இன்று மே 13 – பஞ்ச பாட்டு
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்நாளில்தான் எங்கள்
பெற்றோர்களுக்கு அடுத்த தலைமுறையினர் கலவரம் என்றால் என்ன, ஊரடங்கு என்றால் என்ன, சாப்பாடு
கிடைக்காமல் உப்புக் கஞ்சி குடிப்பது என்றால் என்ன என்பதை அறிந்துக் கொண்டோம்.
இதே போன்ற ஒரு பொதுத் தேர்தல் முடிந்த காலக்கட்டம்தான்
அதுவும். தேர்தல் முடிந்து ஒரு சில மாதங்கள்
ஆகியிருக்கலாம். எதிர்கட்சியின் கை ஓங்கியதன் எதிரொலியாக ஏற்பட்ட கலவரம் அது என்று
பெரியவர்கள் சொல்ல அறிந்திருக்கிறேன்.
அந்த நாளில் எனக்கு வயது 7 வருடங்கள் 18 நாட்கள்.
அண்ணனுக்கு கல்யாணம் முடிந்து பத்தே நாட்கள். அண்ணிக்கு தலைசீவி பூ வைத்து அண்ணனோடு
கோயிலுக்கு அம்மா அனுப்பி வைத்த போது, வாசலில் நின்று டாட்டா காட்டியது ஞாபகம் இருக்கிறது.
ஆனால் ஒரு சில மணி துளிகளில் எல்லார் வீட்டு
கதவும் பட் பட் என்று அடைபடுகிறது. (அந்நாளில் இரவில் தவிர மற்ற நேரங்களில் யார் வீட்டுக்
கதவும் சாத்தப்படுவதில்லை.) எங்களையெல்லாம் வெளியே விடாமல் என் அம்மா வீட்டில் வைத்து
அடைக்கிறார். ஏன்? புரியவில்லை.
கொஞ்ச நேரத்தில், அப்பா எங்கிருந்தோ ஓடி வருகிறார்.
அவர் உள்ளே நுழையவும் வாசலருகே என் மாமாவின் கார் வந்து நிற்கவும் சரியாக இருக்கிறது.
காரிலிருந்த படியே, கதவருகே நிற்கும் என் அம்மாவிடம், “மாமா வந்துடுச்சாக்கா…?” என்கிறார்.
அப்பொழுதுதான் ஒரு எட்டு உள்ளே எடுத்து வைத்த அப்பா, “நான் வந்துட்டேண்டா சுப்பையா,
நீ சுருக்கா வீட்டுக்கு ஓடு. வீட்டுல கெழவியும் ஜானகியும் பார்த்துக்கிட்டு கெடப்பாங்க…”
அடுத்த நிமிடம் மாமாவின் கார் கண்ணை விட்டு மறைந்தே
விட்டது.
எல்லாரும் வீடு வந்தாச்சா? இல்லை. கோயிலுக்குப் போன
அண்ணனும் அண்ணியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை.
என்ன ஆச்சு. நான் சொன்னால் ருசிக்காது. என் அண்ணியின்
வாய் மொழியாய் கேளுங்களேன் அந்த நாளில் அவர்கள் கோயிலுக்குப் போன சம்பவத்தை
“கோயிலுக்கு போய்ட்டு வரச்சொல்லித்தான் அம்மா (என்
அம்மா) அனுப்புனாங்க. ஒங்க அண்ணன் அப்படியே படம் பார்க்க கூட்டிட்டுப் போய்ட்டாங்க.
படம் முடிஞ்சி வெளிய வந்தா, ரோடே “ஓ”ன்னு இருக்கு. டாக்சிகாரங்க நிக்க மாட்டேன்னு ஓடறாங்க.
ஒரு தமிழாளு டாக்சிக்காரரு மட்டும் நிப்பாட்டி, எங்கள ஏத்திக்கிட்டாரு. புதுசா கல்யாணம்
ஆகியிருக்குன்னு தெரிஞ்சதும், “ஊரே கலவரமா இருக்கேப்பா….அவன் அவனும் வெட்டிக்கிட்டு
நிக்கிறானுங்களே…. ஒங்கள நான் எப்படி பத்திரமா கொண்டு போய் வீடு சேக்கப் போறேன்னு தெரியலையே…”
ன்னு அந்த மனுசன் கண்ணு கலங்கி போச்சு. அடிச்சி புடிச்சி கொண்டு வந்து வாசல்ல நிப்பாட்டி,
ஹாரன் அடிச்சி, வாசக் கதவு தொறந்து நாங்க வீட்டுக்குள்ள போனதும்தான் அவரு போனாரு. நல்லபடியா
இருக்கனும் அவரு.”
நினைத்துக் கொண்ட்து போல இன்று சொன்னாலும் இந்த நிகழ்வை,
கையெடுத்துக் கும்பிடுவார் என் அண்ணி, ஏதோ அந்த புண்ணியவான் எதிரே நிற்கும் உணர்வில்!
அதன் பிறகுதான் எங்களுக்கான டாஸ்க் ஆரம்பிக்கிறது.
உடனடி ஊரடங்கு. யாரும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. அப்பாவுக்கு ரயில்வேயில்
ஷண்டிங் டிரைவர் (லொக்கோமோடிவ் டிரைவர்) வேலை என்பதால், ஒரு போலீஸ்காரரின் பாதுகாப்போடு
வெளியே போய், வேலையை முடித்து விட்டு, மறுபடியும் போலீஸாரின் பாதுகாப்போடு வீடு வந்து
சேருவார். இவ்வளவுக்கும் வாசலைத் தாண்டினால், கம்பிச்சடக்கு. அதற்கே இத்தனை பந்தோபஸ்து
என்றால், வெளியே வேலைக்கு செல்பவர்கள்? வீட்டில்தான் இருந்தார்கள். என் அண்ணனுக்கு
லோங் ஹனிமூன்!
இது ஒரு பக்கம் இருக்க, பந்தாய் டாலாமிலிருந்த எனது
இரண்டாவது சித்திக்கு ஆறு ஆண்பிள்ளைகள். இந்த உள்நாட்டுக் கலவரத்தில் இந்தப் பக்கம்
அதிகம் பாதிகப்பட்ட இடங்களில் ஒன்று பந்தாய் டாலாம். என் அப்பா, “அத்தனையும் ஆம்பள
புள்ள, வெட்டிப்போட்டுடுவானுங்கடா தங்கவேலு, பிள்ளைங்கள கொண்டு வந்து இங்க விட்டுட்டு
புருசன் பொண்டாட்டி வேணுமுன்னா அங்க இருங்க…” என்று உறுதியாக சொல்லிவிட, ஒரு அக்கா,
ஆறு அண்ணன்கள், ஒரு குட்டித் தங்கை என்று எங்கள் மூவரோடு சேர்த்து பதினொரு உருப்படிகளின்
அலப்பறையை அந்த டிறவர்ஸ் ரோடு ரயில்வே வீடு தாங்கியது.
எப்பவும், “வெட்டிட்டாங்களாம், குத்திட்டாங்களாம்,
நெருப்பு வச்சிட்டாங்களாம்“ வகையரா பேச்சுகள். இதில் இன்னமும் நாட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே
போக முடியாத ஊரடங்கு. நாங்கள் இருந்த பகுதியில், பயிற்ச்சி போலீசார் காவலுக்கு வந்து
விட்டார்கள். அந்த நேரத்தில் என் தம்பி குட்டிப் பையன். நாங்கள் வலது கை பக்கம் நாலாவது
வீடு. குணவதி, இடப்பக்கமிருந்து இரண்டாவது வீடு. குணவதி ட்ரெயினிங் மாஸ்டர் குஞ்சு
மண்டுரு பொண்ணு. என் தம்பி நிமிஷ நேரத்தில் அங்கே ஓடிவிடுவான். அம்மா வெளியே போனால்,
அந்த போலீஸ் அதிகாரி, லபோ திபோ என்று கத்துகிறார் என்று, என்னை அனுப்பி வைப்பார்கள்
தம்பியை கூட்டிக்கொண்டு வர. எத்தனை தடவை அந்த நபரிடம் நான் திட்டு வாங்கியிருக்கிறேன்
என்று ஞாபகமில்லை. இத்தனைக்கும் தமிழர்தான். மலாயில்தான் திட்டுவார்.
இதுவா முக்கியம். சப்ஜெக்ட்டுக்கு வாம்மா.
ஹாங்…..! வெளியே போகமுடியாது. மரக்கறி, மீன் விற்கும்
சீனர், ரொட்டி விற்கும் பாய், ஈச்சாம்புளி, பல்லி முட்டாய் விற்கும் கூனக்கிழவன் என்று
யாருமே வராத அந்த தெருவில் குடியிருந்த நாங்கள் என்ன சாப்பிட்டோம்?
அந்நாளில் இறைச்சி, கோழி என்று எப்பொழுதும் சாப்பிட்டு
பழகியவர்கள் அல்ல நாங்கள். ஆட்டிறைச்சி, வருடத்திற்கொரு முறை வரும் தீபாவளிக்கு மட்டுமே.
கோழி, யாரேனும் விருந்தினர் வந்தால்தான். இவ்வளவுக்கும் வீட்டில் எப்பொழுதும் கோழி,
வாத்து, ஆங்சா, என்று வளர்க்கப்படும். ஒரு வாரத்திற்கொரு முறை கம்போங் மீன் அல்லது
வஞ்சனை மீன் கறி உண்டு. சம்பளம் போடும் நாளில் வெளவால் மீன், அல்லது சொத்தோங் கறி,
ஊடான் குழம்பு உண்ணக் கிடைக்கும். மற்ற நாட்களில் சாம்பார், பால்குழம்பு, வெந்தயக்
குழம்பு, ரசம் என்றுதான் சாப்பிட்டோம். ஆக எங்களுக்கு அப்பொழுது நாக்கு நீளமில்லை.
இருந்தாலும், கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்களேன். நஞ்சான் குஞ்சான் வயதுதான் அனைவருக்கும்.
கஞ்சி… அதுவும் உப்புக் கஞ்சியும் கொஞ்சம் நெத்திலியும் கூடவே, வெறும் சுக்காவில் ஊறிய
எலுமிச்சை ஊறுகாயும் அல்லது ரசமும்தான் சாப்பாடு. இதையும் விட்டால் வேறு வழி?
இது எவ்வளவு காலத்திற்கு போனது என்று ஞாபகமில்லை.
கிட்டத்தட்ட மூன்று கால மாதத்திற்குப் பின் தான் ஓரளவு மக்கள் நடமாட்டம் அதிகரிக்க
ஆரம்பித்தது தெருவில். அதன் பின்னர் தான் சீன வியாபாரிகள் வெளிவர ஆரம்பித்தார்கள்.
(அன்றைய நாளில் சீனர்கள் மட்டுமே வியாபாரிகள். பிரச்சனைக்கு இவர்களே காரணம் என்று சொல்லப்பட்டது
அந்நாளில். அது உண்மையல்ல என்றார்கள் பின் நாளில்)
நாங்கள் சகஜமாகி, நல்லபடியாக வேலை, பள்ளிக்கூடம் என்று
கிளம்பி வீட்டை விட்டு வெளியே போகவும் வரவும், அதே நேரத்தில் ஒழுங்கான உணவுக்கு ஆட்பட்டதும்
ஒரு ஆறு மாத காலத்திற்கு பின்னரே.
அதனால்தான், இன்று வரை எங்கள் வீடுகளில் ஒரு பிடி
அரிசி கூடுதலாகவே இருக்கும். ஏதும் ஒன்னுன்னா, உப்பு கஞ்சி வச்சி குடித்துக் கொள்ள
தோதாக. ஏன், இப்பொழுதும் தேர்தலுக்கு முன் வாங்கிய ஐந்து கிலோ அரிசி என் எழுத்துக்கு
சாட்சியாக இருக்கிறதே, அடுப்பங்கரையில்.
ஆனாலும், அந்த மே 13 விட்டு சென்றிருக்கும் வடுக்களை
இன்றைய தலைமுறை உப்புக் கஞ்சியை புறக்கணிப்பது போல மூத்த தலைமுறையினரால் புறக்கணித்து
விட முடியாது.
தலைநகரில், அன்றைய சுல்தான் ஸ்ட்ரீட் (பெட்டாலிங்
ஸ்ட்ரீட்), செளக்கிட், பந்தாய் டாலாம் தவிர்த்து மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு இடம்
செந்தூல். தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறாள் அந்தக் குழந்தை. வீடு புகுந்த கலகக்காரங்களுக்கு
எதை வெட்டுவது என்று தெரியாமல், தொட்டிலில் கிடந்த குழந்தையின் இரண்டு பிஞ்சு கைகளையும்
வெட்டி விட்டு போனார்கள். நாட்டின் தேசதந்தை அந்தக் குழந்தையை கைகளில் ஏந்தி அழுத காட்சியை
என் அக்கா எப்பொழுதும் சொல்வார். அக்காவுக்கு புகுந்த வீடு செந்தூல்பாசா. (செந்தூல்
பாசார்)
என் அப்பா எங்கிருந்தோ ஓடி வந்தார் என்றேனே, அவர்
ஒரு அன்பானவரிடமிருந்துதான் தப்பி ஓடி வந்திருக்கிறார்!
அன்றுதான் அண்ணன் கல்யாணத்துக்கு வந்த மொய் பணத்தை
எண்ணி, கல்யாண பாக்கியெல்லாவற்றையும் நேர் செய்து விட்டு, பதினைஞ்சாங்கட்டை கள்ளுக்
கடையில் நண்பர்களோடு அரட்டை அடித்து விட்டு, தை சேங் பாருக்குள்ளும் நுழைந்து ஒரு பேக்
அருந்திக் கொண்டிருக்கும் போதுதான், சீன முதலாளி அவசர அவசரமாய் உள்ளே இருப்பவர்களையும்
வைத்தே பலகைகளை எடுத்து வைத்து கதவடைப்பு செய்ய, பதறி போயிருக்கிறார் அப்பா. “என்னடா…”
என்ற இவர் கேள்விக்கு, “வெளிய வெட்டிக்கிறானுங்கடா பெருமாளு, நீ இங்கியே இரு… வெளிய
போனா, ஒன்ன வெட்டிடுவானுங்க….” (அந்நாளில் சீன வியாபாரிகள் சரளமாக தமிழ் பேசுவார்கள்)
என்று அப்பாவை தடுக்க, “ஒரு பலகைய மட்டும் எடுத்து விடுடா, நான் இப்படியே கம்பி சடக்கோட
பூந்து ஓடிடுறேன். வீட்டுல புள்ளக்குட்டிங்க இருக்குடா…” என்று அந்த சீனரின் அக்கரையும்
அன்பும் கலந்த பிடியிலிருந்து விலகிக் கொண்டு, இருப்புப்பாதையின் ஊடே ஓடி வந்து, குடியிருப்புக்கும்,
ரயில் பாதைக்கும் இடையே இருந்த மதிலில் சின்ன ஓட்டை ஏற்படுத்தியிருந்ததை கவனத்தில்
கொண்டு அதன் வழியே வீடு வந்து சேர்ந்தவர். அப்பாவும் தங்கவேலு சித்தப்பாவும் “அந்தக்காலத்துல…….”
என்று பேச ஆரம்பித்தால், இந்தக் கதையெல்லாம் வெளிவரும்.
கையிழந்த அந்தக் குழந்தை சற்றே வளர்ந்த பின், அவரின்
படத்தை உள்நாட்டு பத்திரிக்கை ஒன்று பிரசுரித்து பார்த்த ஞாபகம். அதன் பின் அவர் என்ன
ஆனார் என்று தெரியவில்லை.
இப்பத்தான் இன்னொரு விஷயம் ஞாபகம் வருது. நஞ்சானும்
குஞ்சானுமா சின்னம்மா வீட்டு அண்ணன் அக்கா தங்கைகள் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரு வருடம்
டிறவர்ஸ் ரோட் வீட்டில்தான் இருந்தார்கள். அதன் பின் தான் பந்தாய் டாலாம் குடியிருப்பை
ஜிஞ்சாங் பகுதிக்கு மாற்றியது அரசாங்கம். இடையே, ஒருநாள் இரவு, பக்கத்து வீட்டு பாப்பா
அக்கா வீட்டுக்காரர் “பெருமாள்…..” என்றபடி வந்து நிற்கிறார். அவர் சற்று அதிகமாகவே
வயதானவர். பயங்கர ஆத்மீகவாதி. காலையும் மாலையும் குடும்பத்தோடு தேவாரம் பாடி பூஜை செய்பவர்.
நாங்கள் இன்னும் சற்று நேரத்தில் ஏற்படப் போகும் விபரீதம் புரியாமல் …கீக்கீ… என்று
சிரித்தபடி ஆட்டத்தில்.
கொஞ்ச நேரத்தில், பக்கத்து வீட்டுக்காரர் கொண்டு வந்த
வழக்கொன்று, அப்பாவிடமிருந்து அண்ணன் கைக்கு போய், பிள்ளைகள் அனைவரையும் முன்னறைக்கு
கூப்பிடுகிறார்கள். முன்னறை? ஜஸ்ட்…. 3 அடி அகலம் 5 அடி நீளம் இருக்கும் அந்த இடம்.
அவ்வளவே!
எல்லாரும் வந்து நின்ற பின்தான் அண்ணன் கேட்கிறார்,
“யாரு…லங்சாட் பழத்த சாப்பிட்டு பக்கத்து வீட்டுல போட்டது?” பொய் பேச தெரியாத சில குட்டீஸில்
என்னையும் சேர்த்து கணேஷ் அண்ணன், மணி அண்ணன், பரிமளா, என் தங்கை, தம்பியும் அடக்கம்.
விஷயம் இதுதான். ரயில்வே வீட்டில் முனைக்கு முனை (மூலை) முக்கோண வடிவில் இடைவெளி இருக்கும்.
ஒரு கை விடும் அளவில் இருக்கும் அந்த சந்து. முன்பக்கம் எங்கள் வீட்டில் ஒரு மேடையில்
சாமிகள் குடியிருப்பது போல அவர்கள் வீட்டிலும் முன்பக்கமே பூஜை மேடை. எங்கள் வீட்டு
அந்த முக்கோண சந்தின் வழி யாரோ லங்சாட் பழத்தை சாப்பிட்டு விட்டு, கைப்பிடி தோலை பக்கத்து வீட்டு பூஜை மேடையில் போட்டிருக்கிறார்கள்.
அண்ணனும் வாய் நோக, “யாரு போட்டது….உண்மைய சொல்லிடுங்க….
நான் அடிக்க மாட்டேன்…” என்கிறார் கையில் ரோத்தானை வைத்துக் கொண்டு.
ஒரு உருப்படிக்கூட “நான் தான் போட்டேன்..” என்று ஒத்துக்கொள்ளவேயில்லை.
அண்ணனுக்கு பொறுமை போயே போய்விட்டது.
என்ன ஆச்சுங்கறீங்களா…?
இறுதி தீர்ப்பு…..
வீட்டிலிருக்கும் அனைவருக்கும் அடி!
முயல் பிடிக்கும் முகமெல்லாம் அண்ணனுக்குத் தெரியும்
தான் என்றாலும், எதை எடுத்தாலும் ஒரு ரூபாய் கணக்காய் அனைவருக்கும் ரோத்தானில் மூன்று
அடி.
அடி வாங்கி அலறி துடித்து போனதில் நான், கணேஷ் அண்ணன்,
மணி அண்ணன், பரிமளா, பரமேஸ், கண்ணா லீடிங். முதலைகள் எல்லாம் அடிவாங்கிக் கொண்டு அமுக்குன
கள்ளனாய் வாய் மூடிக் கொண்டன.
ஐம்பது வருடங்கள் கடந்து விட்டது. அம்மா அப்பா, சித்தி
சித்தப்பா, அண்ணன், அக்கா, சித்தி வீட்டு பெரியப்பு அண்ணன், சின்னப்பு அண்ணன் என்று
அத்தனை பேரும் காலனோடு கலந்து விட்டார்கள். இன்றும் பச்சைப்புண்ணாய் வலிக்கிறது, யாரோ
சாப்பிட்டு போட்ட அந்த லங்சாட் பழ தோல் ஏற்படுத்தி விட்டுப் போன ரணம்.
ஐயே! எதையோ சொல்ல வந்து எங்கயோ போய்ட்டேன் நான். சாரி.
நம்ப கதைக்கு வருவோம். ஆங்…. கஞ்சி குடித்த பழைய கதை சொன்னேன் இல்லையா….இன்றைய தேதிக்கு
அப்படி ஒரு நிலை (மே 13 கலவரம் போல ஒன்று) மறுபடியும் ஏற்பட்டால், நம் வீட்டுக் குழந்தைகள்
எதை சாப்பிடுவார்கள்? முன்னோர் வழியில் உப்புக் கஞ்சி குடிப்பார்களா, ஆரோக்கிய உணவு
என்று குதிரையாய் கொள்ளு தின்பார்களா அல்லது அப்பவும் கே.எஃப். சி தான் கேட்பார்களா?
கூழோ குப்பையோ குடிச்சிக்கிட்டா பொழச்சிக்குவீங்க
கண்ணுங்களா.
சிதனா
நான் அப்பாவின் மகள் – நினைவுகளின் தாலாட்டு
“நான் அப்பாவின் மகள்” – இது கவிஞர் சுகிர்தராணியின்
கவிதை தலைப்பு. மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்வில் அவரை சந்தித்த போது, பேச்சு
வாக்கில் தன் அப்பா பற்றி அவர் சொல்ல ஆரம்பிக்க, இங்கே நான் முன்னொரு காலத்திற்கு போனது
நிஜம்.
நான் சற்று ஆர அமர பிறந்த பிள்ளை என்பதால், கண்ணுக்குத்
தெரியாத பாசத்தை துமியளவு மட்டுமே வெளிக்காட்டும் கண்டிப்பு மிக்க அப்பா அவர். பள்ளியிலிருந்து அழைத்து வரும்போதே, “அம்மாக்கிட்ட
சொல்லாத..” என்று வழியில் எனக்குத் தின்பண்டம் வாங்கித் தருவது, வீட்டிற்கு வந்ததும்
“சோறு வேண்டாம்….” எனும் எனது நிலைப்பாட்டில், நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, “வழியில
என்னத்தை வாங்கிக் குடுத்தாப்பல….?” என்று அப்பாவிடம் அம்மா குறுக்கு விசாரணை செய்வதும்
சகஜம்.
சற்று வளர்ந்த பின், அப்பாவுக்கு நான்தான் விடுமுறை
நாட்களில் “காலை பசியாற“ கொண்டுப் போய் தருவேன். “பாலத்துல ஏறிப் போய் குடுத்துட்டு,
மறுபடியும் பாலத்துல ஏறித்தான் வரனும்…” - என்னதான் அம்மா இப்படி சொன்னாலும், எனது
வீர தீரங்கள் கம்பிச்சடக்கில் அரங்கேறிய காலங்கள் அவை. ஒற்றைக் கம்பியில் அடி மேல்
அடி வைப்பதும், இரண்டு கம்பிகளில் ஒற்றை இரட்டை என்று பாண்டி ஆடுவதும்…. ஓ…. அது ஒரு
வசந்த காலம். (என்னதான் அப்பாவின் நண்பர்கள் அங்கே கண்குத்தி பாம்பாக இருந்தாலும்….)
ஒரு நாள் பிற்பகல் வேளை தேநீர் கொண்டு போய் தந்து
விட்டு திரும்பும் நொடியில், “அம்மா, இத தூக்கிட்டுப் போயிடறியா…” என்று என் உயரத்தை
விடவும் பெ….ரீ…ரீ…..ரீ ய…. சட்டத்தை தூக்கி தோளில் வைத்து விட்டார். கடவுளே…..! தோள்பட்டையை
யாரோ அசைத்து விட்டு போனது போலிருக்க ஒரு நிமிஷம் என் உடம்பு ஒரு சின்னத் தள்ளாட்டத்தை
உணர்ந்தது.
“தூக்க முடியிதாம்மா….. கொண்டு போயிடுவியா…?” என்று
அப்பா கேட்க, தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டாத வீர மகளாய், அந்த சட்டத்தை கம்பிச்சடக்கின்
ஊடே பாய்ந்து கடந்து தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த போது, அம்மா கேட்டார், “ஏய்…எங்க
கெடந்து தூக்கிக்கிட்டு வந்த இத .நீ..?”
“அப்பாதான் குடுத்தாரு.”
அதன் பின் தான் தோளிலிருந்ததையே வாங்கி அப்பால் வைத்தார்
என் அம்மா. இரவில் அப்பாவிடம் சத்தம், “அவ்வளவு கனமான சட்டத்தை அந்தப் பிள்ளைக்கிட்ட
குடுத்தா தூக்கிக்கிட்டு வற சொல்றது? கையில காலுல போட்டுக்கிட்டா என்னாப் பண்றது..?”
அப்பா சொன்னார்.”அது எம் புள்ளடி…”
நினைத்துக் கொண்டாற் போல திடீரென சொல்வார், “நீ ஆம்பள
பிள்ளையா பொறக்க வேண்டியதுமா… ஒரு சுழி தப்பிப் போயி பொம்பள பிள்ளையா பொறந்துட்ட.”
தன் சொல்லை மெய்பிப்பது போல பையன்கள் செய்யும் வேலைகளில்தான் சிறு வயதிலிருந்தே என்னை
பழக்கியும் விட்டிருக்கிறார்.
அண்ணன் எனக்கு பதினைந்து வயது மூத்தவர். அவர் அப்பாவின்
கைக்கு தோதானவராக இல்லை போலும். கோழி கூண்டு அடிக்க அப்பாவுக்கு நான்தான் கையாள். தோட்டக்
கலையும் அப்பாவின் மேற்பார்வையில் கற்றுக் கொண்டதே. அவரைப் பந்தல் போடவும் கூட நிற்பேன்.
பந்தல் ரெடியானதும், விதையிடவும் என்னைத்தான் அழைப்பார். (உற்பத்தியை பெருக்கும் கைகளாம்).
நான் இன்றுவரை அறிந்து வைத்திருக்கும் அத்தனை மூலிகை செடிகளின் பெயர்களும் அப்பா தன்
கைபட நட்டு வைத்து அறிமுகப்படுத்தியதே.
உறவுகள் மற்றும் அக்கம் பக்கம் நெருங்கிய நட்பில்
யார் வீட்டிலாவது திருமணம் என்றால், அப்பா சொல்லிக் கொடுக்க பந்தல் அலங்கரிக்க கீத்து
பின்னித் தந்திருக்கிறேன். தென்னங் குறுத்து பின்னவும் கற்றுத் தந்திருக்கிறார். கூடவே,
மெல்லிய மூங்கில் ப்ளாச்சுகளை சரி பாதியாக பிளந்து வெயிலில் பதமாக காயவைத்து, அவற்றை
எப்படி முடி போட்டு தட்டி பின்னுவது என்பதனையும் கைப்பிட்டித்து பழக்கியிருக்கிறார்.
இவ்வளவுக்கும் வயது பத்தோ பதினொன்றோதான். இப்பவும் ஏதேனும் விழாக்களில் தென்னங் குருத்தை
வெட்டிக் கொண்டுவந்து விட்டு, அதை பின்னித் தர ஆள் இல்லாமல் இளவட்டங்கள் தவிக்கும்
போது, “குடுப்பா, நான் பின்னித் தரேன்..” என்றால் பையன்கள் என்னை விசித்திரமாய் பார்ப்பார்கள்.
நான் பின்னுவதை கண்டு “எப்படி அண்டி…..”? என்பார்கள். அப்பாவால் கைப்பிடித்து வளர்க்கப்படும் பிள்ளைகள்
எப்பவுமே இப்படித்தான் என்று இந்தக் கால பிள்ளைகளிடம் நீண்ட வசனம் பேச முடியுமா? “எங்க
அப்பா சொல்லிக் கொடுத்தாருப்பா.” என்று முடித்து விடுவேன். கைவேலைகள் மட்டுமல்ல, சாப்பாடும்
அப்பா வழிதான்.
நீங்கள் கேழ்வரகு களி சாப்பிட்டிருக்கிறீர்களா? நான்
அதை ஏறக்குறைய ஒன்பது வயதில் சாப்பிடக் கற்றுக் கொண்டேன். அவ்வளவு பஞ்சமா ஒங்க வீட்டுல
என்று கேட்க கூடாது. அப்பாவுக்கு மிக இள வயதிலேயே நீரிழிவு நோய். கூடவே சிறுவயதிலேயே
பற்கள் கொட்டி விட, சோற்றைத் தவிர வேறெதும் சாப்பிட முடியாது. மருத்துவர் ஆட்டா ரொட்டி
சாப்பிடு என்கிறார். என் அம்மாவிடம் இருந்த ஒரே சாய்ஸ் கேழ்வரகுதான்.
எங்கள் வீட்டில் ஒன்று சொல்வார்கள், “செல்றதுக்கும்
செல்லாத்துக்கும் செட்டியார் இருக்கார்…” என்று. என்னைத்தான். எது கண்ணில் படுகிறதோ
அதையெல்லாம் கபளீகரம் பண்ணி விடும் ஆள் நான். ருசி புசி யெல்லாம் அறியேன். பசிக்கு
அம்மா எதைத் தந்தாலும் சாப்பிட்டு விடுவேன். மற்ற உருப்படிகள் அப்படி அல்ல. அந்த வகையில்
அப்பாவுக்கு செய்யப்படும் கேழ்வரகு களியை நானும் பங்கு போட்டுக் கொள்வது உண்டு. அப்பா
அம்மா, அண்ணி, நான் தவிர வேறு யாரும் “கேழ்வரகு” என்றுக் கூட உச்சரிக்க மாட்டார்கள்.
“நீ சாப்புடும்மா… ஒடம்புக்கு நல்லது…” என்று அப்பாவும் தாளம் போடுவார். ஆனால், புளிச்சக்கீரை
என்கிற ஒரு வஸ்து மட்டும் எனக்கு ஆகாது. அப்பாவோடு அமர்ந்து சாப்பிடும் நாளில், கூடவே
புளிச்சக்கீரை இருந்தால், எனக்கு சாப்பாடு இறங்காது. அப்பா கட்டாயப் படுத்துவார் சாப்பிட
சொல்லி. உவ்வே……!
மரவள்ளிக்கிழங்கை எப்படி சாப்பிட உங்களுக்குப் பிடிக்கும்?
அவித்து? தாளித்து? இனிப்பு போண்டா? தோட்டத்தில் கொட்டிக்கிடக்கும் புற்களையும் இலை
தழைகளையும் நெருப்பிட்டு, கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் இளசான கிழங்கு தூருகளை
பிடிங்கி போடுவார். நெருப்பு அடங்கியதும் எடுத்து பிளந்து தருவார். ஆ!. தேவாமிர்த வரிசையில்
மேலும் ஒன்று! “ஒரு ஜாடையில….. பஞ்சத்துல அடிபட்டவ மாதிரியே இருக்கே……” என்கிறீர்களா?
இரண்டாவது உலக போரில் அடி பட்டவர்கள் வீடுகளில் இந்த மரவள்ளிக்கிழங்கு அன்னப்பூரணிக்கு
சமம்.
கலைகளை கற்றுக் கொடுத்த அப்பாதான் பூப்படைந்ததும்
“பள்ளிக்கொடத்த விட்டு நிப்பாட்டு…” என்று குரல் எழுப்பியவர். “வீட்டுல நல்லபடியா படிக்கிறதே
அது ஒரு பிள்ளைதான்…. இப்ப ஸ்கூல விட்டு நிப்பாட்ட வேண்டாம்..” என்று அண்ணன் அபயகரம்
நீட்டாமல் போயிருந்தால் என் படிப்பு என்னாகியிருக்குமோ.
அப்பா அப்படித்தான்…. வயதுக்கு வந்த பெண்பிள்ளை வெளியே
தெருவே போகக்கூடாது எனும் கொள்கையில் இருந்தவர். யாரையும் பார்த்து சிரிக்கக்கூடாது
என்பவர். அதனாலேயே வீட்டில் சற்று சத்தமாக சிரித்து விட்டால், “எடு அந்த வெளக்க மாத்த….
பொம்பளை பிள்ளைக்கி என்னா சிரிப்பு அது” என்பார் அம்மா. அது மட்டுமா? பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்
போதும் அருகே நின்று கதை கேட்கக்கூடாது. விருந்தினர் வந்தால் முன்பக்கம் வரக்கூடாது.
அண்ணன் அக்கா பிள்ளைகளுக்கு ஆயாம்மா வேலை பார்க்க வேண்டும். இப்படி பல கெடுபிடிகளுக்கிடையே
வாழ்ந்த போது கூட சுமை அறிந்ததேயில்லை அந்நாளில். அதை இயல்பாகவே எடுத்துக் கொண்டோம்.
முக ஒப்பனை செய்யக் கற்றுக் கொள்ளாததற்கும், வாகனம்
ஓட்டக் கற்றுக் கொள்ளாததற்கும், ஆறாம் படிவம் வரை படித்திருந்தாலும், மேற்கொண்டு வேறெந்த
கல்வியையும் தொடராமல் போனதற்கும் (இப்போ படிக்கிறேன்) வீட்டுப் பெரியவர் மேல் இருந்த
மரியாதை கலந்த பயமே. இருப்பினும் அப்பா பலதும் கற்றவர். ராமாயணம், மகாபாரதம், மாரியம்மன்
தாலாட்டு, ஒப்பாரி என்று எல்லாமே தலைகீழ் மனப்பாடம். இவ்வளவுக்கும் அவர் படித்ததோ மூன்றாம்
வகுப்பு வரைதான். பயங்கர ஞாபகசக்தி! அழகாக நடனம் ஆடுவார். அற்புதமாய் பாடுவார். வீட்டுப்
பிள்ளைகள் ஆடக்கூடாது, பாடக்கூடாது!
அப்பா அழகன். என் மூன்றாவது சித்தி சொல்வார், “ஒங்கப்பா
என்ன நெறம்…. ஒங்க தாத்தாவ பார்த்திருக்கனும் நீ…” என்று. எவ்வளவுக்கு அழகோ அவ்வளவுக்கு
கோபமும் குணமும் சரிபாதி.
கோபம் வந்தால் “எட்டுக் கழுதை வயசாச்சி, அறிவே இல்லை”
என்றும், “நீ பொறந்த அன்னைக்கி நட்டு வச்சேன் அந்த தென்னை மரத்த. அது வளர்ந்து பலன்
கொடுக்குது ஒன்ன எதுக்கு நான் பெத்தேன், தண்டத்துக்கு…” என்பார். அம்மாவின் திட்டை
விட அப்பாவின் சொல்லுக்கு வீரியம் அதிகம். அழ வைக்கும் வார்த்தைகள் அவை.
அடிக்க மாட்டாரா என்கிறீர்களா?
ஓ! அது இல்லாமலா? அப்பாவுக்கு மிகவும் பிடித்த்தே
“அடி ஒதவறாப்பல அண்ணன் தம்பி ஒதவ மாட்டாங்க” பழமொழிதான். இடது புறங்கையால் ஒன்று கொடுத்தார்
என்றால், “ஙொய்” எனும் காது.
எது எப்படி இருந்தாலும், அவர் செலுத்திய அந்த துமியளவு
பாசமே இன்றுவரை அப்பாவை என் ஹீரோ என்று சொல்ல வைத்திருக்கிறது!
அக்கா என்றால் அடிதடி – பஞ்சபாட்டு
நீங்களெல்லாம்
சிறுவயதில் உணவை எப்படியெல்லாம் ரசித்து சாப்பிட்டிருக்கிறீர்கள்? ரசிப்பும் ருசிப்பும் கிடக்கட்டும். குறைந்த பட்சம்
தட்டில் என்னவெல்லாம் இருக்கிறது என்றாவது, ஏதாவது
ஒரு நாளில் கவனித்தது உண்டா? ஒவ்வொரு பதார்த்தத்துக்கும்
என்ன சுவை என்று அறிந்ததுண்டா? ஆம்! என்றால் நீங்கள்
பாக்கியசாலிகள்!
1967லிருந்து 1968 வரை மாமா பிள்ளைகள் சித்திப்
பிள்ளைகள் என்று மேலும் ஆறு பேரோடு நான் என் தங்கை தம்பி மூவரும் ஒரே வீட்டில்
வளர்ந்தோம். வேறெங்கே? டிறவர்ஸ் ரோடில்தான்.
அந்நாளில்
தனிக்குடித்தனம் என்பது கெட்ட வார்த்தை. பெரிய மாமாவுக்கும் கடைக்குட்டி
மாமாவுக்கும் ஏதோ மனவருத்தம் ஏற்பட்டு, பெரிய
மாமா தனியே போகும் ஐடியாவை தன் பெரியக்கா கணவரான என் அப்பாவிடம் சொல்ல, (அந்த நாளில் எந்த நல்ல கெட்ட சங்கதி என்றாலும், வீட்டுக்குப் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்பது எங்கள்
குடும்பத்தில் நடப்பில் இருந்தது) அந்த பேச்சுக்கே இடமில்லை என்றுவிட்டு, உடனே சீன துக்காங் காயூவை வரவழைத்து, அந்த ரயில்வே வீட்டின் உள்ளறையில் மேல்கடை (அதாவது
ப்ராஞ்சா என்பார்களே அது போல) ஒன்றை ஏறிச்செல்வதற்கு வசதியாக தாங்காபடியெல்லாம்
வைத்து கட்டிவிட்டார். ஆக, மாமா குடும்பத்தாருக்கு
படுத்துக் கொள்ள தனி இடம் அமைந்து விட்டது.
டிறவர்ஸ்
சாலை ரயில்வே வீட்டின் உள்ளறை ஒரு தையல் மிஷின், மூன்று
அலமாரிகள் வைக்கவும் அப்பா அம்மாவோடு அக்கா மற்றும் சற்று ஆர அமர பிறந்த
கடைக்குட்டிகள் நாங்கள் மூவர் படுத்துக்கொள்ளவும் மட்டுமே இடமிருந்த கையளவு வீடு.
அண்ணன் முன்பக்கம் வரவேற்பு அறையில் படுத்துக் கொள்வார். அதனால்தான் இந்த மேக்கடை
உருவாக்க வேண்டிய அவசியம்.
இது
ஒரு பக்கம் இருக்க இடையில் கடைக்குட்டி சித்தியின் குடும்பம் திடீரென பிரவேசம்
பண்ணும். சில பல மாதங்கள் எங்களோடு தங்கியிருப்பார்கள். ஏன்? வெரி சிம்பிள். சித்தப்பா அடிக்கடி மலையேறுவார். ஏறிய
சாமி இறங்கும் வரை சித்தி இப்படித்தான் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அல்லாட
வேண்டும். ஆக அங்கே மூன்று பேர். மாமா வீட்டில் மூன்று பேர். ஆக மொத்தம் ஒன்பது
பேர்.
நான்
அனுபவித்த இந்த பே….ரி….ன்….ப…ம் இரவில்தான் எப்பொழுதும் அரங்கேறும். ஒரு
பாத்திரத்தில் (குட்டி பேசின்) சோறு, கறி, வெஞ்சனம் என்று எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு, எங்களையெல்லாம் பெயர் சொல்லி அழைப்பது என் அக்கா
மாத்திரமே (இது அவருக்கென்று ஒதுக்கி விடப்பட்ட நித்திய கடமை). நாங்கள் எல்லாரும்
வந்தோமா…? அடடா! நாங்கள் என்றால்
யார் என்கிறீர்களா..? கெளரி, பரமேஸ், கண்ணா, குமார், சாந்தி, மணி, மாலா, முரளி, சிவா.
வந்தோமா….
வரிசையாய் உட்கார்ந்து விடவேண்டும். நடுநாயகமாக அக்கா உட்கார்ந்திருப்பார். சிறிது
நேரத்தில், வரிசையாய் அமர்ந்திருந்தவர்கள்
அரை வட்டமாக தன்னிச்சையாகவே இடம் மாறியிருப்போம்.
ஓகே…
ஸ்டார்ட்! பாத்திரத்தில் இருக்கும் அனைத்தையும் எங்களை சாட்சி வைத்தே அக்கா ஒன்றாக
கலப்பார். பிறகு பிசைவார். அவர் பிசையும் போது சாத கலவை அவரது மணிக்கட்டு வரை
போகும். (அதுவா முக்கியம்). பிறகு தன்னுடைய கையால் ஒரு உருட்டு உருட்டுவார்.
கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் பெரிது பெரிதாய் பிடிக்கப்படும் பொரிவிளங்காய்
உருண்டை சைஸில் இருக்கும் அந்த சோற்று உருண்டை.
முதலில்
இருப்பவர் அப்பவே வாயை ஆ வெனத் திறந்துக் கொண்டு ரெடியாய் இருக்க வேண்டும்.
ஒன்…டூ….ஜூட்…. என்பதாக அந்த சோற்று உருண்டை முதல் நபர் வாய்க்குள் போய் சரியாக
உட்கார்ந்துக் கொள்ளும்…. அடுத்து….அடுத்து….அடுத்து… என அனைவர் வாயிலும் முதல்
ரவுண்ட் சோற்று உருண்டை போய் சேர்ந்ததும் இரண்டாவது உருண்டை…இதோ
வரேன்…வரேன்…வந்துட்டேன்… என்று வந்தே விடும்,,, கொஞ்சம் பெரிய வாய்கள் என்றால் நான், குமார், சாந்திதான்.! மத்ததெல்லாம் வாயில் வைத்துக்
கொண்டிருக்கும். சோ..வாட்? மெல்ல சாப்பிடறது..!
என்கிறீர்களா? அதானே முடியாது.
முதல்
ரவுண்ட் சோற்றை இன்னமும் வாயில் வைத்துக் கொண்டிருக்கும் பாவிகளுக்கு என்
அக்காவின் சாம்ராஜ்ஜியத்தில் மிக கடுமையான தண்டனைகள் உண்டு.
முழுங்கு….
சுருக்கா…. முழுங்கு….. என்று………………………………………….
தலையில்
ஓங்கி ஒரு குட்டு…… (ஐயோ….. வலிக்கிதே….)
முதுகில்
ஓங்கி ஒரு தட்டு…… (க்கு க்கு….ம்ம்…ஆ..ஆ…ஆ)
உங்களுக்கே
அழுகை வருகிறதா….?
“கண்ணுல தண்ணி வந்துச்சு
…கொன்னுடுவன் கொன்னு…..”
“இப்ப என்னத்துக்கு
இப்பிடி கண்ணும் வாயும் பிதுக்கிக்கிட்டு…. அழுவு சொல்றேன் இப்ப….. நீ அழுவு
இப்ப….….. வாயத்தொறந்த ரோத்தான் பிஞ்சிடும்…..விறு விறுன்னு முழுங்கு…..”
(சொல்ல மறந்துட்டேனே…..
பக்கத்துல ஒரு ரோத்தான் கூட இருக்கும். அக்காவுக்கு எப்பவாவது கை
வலிச்சிடுச்சின்னா, அப்ப ரோத்தான்
எடுப்பாங்க).
ஒருநாளும்
எங்களைப் பார்த்து, “சாப்பிடு…” என்று என்
அக்கா சொன்னதே இல்லை!
“முழுங்கு”…தான்…!
அக்காவின்
அராஜகத்தினால் முழுங்கித்தான் வைத்தோம் அனைவரும்!
கடித்து, ருசித்து, மென்று, என்பதெல்லாம்…… ஹுஹும் சான்ஸே இல்லை.
கடித்து, ருசித்து, மென்று, என்பதெல்லாம்…… ஹுஹும் சான்ஸே இல்லை.
கிட்டத்தட்ட
1968ல் அக்கா திருமணமாகி
செல்லும் வரை, நாங்கள் இப்படித்தான்
சாப்பிட்டோம். சாம்பாரா, ரசமா, பால் குழம்பா, மீன்
குழம்பா ஹுஹும்….ஒன்றுமே தெரியாது. தொட்டுக்க….கடிச்சிக்க…. அவரையா, உருளையா, வெண்டையா, கத்தரியா…..மீன் பொரியல்னா அது, கம்போங் மீனா..... கானாங்கெழுத்தியா.... கருவாடுன்னா....
கழுத்தறுத்தானா…….நெத்திலியா.... ஹுஹும்….. ஒரு சுவையும் அறியோம் பராபரமே!
அக்கா
காலமாகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிறது. அவர்
வாழ்ந்த காலங்களிலும் சரி, இறந்த பின்னரும் சரி, என் சித்தி மகள் மாலாவுக்கு மட்டும் அக்கா என்றால், அவர் எங்களுக்கு சோறூட்டிய படலம்தான் ஞாபகத்தில்
இருக்கும் போலும்.
விருந்து
விஷேஷங்களில் நாங்கள் உறவு பிள்ளைகள் ஒன்றாய் சேரும் போது, மறக்காமல் மாலா கேட்பது, “கெளரி, நமக்கெல்லாம் பாக்கியம்
அக்கா சோறு ஊட்டுவாங்களே, ஞாபகம் இருக்கா…? முதுகுல ஒரு அடி, தலையில
ஒரு கொட்டு…… முழுங்கு முழுங்கு..ன்னுவாங்களே….”
நஞ்சானும்
குஞ்சானுமாய் ஒன்பது பிள்ளைகளுக்கு தனி தட்டு ஒதுக்கி, அவர்கள் மேல கீழ சிந்தி, ஒரு
பிடி சோத்துக்கு ஒரு மணி நேரம் உட்கார்ந்து தரையை சூடாக்கி, அப்படியும் தட்டில் இருப்பதை சாப்பிடாமல் சோற்றை மட்டும்
உழப்பி, பிறகு அத்தனை பாத்திரம்
பண்டத்தையும் எடுத்துப்போட்டு கழுவி என்று நேர விரயமும் மனித ஆற்றல் விரயமும்
ஏற்படா வன்ணம் என் அக்கா சோறு ஊட்டிய அந்த பேரின்பம் எங்களுக்கே எங்களுக்கானது!
நான் மறந்தாலும் மாலா மறக்க மாட்டாள். ஒரு வேளை தன் பேரன் பேத்திகளுக்கும் தன்
பெரியம்மா மகள் தங்களுக்கு சோறு ஊட்டிய வரலாறு சொல்லி சோறு ஊட்டலாம்.
இந்த
சோறு ஊட்டும் படலத்தை மிஞ்சியும் நிறைய நினைவுகள் உண்டு அக்காவைப் பற்றி. அதில்
ஒன்றுதான் நான் அடிக்கடி பகிர்ந்துக் கொள்ளும் டாம் & ஜெர்ரி கார்ட்டூன்! அக்காவுக்கு இந்த கார்ட்டூன் ரொம்பவும்
பிடிக்கும்.
தடம்
மாறுகிறேனோ.
இப்ப
எங்க வீட்டுல யாருக்காவது இப்படி (4, 5, வயசு) சோறு ஊட்டப்படுகிறதா என்றால் இல்லை. நாலு வயசு அர்ஷனுக்கும்
தனியேதான் போட்டுக் கொடுக்கிறார் மருமகள். தன் வயிற்றுக்கு ஏற்ப அர்ஷன்
சாப்பிட்டுக் கொள்கிறார், மேலே கீழே கொட்டிக்
கொள்வது எல்லாம் சகஜம். மிஞ்சியதுக்கும் மேல் கொண்டும் ஒரு பாட்டல் பால்
குடித்துக் கொள்கிறார். அவ்வளவே…. நோ அடி… நோ குத்து!! என்னே மகிழ்ச்சிகரமான உணவு
நேரம்!!
ஆங்!
சொல்ல மறந்த முக்கிய செய்தி! இப்படி ஒருவர் தின்ற எச்சில் சோற்றை மற்றவர் வாயில்
வாங்கிக் கொண்டு வளர்ந்ததனாலேயோ என்னவோ, மகிழ்ச்சி
என்றால், ஒன்றாக கலந்துக் கட்டி
கொட்டம் அடிப்பதும், துக்கம் என்றால் அது
எல்லாருக்கும் ஆனது என்று கட்டிப்பிடித்து கண்ணீர் விடுவதுமாக எளிமையாகவே... அதே
நேரம் கண்ணுக்குத் தெரியாத பாச கயிறு ஒன்றின் அன்பான இறுக்கத்திலும் இருக்கிறோம்.
அது, என் அக்கா பாக்கியம்
போட்ட முடிச்சி!
போட்டோவில்
மந்தகாச புன்னகையோடு இருக்கும் கறுப்பழகிதான் அக்கா!
சிதனா
நாட்டின் முதல் ரயில் நிலையம் –
நீண்ட காலமாக கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சில
இடங்களை மனதுக்குள் நினைத்து வைத்திருந்தேன். அதில் ஒன்று நாட்டின் முதல் ரயில் நிலையம்.
போர்ட் வெல்ட் ரயில் நிலையமேதான்.
“அதைதான் எப்பவோ ஒடைச்சிட்டானுங்களே…” இப்படித்தான்
நிறையப் பேர் பதில் சொல்ல, குறைந்த பட்சம் அந்த ரயில் நிலையம் இருந்த இடத்தையாவது பார்க்க
வேண்டும் என்று ஆவலோடு இருந்தவளைத்தான், என் உறவினர் “தைப்பிங்கில் கோயில் சுற்றுலாவுக்கு
வருகிறாயா?” என்று அழைத்து சென்றது. உண்மையை சொல்ல வேண்டுமானால், தைப்பிங் என்றதும்
வருகிறேன் என்றதற்கான காரணமே ஏதாவது ஒரு அதிசயம் நடந்து என் ஆசை நிறைவேறி விடாதா எனும்
நப்பாசைதான்.
நால் ரோட் கோயிலில் இருந்த ஐயா திரு கோவிந்தன், கோவில்
வளாகத்தின் முன்னால் தெரியும் சாலைதான் அந்நாளைய முதல் ரயில் பாதை என்றபோது நம்பமுடியாத
அதிர்ச்சி எனக்கு. முன்னுக்கு தெரியுதே… அந்த ரோடா…. என்று நம்பாமல் கேட்டு உறுதிப்
படுத்திக் கொண்டபோது அத்தனை சந்தோஷம் எனக்கு. அவர் பழைய படம் ஒன்றை காட்டி அங்குதான்
முதல் ரயில் நிலையம் இருந்தது என்பதை எனக்கு உறுதிப் படுத்தினார். கையகலசாலை என்றாலும்
அதுவும் இரு வழியாக இருப்பது கொஞ்சம் அசெளகரியமாக இருந்தாலும் முடிந்த வரை சில படங்களை
க்ளிக் செய்தேன். பாருங்களேன்.
தைப்பிங், குவாலா செபத்தாங் இரண்டு பகுதிகளை இணைக்க
அமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையம் இது. மாட்டு வண்டியே பிரதான போக்குவரத்து அப்போது.
1890 ஆம் ஆண்டு வாக்கில் குளம்பு மற்றும் வாய் நோயால் மாடுகள் தாக்கப்பட்டு, பெருவாரியாக
மாண்டு போக, மாட்டு வண்டி வைத்திருந்தவர்கள் அதிக கூலி கேட்க ஆரம்பித்தனர். பிரிட்டிஷ்
அரசாங்கத்திற்கு இது பெரிய தலைவலியை உண்டுபண்ணியது. உரிய நேரத்தில் லாருட்டில் எடுக்கப்படும்
ஈயத்தினை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல சரியான போக்குவரத்து என்ன என்ற கேள்வியில் உருவானதுதான்
நாட்டின் இந்த முதல் ரயில்நிலையம்.
இந்த முதல் ரயில்நிலைய திறப்பு விழா அன்று நடைபெற்றதாக
கூறப்படும் சுவாரஸ்யமான வரலாற்றுப்பூர்வ தகவல் ஒன்றும் இருக்கிறது. முக்கியஸ்தர்கள்
அனைவரும் வந்து நிலையத்தில் காத்திருக்க, குவாலா செபாத்தாங்கிலிருந்து வர வேண்டிய ரயிலைக்
காணவில்லை. அதிக நேர காத்திருப்பிற்குப் பின்னர் வந்து சேர்ந்ததாம் அந்த ரயில். காரணம்
வெள்ளோட்டம் விட்ட அன்றே தண்டவாளத்தில் குறுக்கே புகுந்து விட்ட ஒரு யானையை அந்த ரயில்
மோதி, யானை அங்கேயே மாண்டுவிட்டதாம். இன்றும்
தைப்பிங் அருங்காட்சியகத்தில் அந்த யானையின் தலை வைக்கப்பட்டிருக்கிறது.
சரி. இந்த ரயில் சாலையை அமைத்தவர்கள் யார்? எந்த இனத்தவர்?
எங்கிருந்து வந்தார்கள்? தேடல் தொடர்கிறது
மலேசிய சித்தர்கள் ஓர் அறிமுகம் 2
சில மாதங்களுக்கு முன்பு பத்துமலையில் இருக்கும்
மெளன சுவாமிகளைப் பற்றி எழுதியிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நான் கண்டுணர்ந்த
இரண்டாவது சித்தரைப் பற்றி இங்கே தருகிறேன்.
ஓம் ஸ்ரீ சிவானந்த
அருளானந்த முனீஸ்வரர் ஆறுமுக சுவாமிகள் மடாலயம்
நால்ரோட் கோயில் எனப்படும் ஸ்ரீமுனீஸ்வரரை மூலவராக
கொண்டிருக்கும் தைப்பிங் ஓம் சக்தி சிவானந்த அருளானந்த முனீஸ்வரர் கோயிலின் தோற்றுனர்
எனப் போற்றப்படும் ஐயா ஸ்ரீ ஆறுமுக சுவாமிகளின் ஜீவசமாதி இக்கோயிலின் வளாகத்திலேயே
இருக்கிறது. ஐயா மிக குறுகிய காலமே இப்பூலோகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். 1946 ஆம்
ஆண்டு பிறந்தவர் 1986 ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். மொத்தமே நாற்பது வருடங்கள்தான்
வாழ்ந்திருக்கிறார். ஆனால் இன்றுவரை புகழோடு இருக்கிறார்.
அந்நாளைய வாழ்வியல் படி, போற்றோர்கள் ரப்பர் தோட்டத்
தொழிலாளர்களாக இருந்துள்ளனர். ஐயா ஆறுமுகம் அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.
சைக்கிளில் அவர் பள்ளிக்கு சென்றதையும் அவரது ஐந்தாம் படிவ தேர்ச்சியினைக் கண்டு, அரசாங்கமே
“கஸ்டம்ஸ்” இலாக்காவில் உயர் பதவியினை வழங்கிய தகவலையும் உடன் கோயில் நிர்வாகமே தனக்குறியது
என தெய்வ சேவையோடு பொதுமக்களின் நலனிலும் அக்கறை கொண்டவராக இருந்தார் எனும் செய்தியினையும்
எனது உறவினர் சகோதரர் திரு அருணகிரி என்னிடம் தெரிவித்தார்.
கோயிலில் சேவையில் இருக்கும் ஐயா திரு கோவிந்தன் அவர்களிடம்
பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறிய சில செய்திகள்: ஐயாவுக்கு ஜடாமுடி நீண்டு தரையில்
தொங்கும். இங்க வர்ற மக்களுக்கு அருள்வாக்கு கொடுத்திருக்கிறார். அவர் சொன்ன நல்ல வாக்குகள்
நிச்சயமாக பலித்திருக்கின்றன. அவர் அரூபமாக இருந்து வழிநடத்திய படிதான் இன்று இவ்வாலய
சுற்றுப்புறத்தில் இருக்கும் தெய்வ சிலைகள் எழுப்பப் பட்டிருக்கின்றன! அருள் வாக்கு
மட்டுமல்ல, இல்லையென்று வந்தவர்களுக்கு கையில் இருப்பதையும் வழங்கிய வள்ளலாகவும் இருந்திருக்கிறார்கள்.
அந்த சேவையை வேறு வழியில் கோயில் நிர்வாகம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. விருப்பப்படும்
பக்தர்கள் அங்கே விற்கப்படும் ஒரு கிலோ அரிசியை ஐந்து ரிங்கிட் கொடுத்து வாங்கி அதை
அன்னதான திட்டத்துக்கு வழங்கி விட்டு வரலாம்.
மிகச்சிறிய அளவிலேயே ஐயாவின் ஜீவசமாதி அமைக்கப்பட்டிருக்கிறது.
உள்ளே ஐயாவின் சுதை சிற்பத்தோடு, உடன் ஒரு வெள்ளை நிற சேவல் கோழி. (காரணம் புரியவில்லை).
வாயிலில் ஒரு பக்கம் சீரடி பாபா, மற்றொரு பக்கம் ராகவேந்திர சுவாமிகளின் சுதை சிற்பங்கள்
இருக்கின்றன. அங்கே சென்றதும் ஏற்படும் பரவசத்தினை எனக்கு சொல்லத் தெரியவில்லை. உணர்ந்தால்
மட்டுமே புரியும்.
ஐயாவின் ஜீவசமாதியின் முன் ஐந்து நிமிடங்களுக்கும்
குறைவாகத்தான் கண்மூடி அமர்ந்திருப்பேன்.
“உனக்கு என்னம்மா வேண்டும்..” மூலஸ்தானத்திலிருந்து வந்த கேள்வி என் பிரமையோ என்று
பட்டென கண்களைத் திறந்து மூலவரைப் பார்க்க, சிரித்த முகத்தோடு மீண்டும் அதே கேள்வியில்
புல்லரித்துப் போனது எனக்கு. “எனக்கு ஒன்றும் வேண்டாம் ஐயா. தேடி வந்திருக்கும் வரலாற்றுத்
தகவல்கள் கிடைத்தால் போதும்” என்று மனதுக்குள் பதில் சொல்கிறேன். “கிடைக்கும் போ… என்னைப்
பற்றி எழுது” என்று எனக்கு அருள் வழங்க குழந்தைப் பிள்ளையாய் நான் ஒரு ஐந்து நிமிடம்
என்னை மறந்து குதூகலித்ததை அங்கே பால் விற்கும் அம்மையாரும் அவர் மகளும் பார்த்துவிட்டு,
மேலதிக தகவலாக சொன்னதுதான், ஐயாவின் உடல் அங்கே அடக்கம் ஆகியிருக்கிறது என்பதும் மடாலயத்தின்
பின்னால் இருக்கும் மரம் இருநூறு வயதை கடந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறது எனும் செய்திகள்.
அவர்கள்தான் கோவிந்தன் ஐயாவிடம் என்னைக் கை காட்டி விட்டார்கள்.
“அப்படி என்னம்மா வரலாற்று செய்தியினை நீங்கள் தேடி
வந்தீர்கள்?” என்று என்னை விசாரித்த கோவிந்தன் ஐயாவிடம், “இங்கே முதன் முதலில் கட்டப்பட்ட
ரயில் நிலையம் இருக்கிறதே அதைப் பார்க்க வேண்டும்” என்கிறேன்.
“தோ பாருங்கம்மா… இதுதாம்மா ரயில் ரோடு அந்தக் காலத்துல…”
என்கிறார் கோவிந்தன் ஐயா.
நம்பாமல், “என்னங்கையா… முன்பக்கம் தெரியிதே அதா…?”
என்கிறேன்.
“ஆமாமா…. இங்கதான் ரயில் பாதை இருந்தது. அந்த ஸ்டேஷன்
கல்லுங்க கூட முன்னுக்கு இருக்கும் போய் பாருங்கம்மா” என்றார்.
வேறென்ன இருக்கிறது இன்னும் நான் சொல்வதற்கு? சிலவற்றை
பிறர் சொல்ல கேட்கும்போது நம்பமுடியாமல் தான் இருக்கும். அதை நாமே உணரும் வரை சூட்சமம்
புரியாது.
வாய்ப்பிருந்தால் ஒரு முறை தைப்பிங் நால்ரோட் கோயிலுக்குச்
சென்று வாருங்கள். மறவாமல் ஸ்ரீ ஆறுமுக சுவாமிகளின் ஜீவசமாதியில் ஐந்து நிமிடம் மெளன
பிரார்த்தனை செய்து விட்டு வாருங்கள். குருவருளே திருவருள்.
சிதனா
இரண்டு நாட்களுக்கு முன்பு
நெருங்கிய நட்பு வட்டத்தில் குடும்ப தலைவர் காலமானார். என் அண்ணன் பிள்ளை யூ.கே யில்
இஞ்சினியரிங் பட்டப் படிப்பு முடித்து விட்டு வந்த நேரம்தான், ஈப்போவில் இரட்டைத் தண்டவாள பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. என்னதான்
படித்திருந்தாலும், ஸ்குரு, நட்டு, போல்ட்டு என்று இந்த அப்ரண்டிசுக்கு
எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து வேலையை பழக்கி விட்டது மட்டுமல்ல, சொந்த பிள்ளையை போலவே நடத்தியதில் எங்கள் வீட்டு பிள்ளைக்கு அவர்
மேல் தனி பாசம். "அண்ண..." என்றுதான் நாங்கள் எல்லாருமே அழைப்பது அவரை .
(கூட்டாளிக்கு முறையில்லை). இந்த அண்ணனுக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டு
வருடங்களுக்கு முன்பு படுத்த படுக்கை ஆகிவிட்டார். அவ்வப்போது ஒரு எட்டு எங்கள்
வீட்டு மக்களும் போய் பார்த்து விட்டுத்தான் வந்துக் கொண்டிருக்க, இரண்டு வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடம் என்ற தகவலின் பேரில்
என் அண்ணன் மகன், மகள் மருமகன் எல்லாருமே சென்று
பார்த்து விட்டு வந்த பின் காது கொடுத்து கேட்க முடியாத செய்திகள் பின்னாலேயே
வந்தது.
அந்த அண்ணனின் இளைய பெண், என் அண்ணன் பிள்ளையிடம் சொன்னாளாம்:
"வீட்டுல 70 நாய் வளர்க்கிறேன். நீ மாசா மாசம் ஆயிரம் ரிங்கிட் அனுப்பு.
நாய்க்கு சோறு போட்ட புண்ணியம் உன் குடும்பத்துக்கே புண்ணியமா இருக்கும்"
"என்னக்கா... அப்பா இப்படி
இருக்காரு.... நீங்க நாயைப் பத்திி பேசறீங்க...?"
"இது எதுக்கு இன்னும்
இருந்துக்கிட்டு..... வேஸ்ட்லா...."
வீட்டில் என் அண்ணி, மருமகள், அண்ணன் பெண் எல்லாருமே சொல்லி
சொல்லி மாய்ந்து போனார்கள்.
எப்படி மனிதர் அவர்? அவருக்கு இப்படி ஒரு பிள்ளையா? என்று யோசிக்கும் போதே, மனதில் ஒரு நிம்மதி பெருமூச்சு. (உண்மை)
காசு பணம் என்று பெரிதாக
இல்லாவிட்டாலும், தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அத்தை, சித்தப்பா, உடன்பிறப்புகள், குழந்தைகள் என்று இறுக்கி இறுக்கி பிடித்து வைத்திருக்கும் உறவுகள்
வாய்த்திருப்பதில் நான் கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவள்
இருப்பினும் ஒரு கேள்வி
நாய்க்கும் மனிதர்களுக்கும்
வித்தியாசம் இல்லையா?
பெற்றவர்கள் மேல் கூட அக்கறையோ
பாசமோ இல்லையென்றால், பின்னர் யாரை நேசிக்கும் அந்த மனம்?
காலமெல்லாம் உறவுகள் இல்லாமல்
யாராலும் வாழ்ந்து விடல் சாத்தியமா?
பதினாறு பேறுகளில் பிள்ளைப் பேற்றினை பெருமை பட பேசுமே நம் தமிழ் சமுதாயம். இன்றைய
இளம் தலைமுறையை நினைத்தால், "என்னே பிள்ளை பேறு..???" என்று யோசிக்க வைக்கிறதே.
சுற்றமும் சூழமும் நமது குடும்ப
பின்னனியில் அமைவதுதானே. அப்பனுக்கு செய்யாத பிள்ளை, பின் வேறு யாருக்கு செய்யும்? எந்த சுற்றம் இந்த பிள்ளையை தன் சொந்தம் என கூறும்?
குடும்ப உறவுகளை புறக்கணித்து வேறு
யாரை நாம் சம்பாதிக்க போகிறோம்? அப்பா அம்மாவே
வேண்டாம் என்பவர்களுக்கு வேறு யாரை அனுசரிக்க முடியும்?
நாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவம்
கூட பெற்றவர்களுக்கு தர முடியாது என்றால், அந்தப் பிள்ளை சுயபிரக்ஞையில்தான் இருக்கிறாளா? இவள் அவர்கள் பெற்ற பிள்ளையா?
ஒரு வேளை இது அவள் தவறு இல்லையோ?
பணத்தை மட்டும் கொடுத்து
அப்புறப்படுத்தப்பட்டவளோ?
ஐயோ! நாங்கள் பணத்தால் வளர்ந்த
பிள்ளைகள் இல்லையே! பெற்றவர்கள் அருகே அமர்ந்து அவர்கள் பேசுவதை கூட கேட்க
முடியாதே.
"கதை கேட்ட நாய செருப்பால அடி....
ஓடு...!" என்றுதானே விரட்டப்பட்டு வளர்ந்தோம். பாசம் அற்றுப் போகவில்லையே.
பின் எப்படி இந்த காலத்துப்
பிள்ளைகள் இப்படி??!!
பணம் பணம் என்று ஓடும் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு உறவுகளின் மேன்மை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்; அவர்களுக்கு எத்தனை வயதானாலும்.
வாழும் காலம் வரை குடும்ப உறவுகளின்
பிடியில் வாழ்வதே நிறைவான வாழ்வு என்று புரியவையுங்களேன்.
அட போம்மா! எந்த காலத்துல இருக்க நீ? இதெல்லாம் பழைய சங்கதி என்கிறீர்களா?
அல்லது
வயதுக்கு வந்த பின்னும் கீழே
விழுந்து ஓ வென அழுதவளை, "என்னப் பெத்த அம்மா.." என்று
ஓடோடி வந்து தூக்கி அணைத்துக் கொண்ட அப்பாவுக்கு பிள்ளையாய் பிறந்து விட்டதால், இப்படி அதிகமாய் அலட்டுகிறேனோ?!
=======================
சிதனா
No comments:
Post a Comment