ஒரு சொல்


மசூரி - ஒரு சொல்

அந்த பெண்ணின் பெற்றோர்கள் அண்டை நாடான சயாமிலிருந்து லங்காவி என்று அழைக்கப்பட்ட அந்த தீவிற்கு குடிபெயர்ந்தவர்கள். அன்றைய நாளில் அந்த இளம் பெண் மொத்த தீவிற்கும் ஈடு இணையற்ற அழகியாக திகழ்ந்திருக்கிறாள். அவள் அழகு பலருக்கு அல்சரை உண்டு பண்ணியிருக்கிறது; அவளது மாமியார் உட்பட. ஒரு போர்வீரனை திருமணம் செய்திருந்த அவளுக்கு கையில் ஒரு குழந்தையும் இருக்கிறது. அந்நாளில் சயாமிற்கும் உள்நாட்டிற்கும் இடையே மூண்ட போரில், படக்கு  தலைமை தாங்கி அவன் சென்று விட, விதி ஒரு துணி வியாபாரி வழி வருகிறது அவள் வீடு தேடி.

வாசலில் வந்து நின்று, தாகத்திற்கு ஒரு வாய் தண்ணீர் கேட்கிறான் அந்த துணி வியாபாரி. தூளியில் குழந்தையை போட்டு தூங்க வைத்துக் கொண்டிருந்தவள், “சற்று இப்படி அமருங்கள், நீர் கொண்டு வருகிறேன்..” என்று உள்ளே செல்ல, அவன் அந்த வீட்டு வாயில் பக்கம் அமர்ந்து விட்டான். எப்போ எப்போ என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது போதாதா? அவன் தண்ணீர் குடித்து முடிக்கும் முன் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, மரத்தில் கட்டப்படுகிறாள் அவள்.

யாரென தெரியாத ஒருவனோடு அவள் சோரம் போனாள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறாள். இல்லை என்று அவள் எவ்வளவோ மறுத்தும், ஊராரும் கிராமத்தலைவரும் நம்பவில்லை (குற்றம் சாற்றியது மாமியாராயிற்றே).

மரத்தோடு கட்டப்பட்டவளுக்கு உடனே கொலை தண்டனை விதிக்கப்படுகிறது. பலமுறை கிரீஸ் எனப்படும் குத்துவாளால் குத்தியும் அவள் உயிர் போகவில்லை. இந்த மனிதர்கள் தன்னைக் கொல்ல படும் அவஸ்தை கண்டு அவளே ஒரு உபாயம் சொல்கிறாள்.
“வீட்டிலிருக்கும் என் கணவரின் கிரீஸ் கொண்டு குத்தினால் ஒழிய, என் உயிர் போகாது. அப்படி நீங்கள் குத்தும் போது, என் ரத்தம் வெள்ளை நிறமாக வெளியேறினால் நான் குற்றமற்றவள் என்பதை உணர்க”.

உடனே அவள் கணவனின் கிரீஸ் கொண்டு வரப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவள் கூற்றின் படியே ரத்தம் வெள்ளையாக வெளியேற, “குற்றமற்ற என்னை கொன்ற பாவத்திற்கு, இந்த தீவு ஏழு தலைமுறைக்கு பாழடைந்து போகட்டும்” என்று சபித்து விட்டே உயிரை விட்டாள் அந்த பெண்.

அவள் சொன்னது போல, ஏழு தலைமுறையாக அந்த தீவு பாழடைந்தே கிடந்தது. அப்துல் ரஹ்மான் எனப்படும் டிஸ்ட்ரிக் ஆபிஸர் ஒருவர் அங்கு கேட்பாரற்றுக் கிடந்த இந்த வரலாற்று நாயகிக்கு வெள்ளை பளிங்கில் சமாதி எழுப்பினார். அவரே நாட்டின் முதல் பிரதமரான துவாங்கு அப்துல் ரஹ்மான். அதன் பின் நாட்டின் நான்காவது (தற்போது ஏழாவது) பிரதமர் துன் மஹாதீர் முஹமட் அவர்களின் முயற்ச்சியால் பாழடைந்து கிடந்த அந்த லங்காவி தீவு, உலக மக்களை கவர்ந்த சுற்றுலா தீவாக மாறியது. பல தமிழ் சினிமா படப்பிடிப்புக்கூட இங்கே நடந்திருக்கிறது.

சரி, இந்த கதைக்கு என்ன ஆதாரம்? மன்னிக்க வேண்டும். வெறும் வாய் மொழி கதையாகவே சொல்லப்பட்டு வந்த இந்தக் கதைக்கு இருக்கும் ஒரே ஆதாரம், அவளது சமாதிதான். அதோடு, அவளது சாபத்துக்கும் மரணத்துக்கும் பின்னர், சயாமியர்களிடம் அந்த தீவு வீழ்ந்துபட்டப்பின், வயல்களிலும் வாழுமிடங்களிலும் அவர்கள் நெருப்பு வைத்து எரித்ததன் அடையாளமாக, இன்னமும் கருகிய நெல்மணிகளை அங்கே காணலாம். கடற்கரை பக்கம் மணலும் குறிப்பிட்ட எல்லை வரை கருமை நிறமாகவே இருக்கிறது.  (1996 ஆம் ஆண்டு சென்றிருந்த போது நேரில் பார்த்தேன்).

சரி… அப்புறம்?

துணி விற்க வந்தானே அந்த வியாபாரி என்ன ஆனான்? அவன் கிடக்கிறான், அந்தக் குழந்தை என்ன ஆனது?

நிலைமையின் விபரீதம் கண்டு, அந்த மனிதன், தூளியில் கிடந்த குழந்தையை தூக்கிக் கொண்டு, ஓடி விட்டான். அவன் ஓடியது எந்த இடமென்று தெரியவில்லை. ஆனால், தொன்னூறுகளின் பின்பகுதியில், அவளது ஏழாவதோ அல்லது எட்டாவதோ வாரிசு, பட்டாணியில் (தாய்லாந்தின் ஒரு பகுதி) வளர்கிறது என்று கண்டறிந்து, அரசாங்கம் அவளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை நாட்டின் தேசிய ஒலி/ஒளி பரப்பு நிறுவனம் செய்தியில் காட்டியது. அந்தப் பெண்ணுக்கு பல சலுகைகளை மலேசிய அரசாங்கம் அறிவித்தாலும், வரமாட்டேன் என்று விட்டாள் அவள்! (ஒளிபரப்பையும் நான் தொலைக்காட்சியில் கண்டேன். இந்த செய்திகளும் அவளது கல்லறை பக்கம் காணலாம்).
சரி, இப்படி ஒற்றை சொல்லில் ஏழு தலைமுறைக்கு ஒரு தீவையே பாழடைந்து போக சபித்த அவள் யார்? அவள் பெயர் மசூரி. அதிகம் இல்லை, இன்றைக்கு சற்றேறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய சோகம் அது. நம்புவீர்களோ இல்லையோ, துன் டாக்டர் மஹாதீர் முஹமட் அவர்களின் வருகைக்குப் பின்னரே அந்த தீவு செழிப்படைந்தது நாங்கள் கண்ணால் கண்ட உண்மை.
1996 ஆம் ஆண்டு சென்றிருந்த போது, வெட்ட வெளியிலிருந்த அந்த மூத்த கிழவியின் கல்லறைக்கு இப்போது கூறை வேய்ந்து, சுற்று வெளி ஏன் சும்மா கிடக்கிறது என்று அதையும் ஒரு வியாபார அங்காடி ஆக்கி விட்டிருக்கிறார்கள் புத்திசாலிகள்!

மலேசியாவின் வட மாநிலமான பெர்லிஸிலிருந்து பெஃரி சேவை உண்டு. கோலாலம்பூரிலிருந்து உள்நாட்டு விமான சேவையும் உண்டு. எப்பவாவது மலேசியா வந்தீங்கனா, லங்காவிக்கும் போய்ட்டு வாங்க நண்பர்களே!


மஞ்சள் மாதா - ஒரு சொல்



அந்தப் பெண் அரக்க குலத்தில் பிறந்து தன் அண்ணனை கொன்றவர்களை பழி வாங்கும் பொருட்டு, பிரம்மனை நோக்கி தவமிருந்து, சாகா வரம் கேட்கிறாள்.
“அப்படி ஒரு வரம் சாத்தியமே இல்லை. பிறந்தவர் இறந்துதான் ஆக வேண்டும். யோசித்துக் கேள் உன் வரத்தை…..” என்று பிரம்மன் சாய்ஸில் விட,

“இரண்டு ஆண்களுக்குப் பிறந்து, மேலோகத்தில் வளர்ந்து, பன்னிரண்டு ஆண்டுகள் பூலோகத்தில் சேவை செய்த ஒருவன் கையாலேயே எனக்கு மரணம் வரவேண்டு…” என்று வரம் கேட்கிறாள். அப்படியே அருளி விட்டு பிரம்மன் போய் விடுகிறார்.

நிற்க,

பம்பா நதிக்கரையில் நீராட வந்த பந்தள மகாராஜன் காதில் குழந்தையின் அழுகுரல் விழ, ஓடோடி சென்று நதியோரம் இருந்த அக்குழந்தையை தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். மகாராஜாவை நோக்கி வந்த சிவனடியார் ஒருவர், “யாரப்பா நீ, எதற்கு இந்தக் குழந்தையை நீ கொஞ்சிக் கொண்டிருக்கிறாய்” என்று கேட்க, “இந்தக் குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்தேன் . இந்நாட்டின் மன்னனான எனக்கு குழந்தை இல்லை.. இவனை நானே வளர்க்கப் போகிறேன்..” என்க…

அடியார் ரூபத்தில் இருந்த சிவ பெருமான் சொல்கிறார், “உன்னோடு பன்னிரண்டு வருடம்தான் இருப்பான் இவன்… பரவாயில்லையா?”
அடியார் ஏதோ சொல்கிறார் என நினைத்து, “பரவாயில்லை..” என்று குழந்தையைக் கொண்டு செல்கிறார், மன்னன்.
அதன் பின் அந்தக் குழந்தை வளரும் போதே, அரசிக்கு இன்னொரு குழந்தை பிறந்து, அரசுரிமை யாருக்குப் போகும் என அவள் யோசித்து, வயிற்று வலிக்கு புலி பால் வேண்டுமென அரண்மனை வைத்தியரோடு சேர்ந்து சதி செய்து, குழந்தையான மணிகண்டன், “நான் கொண்டு வருகிறேன் புலி பால்..” என சென்று, புலியின் மேல் பவனி வந்த கதை நீங்கள் அறிவீர்கள் இல்லையா.

அப்படி புலி பால் கொண்டு வர சென்ற போதுதான், பிரம்மனிடம் வரம் பெற்றிருந்த அரக்கியை வதம் செய்து கொல்கிறார். (இரண்டு ஆண்களுக்கு பிறந்து மேலோகத்தில் வளர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பெற்றோர்களுக்கு சேவை செய்திருக்கிறார் மணிகண்டன்). மரணிக்கும் தருவாயில், மனித பிறவி கேட்கிறாள் அவள். அப்படியே அருளி செய்கிறார் மணிகண்டன். அது மட்டுமல்ல, தன் பக்கத்தில் இருக்க ஆசைப்பட்ட அவளுக்கு தன் சன்னதி அருகே ஒரு இடமும் கிடைக்கும் என அருளுகிறார். வம்பை விலை கொடுத்து வாங்குவது என்பது இதுதான்.

புலி பால் கேட்க, புலியோடு வந்த பிள்ளையைக் கண்டு அரண்மனையே அதிர, தான் வந்த வேலை முடிந்ததென, தவசியாய் போகிறேன் என்ற பிள்ளையிடம், எங்கே போகப் போகிறாய் என்று விசாரிக்க, நான் எய்யும் அம்பு எங்கே போய் நிலைகுத்துகிறதோ அங்கே நான் இருப்பேன்.. நீங்கள் என்னை அங்கே வந்து சந்தியுங்கள் என கூறி விட்டு, தவம் செய்யப் போய்விட்டார் மணிகண்டனான ஐயப்பன்.

அழகும் வீரமும் நிறை ஆண்பிள்ளை மேல் யாருக்குத்தான் ஆசை வராது, அவன் காவி உடுத்தி சந்யாசியாய் நின்றாலும். அந்த அரக்கப் பெண்ணுக்கு அபயம் கொடுத்தாரே, அவளுக்குத்தான் ஐயப்பன் மேல் ப்ரேமை உண்டாகிறது. (ஐயன் அவளுக்கு தன் அருகாமையிலேயே இடம் கொடுத்தது விதியின் விளையாட்டு)
வெட்கம் மறக்கிறாள். ஆசையால் தவிக்கிறாள். “உங்களை மணந்துக் கொள்ள ஆசை” என்கிறாள்.
சந்யாசி என்றாலும் அவனும் அன்பு நிறைந்தவன் அல்லவா.
ஆனாலும்….…. சந்யாசி அல்லவா……!

“பெண்ணே, எந்த வருடம் என்னை தரிசிக்க கன்னிச்சாமிகள் வரவில்லையோ, அந்த வருடம் உனக்கும் எனக்கும் திருமணம் “

“உங்களை தரிசிக்க கன்னிச்சாமிகள் வரவில்லை என்பதை எப்படி நானறிவேன்”

“மகரசங்கராந்தி நட்சத்திரம் மேரு மலையில் தோன்றும் அன்று, என் வளர்ப்பு பெற்றோர் அன்புக்கினங்கி நான் ராஜ அலங்காரத்தை ஏற்றுக் கொள்வேன். அதற்கு மறுநாள், நீ மலையை விட்டு வெளியேறி, சரம் குத்தி எனப்படும் இடத்தில் சென்று பார். புதிதாக சரம் குத்தப்படாமல் இருந்தால், அந்த ஆண்டு கன்னிச்சாமிகள் யாரும் என்னை தரிசிக்க வரவில்லை என்பதை நீ அறிந்துக் கொள்ளலாம்.” என்று அருள் பாலித்தார்
ஒவ்வொரு வருடமும் (இன்று வரை) அந்தப் பெண், தன்னை அலங்கரித்துக் கொண்டு, யானை மேல் பவனி மேற்கொண்டு, சரம் குத்திக்கு வருகிறாள். அங்கே ஆயிரக்கணக்கில் குத்தப்பட்டிருக்கும் சரங்களையும் கத்திகளையும் கண்டு, கண்ணீர் பெருக்கெடுத்தோட திரும்பிச் சென்று, ஐயனுக்கு சற்று தூரத்தில் தீரா ஏக்கத்தோடு அமர்ந்து விடுகிறாள்.

மாறா காதலும் தீரா ஏக்கமும்தானா இன்றுவரை அவள் கண்ட சுகம்?!

“இவ்வளவு தூரம் வந்துட்டோம், அவளையும் பார்த்துட்டுப் போயிடுவோமே…” என்று ஐயப்ப பக்தர்கள் அவளையும் எட்டிப் பார்த்து, கொஞ்சம் மஞ்சள் பொடியை வாங்கி அவள் மேல் அபிஷேகித்து விட்டுப் போவதே அவளுக்கான கொடுப்பினையாக இருக்கிறது இன்று வரை.
அந்தப் பெண் மஞ்சள் மாதா என்று வழங்கப்படுகிறாள்.  இன்னும் எத்தனை சூரிய சந்திரரை அவள் தரிசிக்க வேண்டுமோ, இந்த “கன்னி” சாபம் தீர.

2015ல் நான் சபரிமலைக்கு சென்றிருந்த போது, எங்களை வழிகாட்டி அழைத்து சென்றிருந்த ஒரு குருசாமி மஞ்சள் மாதா, ஐயப்பனுக்காக காத்திருக்கிறாள் என்று சுருக்கமாக சொன்ன கதையை, விரிவாக விளக்கமாக சொன்னவர், திரு. மோகனன் அவர்கள். அவர் கூறிய மேலும் ஒரு தகவல்:
அலங்காரத்தோடு, யானை மேல் ஏறி சரங்குத்திக்கு வந்து ஏமாற்றத்தோடு அவள் அழுது புலம்புவது கண்டு, அவளை சுமந்து வந்த யானையும் அழுதிருக்கிறதாம். இதை நேரில் கண்டவர்கள் தம்மிடம் கூறியதாக சகோதரர் என்னோடு பகிர்ந்துக் கொண்டார்.



ரங்கம்மா - ஒரு சொல்

அவள் ஓர் இந்துப் பெண். பெயர் ரங்கநாயகி (ரங்கம்மா). அந்நாளில் மைசூர் இசுலாமிய அரசர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த து. இருப்பினும், இந்துக் கோயில்கள் பராமரிக்கப்பட்டன. இந்துக்களும் அனுசரனையாக நடத்தப்பட்டனர். அப்படி அனுசரணையாக நடந்துக் கொண்ட மன்னர் மகனுக்கு ரங்கநாயகி மேல் காதல். அவளுக்கும் தான்!
அவர்களின் அன்றாட சந்திப்பே, அருகிலிருந்த ரங்கநாயகர் கோயிலில்தான். அவளது விருப்பத்துக்கு மாறு சொல்லா காதலன் அவன். அவள் சொன்னால், எதையும் செய்யக்கூடியவனாக அவன் இருந்தும், அவளோ அவனின் வாய் வார்த்தைக்காக  எதிர்பார்த்துக் காத்திருப்பாள் நிதமும்.

இந்த காதல் இவ்வாறு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் போதே, மன்ன ன் மகனுக்கு தன் தந்தையின் மேல் ஒரு சிறிய சந்தேகம். ஒரு இந்துப் பெண் மேல் தான் கொண்டிருக்கும் காதலுக்கு தந்தையே வில்லனாக வரப்போகிறார் என அவன் உள்மனம் எச்சரித்துக் கொண்டே இருக்க, சதா தொல்லைக் கொடுக்கும் வெள்ளை எதிரிகளை நேரடியாக சந்திக்க இவனை அனுப்புகிறார் தந்தை. அவனது சந்தேகம் ஊர்ஜிதமாக, தன் அன்புக் காதலி ரங்கம்மாளை அன்றைய தினம் வழக்கமான கோயில் வளாகத்திலேயெ சந்திப்பவன், முதல் முறையாக அவளுக்கு ஒரு ஆணை பிறப்பிக்கிறான்.

 என்ன அது?

“நான் வந்து அழைக்கும் வரை இந்த கோயிலை விட்டு நீ வெளியே வரக்கூடாது!”

அவன் சொல்லுக்காக காத்துக் கிடந்தவள் அல்லவா, மீறுவாளா அவன் சொல்லை, கூற்றுவனே எதிரே வந்தாலும்!

படை நட த்தி சென்றவன், களத்தில் வீழ்கிறான். உயிர் பிரியும் முன், தனது உயிர் நண்பன் ஒருவனிடம், ரங்கநாயகி இருக்கும் இடத்தை தெரிவித்து, அவளை  பத்திரமாக வேற்று இடத்திற்கு அழைத்து சென்று , அவள் உயிரைக் காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டு உயிர் விடுகிறான்.

போர்க்களத்திலிருந்து நேரே கோயிலை நோக்கி வருகிறான் அந்த நண்பன். கோயில் வளாகத்திலிருந்த ரங்கம்மாளிடம் நடந்த துயரினை விளக்கிக்கூறி, இனி ஏற்படவிருக்கும் ஆபத்தையும் சொல்லி, தன்னோடு வரும்படி கூறுகிறான்.

உறுதியாகவும் இறுதியாகவும் ரங்கம்மாளின் பதில் எதுவாக இருந்திருக்கும்?

“அவர் வந்து அழைக்காமல் நான் வெளியே வரமாட்டேன்!”

வெள்ளையர்களால் ஒரு பக்கம் ஆபத்து நேரலாம். ஒரு வேளை மன்னரே கூட ஆபத்து விளைவிக்கலாம் அவளுக்கு. ஆனால் அவள் காதில் எதுவும் விழவில்லை.

இறுதி வரை வெளியே வராமலேயே இருந்து விட்டாள் அவள்!.

இருந்துவிட்டாள்? இல்லை இறுதிவரை அந்த கோயிலினுள்ளேயே இருந்து இறந்தும் விட்டாள் அந்தப் பெண்!

ஒற்றை சொல்லுக்கு இத்தனை வீரியமா என்றால் அதுதான் காதல் போலும்!

அப்படி காதலனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு உயிரை விட்ட ரங்கமாளுக்கு, கோயிலுக்கு வெளியே சமாதி எழுப்பப்பட்டுள்ளது என்றும் படித்திருக்கிறேன். இன்றும் அந்த சமாதி அங்கே இருக்கிறதாம்!

சரி! இந்தக் கதை எனக்கெப்படித் தெரியும் என்றால், இன்றைக்கு சற்றேறக்குறைய  சுமார் நாற்பது வருடங்கள் இருக்கலாம், அந்த ராணிமுத்து நாவலை நான் படித்து. எழுத்தாளர் பெயரை மறந்து விட்டேன். அவர் எழுதியது உண்மை சம்பவங்களின் அடைப்படையிலா அல்லது முழுக்க கற்பனையா என்றால், சமாதி இருக்கிறது எனும் செய்தி, இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் என்று நமக்கு உறுதிப்படுத்துகிறது..

நிற்க,

இந்த கதையின் உண்மை நிலையினை உறுதிப்படுத்திக் கொள்ள, முகநூல் நட்பு, வரலாற்று ஆய்வாளர், தம்பி முனைவர் அன்பழகன் ஆறுமுகம் அவர்களிடம் விளக்கம் கேட்டேன்.  இப்படி ஒரு கதை உலவுவது நிஜமென்றாலும், எழுத்து வடிவில் சான்றுகள் இல்லையென்றும், முக்கியமாக பல முறை மைசூரில் வரலாற்று ஆய்வுக்காக சென்றிருந்தும், ரங்கமாளுடைய அந்த சமாதியை தான் இதுவரை கண்டதில்லை என்றும் அவர்  கூறினார் .

உங்களுக்கு யாருக்கேனும் ரங்கமாளைத் தெரியுமா?


சிதனா








No comments:

Post a Comment