிட் பெராபிட் சுரங்க ரயில் பாதையில் செத்து மடிந்த
தென்னிந்தியர்கள்
ஈப்போவிலிருந்து பினாங்கு நோக்கி ரயிலில்
பயணம் செய்தவர்களுக்கு புக்கிட் பெராபிட் சுரங்க பாதை நன்கு தெரிந்த ஒன்று. வடக்கு
நோக்கி செல்லும் ரயில் பயணத்தில் மிக நீண்ட சுரங்க பாதை பயணமாகும் அது. அந்த சுரங்க
ரயில் பாதை ஒன்று போதும் நம் மக்களின் உழைப்பையும் உயிர் சேதங்களையும் வகைப்படுத்த. தென்னிந்தியர்கள் மண்வெட்டி, உளி, கடப்பாறை போன்ற ஆயுதங்களால் சிறிது சிறிதாக
செதுக்கி குடைந்தெடுத்த புக்கிட் பெராபிட்
சுரங்க ரயில் பாதை 1905 ஆம் பயன்பாட்டிற்கு வந்ததாக வரலாறு கூறுகிறது.
2013 ஆம் ஆண்டு சுமார் 108 வருடங்களுக்குப் பின், இரட்டைத் தண்டவாள ரயில்
திட்டத்தின் சீரமைப்பிற்காக இந்த சுரங்க ரயில் பாதை மூடப்பட்டதாகவும் துல்லியமான பதிவு
உண்டு. ஆனால், அவ்விடத்திலேயே தங்கி,
கொசு கடிக்கும், தூய்மையற்ற நீருக்கும்,
சுகாதாரமற்ற வாழ்வுக்கும் இடையே போராடி, காலரா
நோய்க்கு ஏறக்குறைய 2000 பேர் செத்து வீழ்ந்து தண்டவாளங்களுக்கு
உரமாகிப் போன வரலாற்று சோகத்தை இன்னமும் நான் அச்சு பதிவின் வழி தேடிக்கொண்டிருக்கிறேன்.
இந்த தகவலை வாய்மொழியாக என்னுடன் பகிர்ந்துக் கொண்டவர் நாட்டின் பிரபல
எழுத்தாளர் ஐயா சை. பீர் முகமது அவர்கள். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு தென்னிந்தியர்கள் ரயில் பாதை அமைக்கவென்றே
இங்கு வரவழைக்கப்பட்டு, காட்டிலும், மேட்டிலும் மட்டுமல்ல, காட்டாறு சுழித்தோடும் பகுதிகளிலும்
கடும் உழைப்பை சிந்தி தங்கள் இன்னுயிரை துறந்திருக்கிறார்கள்.
கம்னியுஸ்டுகளும் ரயில் பாதை விபத்துகளும்
ரயில் பாதை அமைக்கும் பணி ஓரளவு வெற்றிப் பெற்று
நாடு முழுக்க ரயில் சேவை சரளமாகிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் இரண்டாம் உலகப்போரும்
அதனையடுத்து நாட்டிற்குள் ஜப்பானியர் படையெடுப்பும் நடந்தது. ஜப்பானிய ஜெனரல் சயாமிலிருந்து பர்மா வரை ரயில் பாதை அமைத்து விட வேண்டும்
எனும் வெறியில், தோட்டப்புறத்தில் பால்மரம் வெட்டிக்கொண்டிருந்த
அப்பாவி மக்களை கொண்டு சென்று காலராவுக்கு பலி கொடுத்த துயர வரலாற்றை நடத்திக் காட்டிக்
கொண்டிருக்கும் போதே, ஜப்பானியர்களுக்கு எதிராக தோன்றிய கம்னியுஸ்டுகளால்,
ரயில்வே தொழிலாளர்கள் பட்டத் துயரமும் இன்றுவரை பரவலாக யாராலும் அதிகம்
அறியப்படாத ஒன்று. போர்க்காலத்தில் சரக்கு வண்டிகள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த
நேரத்தில், காட்டில் மறைந்திருந்து ஜப்பானியர்களை எதிர்த்த கம்னியுஸ்டுகளுக்கு
உணவு பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. அவர்களுக்கிருந்த ஒரே வாய்ப்பு
உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வண்டிகளை சூறையாடுவதுதான். அவற்றை குறி வைத்தே
தண்டவாளங்களில் வெடி வைத்து ரயில் பெட்டிகளை தடம் புரள வைத்திருக்கின்றனர்.
ஒரு சில மலாய் மொழி எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் மலாயா ரயில்
பாதை வரலாற்று நூல்களில், இந்த விபத்துக்கள் பற்றிய செய்திகள்
காண கிடைத்தாலும், யாரும் சரியான எண்ணிக்கையை தரவில்லை. ஒரு சிலர்
13 என்றும் சிலர் ஐம்பதற்கும் மேல் எனவும் முன்பின் முரணாக தந்திருக்கும்
எண்ணிக்கையை இங்கே உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும்,
அக்காலக்கட்டத்தில் செகண்ட் க்ளாஸ் ஃபையர் மேனாக பணியாற்றிய திரு மு.
பெருமாள் என்பவர் மூன்று தண்டவாள வெடி விபத்துக்களில் சிக்கி உயிர் பிழைத்தவர்
எனும் வாய் மொழி தகவலை அவரது துணைவியார் திருமதி. மாரியாயிடம்
இருந்து கிடைக்கப்பெற்றேன். தஞ்சோங் மாலிம், பானிர், மற்றும் கெமாஸ் விபத்துகள் திரு பெருமாள் அவர்களின்
உடம்பில் ஏற்படுத்தியிருந்த விழுப்புண்களை அவர் காலமாகும் வரை கண்டிருந்தவள் அவரின்
மகளான நான் என்பதால் இந்த செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இயலும்.
பக்கிரிசாமி சதாசிவத்தின் போராட்டம்
சுதந்திர மலேசியாவில், ரயில்வே துறை ஊழியர்களுக்கு நாட் சம்பளத்திற்கு பதில் மாதாந்திர ஊதியம் வழங்கப்
பட வேண்டுமென அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு, 1962ஆம்
வருடம் டிசம்பர் திங்கள் 23 ஆம் நாள் நாடு தழுவிய நிலையில்
23 நாட்கள் நீடித்த வேலை நிறுத்த போராட்டம் ஒன்று ஆரம்பமாகியது. அதை
வெற்றிகரமாக நட த்தி, ரயில்வே துறையில் பணியிலிருந்த ஊழியர்கள்
அனைவரும் மாதாந்திர ஊதியம் பெறும்படி செய்த வரலாற்று நாயகன் “ரம்” என்றழைக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சங்கத்தின் தலைமைச்
செயலாளராக பொறுப்பேற்றிருந்த திரு. பக்கிரிசாமி சதாசிவம் அவர்களாகும்.
அன்னார் ரயில்வே ஊழியர்களின் நலனில் காட்டிய ஈடு இணையில்லாத அக்கறையின்
விளைவு அப்போராட்டம் நியாயமானதே என நாட்டின் முதலாம் பிரதமர் துவாங்கு அப்துல் ரஹ்மான்
அவர்கள் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார் என்பதோடு முடிந்து விடாமல், நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய ரயில்வே ஊழியர்கள்
மாதாந்திர ஊதியம் பெற்றதோடு, ஓய்வூதியமும் பெற இந்த தீர்ப்பு சாதகமாக இருந்தது. காலஞ்சென்ற திரு, பக்கிரிசாமி பற்றிய இத்தகவல்கள் நமது
நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் திரு. எம். துரைராஜ் ஐயா அவர்கள் பொறுப்பேற்று நடத்திய இதயம்
இதழில் நேர்காணலாக பிரசுரமாகியது. அன்னாரின் மறைவிற்குப் பின், அவரது குடும்பத்தாரால் வெளியிடப்பட்ட சிறிய கையேடான “THE TIMES AND
LIFE OF SATHASIVAM PACKIRISAMY” எனும் நினைவேந்தல் மலரில் இந்த நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது.
மலேயன் ரயில்வேயில் சட்டைக்காரர்களின் பங்களிப்பு
தென்னிந்தியர்களைப் போன்றே தங்கள் இன்னுயிரை
மலாயாவின் ரயில் பாதைக்கு ஈந்த இன்னொரு சாரார்
சட்டைக்காரர்கள் என்றழைக்கப்படும் யுரேஷிய இனத்தவர்கள். அந்நாளில் ரயில் ஓட்டுனர்களாக இருந்தவர்கள் அனைவரும் சட்டைக்காரர் இனத்தவரே. ரயில் ஓட்டுனராவதற்கு கல்வியறிவும் ஓடு பாதைகள் மற்றும்
சமிக்ஞைகள் குறித்த தெளிவும் தேவை. அன்று அதற்கெல்லாம் தகுதி பெற்றவர்களாக இருந்தவர்கள்
இந்த இனத்தவரே. வெடிவிபத்துக்களில் தங்களின் இன்னுயிரை
இழந்தவர்களின் பெயர்களை கூட காண முடியாதது பெரும் வியப்பே. இங்கே அவர்களைப் பற்றியும்
ஒரு வரி குறிப்பிடாமல் புறக்கணித்தல்
என்பது வரலாற்று துரோகமாகும்.
முடிவுரை
கிட்டத்தட்ட 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாட்டின் ரயில் சேவை வரலாற்றில், முதன் முதலில் மலாயாவிற்கு ரயில் பாதை அமைக்க தென்னிந்தியர்களை தருவித்தவர்களைப் பற்றிய தகவல் மட்டுமல்ல, ரயில் பாதை அமைக்கும் பணியில் தங்கள் வியர்வை, ரத்தம்,
உயிர் அனைத்தையும் சிந்திய மக்களின் வரலாற்றினையும் தெளிவான முறையில்
எங்கேயும் காணமுடியாதது வருத்தத்திற்குறிய செய்தி என்றால், நமது
இளைய தலைமுறையினர் இதைப் பற்றிய எந்த தெளிவுமின்றி இருப்பது வியப்பையும் வேதனையையும்
ஒருங்கே அளிக்கிறது.
ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் சில புத்தகங்கள்
மலாயா ரயில் சேவை வரலாற்றினைத் தொட்டு எழுதப்பட்டிருந்தாலும், அவை ஆங்கிலேயர்களின் ரயில் பாதை சாதனையையும், முதல் ரயில்
வெள்ளோட்டத்தினையும் ஏனைய தகவல்களையும் பேசும் அளவில், கிஞ்சிற்றும்
தென்னகத்தொழிலார்கள் பற்றி பேசாதது மிகப் பெரிய குறை. மேலும்
தமிழ் மொழியில் ஒரு வரலாற்று ஆய்வு நூல் கூட இல்லை என்பதும் வருத்தத்திற்குறியதே.
இந்த குறையினை களையும் பொருட்டும் எதிர்கால தலைமுறையினருக்கு தகவல் களஞ்சியமாகவும்,
சரியான விடயங்களை ஆதார பூர்வமாக அளிக்கும் ஒரு பதிவாகவும் இருக்கும்
வண்ணம் இந்த ஆய்வினை நான் மேற்கொண்டிருக்கின்றேன்.
ஆய்வுக்கு உதவிய நூல்கள்:
1) “பந்தம்” – மாரிமுத்து அம்மாள் குடும்பத்தார் வெளியிட்ட
கையேடு
2) MIKE’S
RAILWAY HISTORY – a look at railways in 1935 & before – இணைய பத்தி
3) கூகள்
இணையத்தளம் – ஹிஸ்ட்ரி ஆப் மலேயன் ரயில்வேஸ்
4) “THE
TIMES AND LIFE OF SATHASIVAM PACKIRISAMY” திரு. பக்கிரிசாமி சதாசிவம் குடும்ப உறுப்பினர்கள் வெளியிட்ட நினைவு மலர்.
வாய்வழி செய்திகள் தந்துதவியவர்கள்:
திரு. தனபாலன் (வயது 85), பினாங்கு
திரு. சை பீர் முகம்மது (வயது 75), கோலாலம்பூர்
மூத்த பத்திரிக்கையாளர் ஐயா. திரு. எம். துரைராஜ், (வயது 83), கோலாலம்பூர்
கும்பகர்ணன் காட்டும்
நீதியும் பாசமும்
இலங்கை மன்னன் ராவனின்
தம்பிகளுள் ஒருவன் கும்பகர்ணன். தனது ஆறு மாத ஆழ்ந்த உறக்கத்திற்கு பெயர் போனவன் . உறக்கத்திலிருந்து
அவனை விழிக்க வைக்க வேண்டுமானால், காதில் குச்சியை விட்டு குத்துவார்களாம், யானையை
விட்டு மோத விடுவார்களாம். படை வீரர்கள் அவனை மிதித்து செல்வார்களாம். எழுந்தவுடன்
தட்டு தட்டாய் உணவு பரிமாறுவார்களாம். இவ்வளவு சிரமத்திற்கிடையே சிவனேயென தூங்குபவனை
ஏன் எழுப்ப வேண்டும்? அவசியம் ஏற்பட்டிருக்கிறதே. ராவணன் சீதையை கவர்ந்துக் கொண்டு
வந்ததும் அதனால் ராம இலக்குவர்கள் வானர படையின் துணையோடு போரிட வந்ததும் நீங்கள் அறிந்ததுதான்
இல்லையா! அந்த போரில் ராவணன் தோற்றுப் போகிறான். கையில் ஆயுதம் இல்லை. அவனைப் பார்த்து
“இன்று போய் நாளை வா” என்று பெருந்தன்மையோடு அனுப்பி விடுகிறான் ராமன். “கடன்பட்டார்
நெஞ்சம் போல் கலங்கி “ போகிறான் ராவணன். ஏன்? தனது வீரம் குறைந்து விட்ட து என்றா?
இல்லை. அவனோடு துணையாக இருக்க வேண்டிய தம்பிகளுள் ஒருவனான விபீடணன் ராமனோடு போய் இணைந்துக்
கொள்ள, இன்னொரு தம்பியான கும்பகர்ணன் நிலைமை புரியாமல் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
இப்பொழுது உங்களுக்கு ராவணின் நிலை புரியும் என நினைக்கிறேன்.
உறக்கத்திலிருந்து விழித்த
கும்பகர்ணனுக்கு முதலில் எட்டும் செய்தி என்ன தெரியுமா? முறையற்ற வழியில் மாற்றான்
மனைவியை கவர்ந்துக் கொண்டு வந்ததுமில்லாமல், அதற்காக போரும் நடந்துக் கொண்டிருக்கின்றது
என்ற செய்திதான். பதறிப் போகிறது கும்பகர்ணன்
உள்ளம்:
ஆனதோ வெஞ்சம்ம் அலகில்
கற்புடைச்
சானகி துயர் இனம் (இன்னம்)
தவிர்ந்ததில்லையோ?
வானமும் வையமும் வளர்ந்த
வான்புகழ்
போனதோ? புகுந்த தோ பொன்னும்
காலமே?
திட்டியின் விடம் அன கற்பின்
செல்வியை
விட்டிலையோ இது விதியின்
வன்மையே…
என தவித்துப் போகிறான்.
போர் நடக்கும் செய்தியை
எதிரே நின்று சொன்னவனோ அண்ணன் ராவனண். கோபம் வந்து விட்ட து நமது கும்பகர்ணனுக்கு.
அன்ணனைப் பார்த்து அவன் சொல்வதை பாருங்கள்:
ஆசு இல் பர தாரம் அவை
அம் சிறை அடைப்போம்;
மாசு இல் புகழ் காதலுறுவேம்;
வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று,
நம கொற்றம்! (6122)
என்ன சொல்கிறான் கும்பகர்ணன்?
எந்த குற்றமும் அற்ற மாற்றான் மனைவியை சிறையிலே அடைத்து வைப்போம். அதே நேரத்தில் ஊரே
போற்ற புகழ் பெறவும் விரும்புவோம். பெருமையோடு பேசுவது என்னவோ வீர உரைகள் . ஆனால் இடையே விரும்புவதோ காமம். கண்டு பயப்படுவதோ சாதாரண மானிடர்க்கு.
நன்றாய் இருக்கிறது நமது கொற்றம்.
என்னதான் இப்படி அண்ணனை
பார்த்து கோபத்தில் கொந்தளித்து விட்டாலும், அந்த பாச மிகு தம்பியும் அறமற்ற அந்த போரில்
பங்கு பெற கிளம்புகிறான். அங்கே, எதிரணியில் சென்று சேர்ந்து விட்ட விபிடணன் கும்பகர்ணனை
வந்து சந்தித்து புத்திமதிகள் கூறுகிறான்.
“அதர்மத்தோடு சேர்ந்து
மாண்டு போகாதே; தர்மத்தோடு வந்து சேர்ந்துக் கொள் “ என்கிறான்.
ஆனால், பாசத்திற்கு கட்டுப்பட்ட
தம்பி கும்பகர்ணன் சொல்கிறான்; நீர் மேல் போட்ட கோலம் போன்றது இந்த உயிர். அதனை என்னை
பேணி வளர்த்த உடன் பிறந்தானுக்காக நீக்காமல், உயிருக்குப் பயந்து எதிரணிக்குப் போகேன்
. நீ சென்று பிழைத்துக் கொள் என்கிறான்.
நீர்க் கோல வாழ்வை நச்சி,
நெடிது நாள் வளர்த்துப்
பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு
உயிர் கொடாது அங்குப்
போகேன்;
தார்க் கோல மேனி மைந்த!
என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார்க்கோல மேனியானைக்
கூடுதி கடிதின் ஏகி (7553)
அன்ணன் செய்த து பெரும்
குற்றம் என்று அறிந்து அறிவுரை சொல்லியும் அண்ணன் அதை கேளாமல் விட்டாலும், அண்ணன் அணியில்
இருந்தால் உயிர் போகும் என்று தெரிந்தாலும்,
அதைப் பொருட்படுத்தாமல், உடன் பிறந்த பாசத்திற்கு முக்கியத்துவம் தந்த கும்பகர்ணனின்
தியாகம் மிகப் பெரிது.
முற்றும்
No comments:
Post a Comment